

ஆந்திர மாநிலம், அரசவல்லியில் புகழ்பெற்ற சூரிய நாராயணன் கோயில் உள்ளது. இந்த ஆன்மீகத்தலம் சூரிய பகவானின் பிரசித்தி பெற்ற இரண்டு பெரிய கோயில்களில் ஒன்றாக உள்ளது. இது ஆந்திராவின் வடக்குப் பகுதி கடற்கரையோரத்தில் உள்ள ஶ்ரீகாகுளம் நகரத்தில் இருந்து சற்று நடைபயண தூரத்தில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயிலை 7 ஆம் நூற்றாண்டில் கலிங்க மன்னர் தேவேந்திர வர்மா கட்டினார். இந்த கோயில்(Arasavalli Temple) ஒரிசா மாநில பாணியில் வடிவமைக்கப் பட்டுள்ளது. பின்னர் சோழர்கள், கஜபதிகள் மற்றும் பிற அரசர்கள் கோயில் வளாகத்தை விரிவு படுத்தினர்.
கோயில் தலவரலாறு:
பத்மபுராணத்தின்படி, காசியப முனிவர் தன் மகன் சூரியனின் சிலையை இந்த பகுதியில் நிறுவினார் என்று கூறப்படுகிறது. கிரகங்களின் ராஜாவான சூரியனின் சிலையை மனித குலத்தின் நலனுக்காக காஷ்யப் முனிவர் பிரதிஷ்டை செய்துள்ளாக கூறப்படுகிறது.
கோயிலின் தல புராணத்தின்படி இங்குள்ள சூரிய பகவானின் சிலையை தேவர்களின் தலைவனான இந்திரன் பிரதிஷ்டை செய்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த கோயிலில் சூரிய பகவானை சூரிய நாராயண சுவாமி வரு என்று அழைக்கின்றனர்.
ஒரு முறை இந்திரன் சிவபெருமானை தரிசிக்க கைலாயம் சென்றார். அந்த நேரம் உமையுடன் இருந்த சிவபெருமான், 'தன்னை சந்திக்க வரும் எவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம்' என்று நந்தியிடம் கட்டளை இட்டுள்ளார். கைலாயம் வந்த இந்திரன் சிவனை தரிசிக்க முயன்ற போது, நந்தி அவரை உள்ளே விடாமல் தடுத்தார். தேவேந்திரன் என்ற ஆணவத்தில் இருந்த இந்திரன், நந்தியை அத்துமீறி உள்ளே நுழைய முயற்சி செய்தான்.
கோபமடைந்த நந்தி தன் காலால் இந்திரன் நெஞ்சில் எட்டி உதைக்க, இந்திரன் பலத்த காயமுற்று நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே சரிந்து கிடந்தான். நந்தியின் உதையில் மயக்கமடைந்த இந்திரன் அங்கேயே சிறிது நேரம் தூங்கிவிட்டான். அப்போது இந்திரன் கனவில் ஒரு அசரீரி வந்து, 'சூரியனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்து வந்தால், உன் மார்பில் ஏற்பட்ட வலியும், காயமும் மறையும்' என்று கூறியது. சுயநினைவு வந்த இந்திரன், கனவில் வந்ததை போல, சூரியனுக்கு கோயில் கட்ட முடிவு செய்தான்.
கனவை தொடர்ந்து இந்திரன் தான் மயங்கிய இடத்தில் இருந்து மூன்று கைப்பிடி மண்ணை எடுக்க, அந்த இடத்தில் சூரிய பகவான் தனது உஷா, சாயா, பத்மினி ஆகியோருடன் சிலையாக காட்சி தந்தார். பின்னர் அந்த சிலைகளை இந்திரன், அரசவல்லியில் நிறுவி வழிபட்டு குணமடைந்தார்.
இங்கு இந்திரன் நீராடிய 'இந்திர புஷ்கரணி' உள்ளது. இதில் நீராடினால் உடல் வலிகள், சரும நோய்கள் குணமாகும் என்று பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வ செழிப்பையும் அளிக்கும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.
கோயில் அமைப்பு:
கோயிலின் கருவறையில் சூரிய நாராயணன் தனது மனைவியர்களுடன் காட்சி தருகிறார். இந்த கோயிலில் சிவலிங்கம், புவனேஸ்வரி தேவி, விஷ்ணு, ஆஞ்சநேயர், கால பைரவர் மற்றும் சுப்பிரமணியர் ஆகியோருக்கு தனிச் சந்நிதிகள் உள்ளன. இந்த கோயிலில் நவக்கிரகங்களை கண்ணாடி ஜன்னல்களைக் கொண்ட மண்டபத்தில் வைத்துள்ளனர்.
பிரதான கருவறை ஒரு பிரகாரத்தால் சூழப்பட்டுள்ளது. வருடத்திற்கு இரண்டு முறை, பிப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களில் சூரியக் கதிர்கள் மூலவரின் பாதத்தில் விழும் வகையில் இந்தக் கோயில் கருவறை கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் முக்கிய திருவிழாவாக 'ரதசப்தமி' கொண்டாடப்படுகிறது.
மகா சிவராத்திரி, ஜன்மாஷ்டமி, தசரா, தீபாவளி மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இந்த கோயிலுக்கு வந்து பக்தர்கள் சூரியனை வழிபட்டு வந்தால், தங்கள் நோய்கள் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளிலிருந்து விடுபட முடியும்.