புரட்டாசி மாதம் என்றலே எல்லா பெருமாள் கோவில்களில் உற்சவம்தான், கோலாகலம்தான். இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒரு கோவில் – நைனாமலை வரதராஜப் பெருமாள் கோவில்.
கொங்கு நாட்டின் புகழ்பெற்ற வைணவத் தலம் இது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதிக்கு அருகே, காளப்ப நாயக்கன் பட்டிக்குப் பக்கத்தில் உள்ள இந்தக் கோவில் பெருமாளை தரிசிக்க, செங்குத்தான மலைமீது நாம் நடந்து செல்ல வேண்டும்.
அது என்ன நைனாமலை?
இந்த மாவட்டத்தில் ஆதியிலிருந்து தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். அதோடு நாயக்க மன்னர்கள் இங்கே ஆட்சி புரிந்திருக்கிறார்கள். அதனாலேயே சில தெலுங்கு வார்த்தைகள் அப்படியே பழக்கத்தில் வந்திருக்கின்றன அந்த வகையில் நைனா என்றால் தந்தை என்று பொருள். கடவுளை தந்தையாக வழிபடும் சம்பிரதாயப்படி இந்தப் பெருமாளையும் நைனா என்றழைத்து, இவர் தங்கும் மலையை நைனாமலை என்றும் போற்றி வருகிறார்கள், பக்தர்கள்.
இதுதவிர, இம்மலையில் பல முனிவர்கள் தவம் இயற்றி, வரதராஜப் பெருமாளை தரிசித்து இறைப்பணி ஆற்றி வந்தார்கள் எனவும் அவர்களில் ஒருவரான கன்மநைன மகரிஷி இந்தப் பெருமாளுக்கு பல கைங்கர்யங்களைச் செய்து நிறைவாக, இம்மலை மீதே சமாதி கொண்டதாலும் இம்மலை நைனாமலை என்று பெயர் கொண்டதாகவும் சொல்வார்கள்.
சரிவான தோற்றம் கொண்டிருக்கும் இந்த மலை சிகரத்தை அடைய 3 கிலோமீட்டர் உயரத்துக்கு, அகலம் குறைவான 3700 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். மலை முகடு பகுதி முழுவதையும் கோவில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இது சேந்தமங்கலம் பகுதியை ஆண்ட ராஜகம்பளத்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த ராமச்சந்திர நாயக்கரால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
நான்கு யுகங்களாக இந்த மலைக்கோயில் நிலைத்திருக்கிறது என்கிறார்கள். அதனாலேயே இந்திர ஜாலம், பத்ம ஜாலம், யாதவ ஜாலம், நைனா ஜாலம் என்று இந்த யுகங்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். மலையில் 108 தீர்த்தங்கள் இருந்தன; உரிய பராமரிப்பின்றி அவற்றில் மூன்று மட்டுமே இப்போது எஞ்சியிருக்கின்றன. நல்ல வேளையாக பெருமாள் அருளால் இந்த மூன்றும் கடுமையான பஞ்ச காலத்திலும் வற்றாத நீர்ச் சுரபியாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.
கோவிலில் வரதராஜப் பெருமாள், தாயார் குவலயவல்லியுடன் அருட்காட்சி நல்குகிறார். மகா மண்டபத்தில் ராமர்-சீதை-லட்சுமணன், நவநீத (வெண்ணெய்) கிருஷ்ணன், நரசிம்மர், வீர ஆஞ்சநேயர், மன்மதன், ரதி, ஐயப்பன் மற்றும் தசாவதார சிற்பங்களும் அருள் பெருக்குகின்றன.
புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து, அம்மாத சனிக்கிழமை நாட்களில் மலையேறி பெருமாளை தரிசிக்கும் சில பக்தர்கள் அவருக்கு காய்கறிகள் படையலிட்டு, வீட்டிற்குத் திரும்பி, பெருமாள் அருள் பெற்ற அந்தக் காய்கறிகளை சமைத்து உண்கிறார்கள்.
கொங்கு நாடு மட்டுமன்றி, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வசிக்கும் பல நூறு பக்தர்கள் இந்த வரதராஜப் பெருமாளை புரட்டாசி மாதத்தில் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதன் சந்தை இருக்கிறது. இங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் நைனாமலை அமைந்துள்ளது.
சேந்தமங்கலத்திலிருந்து வருவதானால் 5 கிலோமீட்டர். நாமக்கல்லிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவு.