
மகாலட்சுமி தாயார் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி, மங்கலம் ஆகியவற்றின் உருவமாக இருக்கிறார். அதேநேரம் ஸ்ரீ மகாலக்ஷ்மி எந்த ஒரு இடத்திலும் நிலையாக தங்குவதில்லை. அவள் எப்போதும் நிலையில்லாமல் இருக்கிறாள். எங்கே செல்வது என்ற நோக்கத்துடன் எப்போதும் சஞ்சலத்துடன் இருப்பதால், இவள் ‘சஞ்சலா’ என்றும் அழைக்கப்படுகிறாள். மகாலட்சுமி தேவியின் ஒரே இடத்தின் தங்காத பண்பின் பின்னால் மிகப்பெரிய வாழ்வியல் பாடம் ஒன்று உள்ளது. அது செல்வத்தின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது.
இந்து மத சாஸ்திரங்கள் மகாலட்சுமி குடியிருக்கும் இடங்கள் பற்றியும், குடியிருக்க விரும்பும் இடங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றன. அவை மகாலட்சுமியை ஈர்க்க என்னென்ன செயல்கள் செய்ய வேண்டும்? என்னன்ன குணநலன்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றன. பொதுவாக, நல்ல எண்ணமும் தூய்மையான மனதினை கொண்டிருப்பவரிடம் குடியிருக்க மகாலட்சுமி எப்போதும் விரும்புவாள்!
வெளிச்சம் நிறைந்த வீடு, தூய்மையான வாசல்புறம், அசுத்தம் இல்லாத தெருக்கள், தூய்மையான அறைகள், துளசி, சந்தனம், ஊதுபத்தி, சாம்பிராணி வாசனைகள் சூழ்ந்த இடங்களில் வசிக்கவே எப்போதும் மகாலட்சுமி தேவி விரும்புகிறாள்.
மாலை நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். வீட்டில் எவ்வளவு வெளிச்சம் இருக்கிறதோ அந்த அளவிற்கு செல்வம் வந்து சேரும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இது போன்ற இடங்களுக்குத்தான் லட்சுமி தேவி வருவாள்! இன்சொற்கள் பேச்சில் நிறைந்த மனிதர்கள், விசாலமான அறிவு, தாராள மனம், நேர்மை, சத்திய சிந்தனை, உதவும் குணம் ஆகியவற்றை கொண்ட மணிதரிடத்தில் மகாலட்சுமி தேவி வசிக்க விரும்புகிறாள்!
தூய்மையற்ற தெரு, இருண்டு கிடக்கும் வீடு, அசுத்தமாக வாசல், சுத்தமில்லாத அறைகள் கொண்ட வீட்டில் மகாலட்சுமி தாயார் வசிப்பதில்லை. மாலை நேரத்தில் சிக்கனம் கருதி வீட்டில் விளக்கு ஏற்றாதவர்கள் வீடு, கரண்ட் பில்லை சேமிக்கிறேன் என்று வாசல் விளக்கை அணைத்து விட்டு, ஒளி குறைந்த விளக்குகளை வைத்திருப்பவர்கள் வீட்டில் லட்சுமி தேவி நுழைய விரும்புவதில்லை. கஞ்சன், நேர்மையற்ற மனிதன், இரக்க குணம் இல்லாதவர்களிடம் செல்வம் அதிக காலம் தங்குவதில்லை. அவர்களிடம் இருப்பது எல்லாம் ஒருநாள் போய்விடும். இதுபோன்ற இடங்களில் மகாலட்சுமி தாயார் தங்க விரும்புவதும் இல்லை.
துளசியும் மகாலட்சுமியும்: துளசி இருக்கும் வீட்டில் மகாலட்சுமி தேவி குடியேற விரும்புவாள். இந்தப் புனித செடியின் நறுமணத்தால் செல்வத்தின் அதிபதி ஈர்க்கப்படுகிறாள். துளசி செடிக்கு நீர் விட்டு அதன் அருகில் ஒரு விளக்கு ஏற்றி, அதற்கு அருகில் ஊதுபத்தியினை ஏற்றி வைத்தால், அந்த நறுமணத்தில் மகாலட்சுமி தேவி அந்த இடத்தை நோக்கி தேடி வந்து அமர்வாள்! துளசியை வழிபடுவதும் மகாலட்சுமி தேவியின் அருளைப் பெறுவதற்கு ஒரு எளிய செயலாகும்.
மகாலட்சுமி தாயாரின் நிலையற்ற தன்மை: மகாலட்சுமி தேவியின் நிலையற்ற தன்மைக்குக் காரணம் செல்வம் அனைவரிடமும் செல்ல வேண்டும் என்பதுதான். ஒருவரின் கர்மாவை பொறுத்து அவரவருக்கு கடவுளின் அருள் கிடைக்கிறது. அதேநேரம் சில நற்குணங்கள் செல்வத்தை ஈர்க்கும் செயலாக இருக்கிறது. மகாலட்சுமி தேவி எப்போதும் ஒரு நதியை போல ஓடிக் கொண்டிருக்கவே விரும்புகிறாள்.
செல்வமானது ஒரே இடத்தில் குவிந்து கிடப்பது மற்றவரை வறுமையில் தள்ளும் செயலாக மாறும். செல்வமானது அனைவருக்கும் கிடைக்க வேண்டியது. இதனால் மகாலட்சுமி தேவி தொடர்ந்து ஒரே இடத்தில் தங்குவது இல்லை. எல்லோருக்கும் செல்வம் ஒரு காலக்கட்டத்தில் கிடைக்கிறது. ஒருசிலர் தங்கள் வாழ்க்கையின் முழுத் தேவைக்காக அதை சேமித்து வைக்கின்றனர். பலரோ, செல்வம் எப்போதும் தமக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் என்று நினைத்து அதை செலவு செய்து விட்டு, பின்னர் தவிக்கின்றனர். மகாலட்சுமி தேவி வாசம் செய்வதற்கு ஏற்ற மாதிரி வீட்டையும் மனதையும் சுத்தமாக வைத்திருங்கள். செல்வத்திற்கு மட்டுமல்ல, மன மகிழ்ச்சிக்கும் மகாலட்சுமி தேவிதான் அதிபதி!