நீங்க கோபக்காரரா? ஒருமுறை திரு இடும்பாவனம் போய்ட்டு வாங்க... அப்புறம் பாருங்க!

சற்குணநாதேஸ்வரர் கோயில்
சற்குணநாதேஸ்வரர் கோயில்
Published on

ப்பூவுலகில் பிறந்த அனைவருக்கும் கோபம் என்ற குணம் இருக்கும். கோபப்படாத மனிதரே இல்லை எனலாம். கோபம் மனிதரிடம் இருந்தால் 
அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கும். உடலில் பாதிப்புகள், மன அழுத்தம் உண்டாகும்.

இதற்கு சாந்தக் குணத்தை அளிக்கும் தலமாக விளங்குகிறது திரு இடும்பாவனம். இக்கோயில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் தொண்டியக்காடு செல்லும்  வழியில் உள்ளது. இறைவன் பெயர்: சற்குணநாதேஸ்வரர்; இறைவி பெயர்: மங்கள நாயகி.

கோயில் அமைப்பு:

பெரிய பிரகாரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. ராஜ கோபுரத்துக்கு நேராக பிரம்மாண்டமான  சபா மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் கருவறை என இறைவன் சன்னிதி உள்ளது. மூலஸ்தானத்தில் சுயம்பு லிங்கமாக கருணையே வடிவமாக ஸ்ரீ சற்குணேஸ்வரர் காட்சி தருகிறார். சத்வ (சாந்த) குணம்கொண்ட இவரை வழிபட்டால் அமைதியும்,  இடர்களும் நீங்கி நல்வாழ்வும் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

தெற்கு நோக்கி மங்கள நாயகி அம்பாள் நின்ற கோலத்தில் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். சர்வ மங்களங்களையும் அருளும் வல்லமை தருபவராக காட்சி அளிக்கிறார். இங்கு வெண்மை நிறத்தில் சுவேத விநாயகர் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக விளங்குகிறார். அழகியத் தூண்கள், பின்புற வரிகையில் கஜலட்சுமி, சனீஸ்வரர், நவக்கிரகங்கள், கணபதி சன்னிதி, வள்ளி தெய்வானையுடன் கந்தன் சன்னிதி வடபுறத்தில் அமைந்துள்ளன.

ஆலயத்தின் எதிரே எமன் ஏற்படுத்திய பிரம்மத் தீர்த்தம், அகத்தியர் உண்டாக்கிய அகத்தியர் தீர்த்தம் தலத் தீர்த்தமாக உள்ளன.

இங்கு தல விருட்சம் வில்வம் விளங்குகிறது.

தல வரலாறு

பிரம்மதேவனுக்கு அடிக்கடி கோபம் வர, தனது குணத்தை மாற்றி அருளுமாறு சிவனிடம் வேண்டினார். இறைவனும் அசரீரியாக இடும்பாவனம் தலத்திற்குச் சென்று தன்னையும், அம்பிகையையும் பூஜித்தால் பலன் கிடைக்கும் எனக் கட்டளையிட்டார்.

இதையும் படியுங்கள்:
செய்வோம்; சாப்பிடுவோம்... சத்துகளையும் தெரிந்து கொள்வோம்!
சற்குணநாதேஸ்வரர் கோயில்

அதன்படி இடும்பாவனம் தலம் வந்த பிரம்மா வில்வ மரத்தடியில் நீண்ட காலம் தவம் இருந்தார். பிரம்மாவின் தவ வலிமை கண்டு, சிவன், அம்பிகை, விநாயகர், முருகனுடன் தரிசனம் தந்து சாத்வீகமான சாந்தக் குணம் தந்தருளினார்.

பிரம்மா சிவ பெருமானை வழிபட்டு, சாந்தக் குணம் பெற்றதால் எம்பெருமான் சற்குணநாதேசுவரர் என்று அழைக்கப்படுகிறார்.

இத்தலம் வந்து சற்குணநாதேசுவரரை வழிபட்டால் கோபம் நீங்கி சாந்த குணம் பெற்று நலமாக வாழலாம். ஒரு தடவை இக் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com