ஸ்ரீமத் குமர குருதாச சுவாமிகள் எனப்படும் பாம்பன் சுவாமிகள், கடந்த நூற்றாண்டில், குமரக்கடவுளின் தரிசனம் கிடைக்கப் பெற்றவர். இவர், இராமேஸ்வரம் அருகில் பாம்பனில், 1850 – 1852 இல் மார்கழியில் பிறந்ததாகக் கூறுவர்.
சுவாமிகள் தமிழ்க் கல்வியுடன், சிலம்பம், மல்யுத்தம், நீச்சல், பூத்தொடுத்தல் எனப் பல கலைகளையும் கற்றறிந்தார். இவர் அருணகிரிநாதரைத் தன்னுடைய ஞான குருவாக ஏற்றுக் கொண்டார்.
பாம்பன் சுவாமிகளை 'உபய அருணகிரிநாதர்' என்றும் குறிப்பிடுவர். இவருடைய இயற்பெயர் அப்பாவு. சிறு வயது முதலே கந்தர் சஷ்டி கவசத்தை ஒரு நாளைக்கு 36 முறை ஓதிவந்த அடிகளார், தேவராய சுவாமிகள் போலத் தானும் முருகன் மேல் தமிழில் கவி பாட வேண்டும் என்ற ஆர்வத்தை சிறு வயது முதலே கொண்டிருந்தார்.
குமரகுருதாச சுவாமிகள் ஆசுகவி. ஒரு பொருளைக் கொடுத்தவுடன் அந்தப் பொருள் மீது பாடல் புனையும் ஆற்றலுடையவர். 12 வயதிலிருந்தே கவி பாடும் திறனிருந்த சுவாமிகள் பாடிய முதல் பாடல், 'கங்கையை சடையிற் பரித்து' என்று தொடங்கும் முருகனைப் போற்றி எழுதிய பாடல்.
தினமும் உண்பதற்கு முன்னர் ஒரு பாடல் எழுத வேண்டுமென்ற முடிவுடன் 100 பாடல்கள் எழுதினார். சேது மாதவ ஐயர் என்பவரிடம் சடாஷர மந்திரம் உபதேசம் பெற்ற அடிகளார், அவருடைய அறிவுரையின் படி வடமொழியைக் கற்றார். தன்னுடைய பாடல்களில் வேதாகம உபநிடதக் கருத்துகளை எடுத்துக் காட்ட அவரின் வடமொழிப் புலமை உதவியது.
பிறப்பினால் உயர்வு தாழ்வில்லை என்பதை சாமவேதம் குறிப்பதாக ‘பரிபூரணாந்த போதம்’ என்ற நூலில் அடிகளார் விளக்கியுள்ளார். தமிழ்த் தென்றல் திரு.வி.க., அடிகளாரைப் பற்றித் தன்னுடைய வாழ்க்கைக் குறிப்பில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
“குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த போது நாடோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வர். அவருடன் யானும் போவேன். அடிகள் வடமொழி உபநிடக் கருத்துகளைத் தமிழில் விளக்குவர். சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவர்.”
1878ஆம் ஆண்டில் மணம் புரிந்து கொண்ட அடிகளாருக்கு மூன்று மகவுகள். தந்தையாரின் மறைவிற்குப் பின்னர், குடும்ப பாரத்தைச் சுமக்கும் படி நேர்ந்தது. அப்போது, இன்னல்கள் களைய ‘சண்முக கவசம்’ இயற்றினார். 12 உயிரெழுத்துகள், 18 மெய்யெழுத்துகள் என்று எழுத்திற்கு ஒன்று என்று முப்பது பாடல்கள். முதல் பாடல் உயிரெழுத்து ‘அ’ வில் ‘அண்டமாய்’ என்று ஆரம்பித்து, கடைசிப் பாடல் மெய்யெழுத்து ‘ன’ வில் ‘இனம்’ என்று ஆரம்பிக்கும் பாடலுடன் முடிகிறது. இந்த பாடல் இயற்றிய பிறகு அவருடைய இன்னல்கள் நீங்கின.
1894ஆம் ஆண்டு இராமநாதபுரம் அருகில் பிரப்பன்வலசை என்ற ஊரில் தியான யோகத்தில் ஈடுபட்டார். முப்பத்தைந்தாவது நாளில் “தவத்திலிருந்து எழுக” என்ற குரல் கேட்டு யோகத்தை முடித்துக் கொண்ட சுவாமிகள், 1895ஆம் ஆண்டு துறவு பூண்டார். சுவாமிகளுக்கு முருகப் பெருமானே உபதேசம் நல்கியதாகவும், அவரது கனவில் தோன்றி வழிநடத்துவதாகவும் அவருடைய சீடர்கள் நம்புகின்றனர். முருகன் வழிகாட்டலில் சென்னை வந்த சுவாமிகள், அருகிலிருந்த தலங்களுக்குச் சென்று வழிபட்டார்.
டிசம்பர் 27, 1923ஆம் ஆண்டு, சென்னை தம்புச்செட்டித் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, குதிரை வண்டிச் சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறி எலும்பு முறிவு ஏற்பட்டது. சென்னை பொது மருத்துவ மனை ஆங்கிலேய மருத்துவர்கள் “வயது 73 என்பதால், குணமடைவது கடினம்” என்றனர். தினமும் சண்முக கவசம் பாடி வந்த சுவாமிகள் முன்னர், மயில் மேல் முருகன் காட்சியளிக்க, அவர் குணமடைந்தார். இது நடந்தது, ஜனவரி 6, 1924, மார்கழி மாதம், வளர்பிறை, பிரதமை திதி. ஒவ்வொரு வருடமும், இந்த நாள் ‘மயூர வாகன சேவை’ விழாவாக, பாம்பன் சுவாமி கோயில் திருவான்மீயூரில் கொண்டாடப்படுகிறது.
சுவாமிகள், சிகிச்சைக்காக இருந்தது, சென்னை பொது மருத்துவமனையில் மன்றோ வார்ட் (11வது வார்ட்), 11வது படுக்கையில். அந்தப் படுக்கையின் அருகில் சுவாமிகளின் படம் மாட்டப்பட்டுள்ளது. முருகப் பெருமான் காட்சி தந்து, அறுவை சிகிச்சை இல்லாமல், சுவாமிகள் குணம் அடைந்த அற்புதத்தை, பொது மருத்துவமனையில் கல்வெட்டில் பதிவிட்டுள்ளார்கள்.
மே மாதம் 30ஆம் தேதி, 1929ஆம் வருடம் காலை 7:15 மணிக்குச் சுவாமிகள் பாம்பனில் சமாதியடைந்தார். பின்னாளில் அவருடைய சீடர்களால், திருவான்மியூரில் சமாதி அமைக்கப்பட்டது.
சுவாமிகள் எழுதிய மொத்தப் பாடல்கள் 6666.
- கே.என்.சுவாமிநாதன், கனடா