குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் பெரிய தசராவிழா நடைபெறும் கோவில். தென்னிந்தியாவில் மைசூர் தசரா விழாவிற்கு அடுத்தபடியாக உள்ள இடத்தில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் உள்ளது என்றால் நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய விஷயமாகும்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது குலசேகரப்பட்டினம். 300 ஆண்டுகள் பழமையான சக்தி தலமாகும். முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரர் இருவரும் வடக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்கள். பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனுக்கு முத்தாரம்மன், வியாபாரம் பெருகவும் நல்லாட்சி அமையவும் காட்சி கொடுத்ததால் இந்த ஊர் அந்த மன்னனின் பெயரான குலசேகரப்பட்டினம் என அழைக்கப்படுகிறது. அதற்குப் பின்னால் குலசேகரப்பட்டினம் வியாபாரத்தில் செழித்து விளங்கியதாக கூறப்படுகிறது.
பாண்டிய மன்னர்கள் அரபு நாட்டிலிருந்து குதிரைகளை இங்குள்ள துறைமுகத்தின் வழியாக இறக்குமதி செய்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள இறைவன் உருவம் அருவமற்ற நிலையில் காணப்படுகிறார். இங்கு அம்மையும் அப்பனும் ஒரே பீடத்தில் அமர்ந்து காட்சி தருகிறார்கள்.
இங்கு எட்டு காளிகள் உள்ளனர். அஷ்ட காளிகளுக்கும் முதன்மையாக முத்தாரம்மன் விளங்குகிறார். இந்த அம்மனை வழிபட்டால் சகல நோய்களும் தீரும். வியாபாரம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. இங்குள்ள இறைவனும் இறைவியும் தங்கள் திருமேனியை தாங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.
ஆலயத்தின் கீழ் புறம் வங்க கடல் உள்ளது. அம்மன் கையில் திரிசூலம் உடுக்கை காணப்படுகின்றன. ஆலயத்தின் முன்பாக 32 அடி உயரத்தில் கொடி கம்பம் உள்ளது. தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தசரா விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். மைசூர் தசரா விழாவிற்கு இணையாக அடுத்த இடத்தில் இங்கு தசரா விழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தசரா விழாவின் போது பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேஷங்கள் போட்டு இக்கோவிலுக்கு வருகை தருவார்கள். பத்தாவது நாள் சூரசம்காரம் சிறப்பாக நடைபெறும். பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து காணிக்கைகள் பெற்று அந்த காணிக்கைகளை தசரா விழாவின் போது கோவில் உண்டியலில் சேர்ப்பது வழக்கம். இது ஒருவகையான நேர்ச்சை ஆகும்.
விரதம் இருப்பதற்கு முன்பாக பூசாரி கையால் காப்பு கட்டி கொள்வார்கள். இங்குள்ள பூசாரிகள்தான் பக்தர்களுக்கு யார் யார் என்ன வேஷம் போட வேண்டும் என்பதை அருள் வாக்கு மூலம் சொல்வார்கள். (சமீப காலமாக பக்தர்கள் அருள்வாக்கு கேட்காமல் அவர்களாகவே இஷ்டப்பட்ட வேடம் அணிந்து வருகிறார்கள்.) கடன் வியாபார பிரச்சனைகள், வழக்கு, குடும்ப பிரச்சினைகள் குழந்தை பாக்கியம் வேண்டி என இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஏராளம். இங்கு நடைபெறும் தசரா விழாவை பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.