
மன்னர்கள் காலத்தில் போக்குவரத்திற்கும், படைகளை வலுப்படுத்தவும் தேர்களை பயன்படுத்தினர். பின், அவை ஆன்மீக தெய்வீக உற்சவங்கள் உலா வருவதற்காக பயன்படுத்தப்பட்டன.
கிமு 2500 கால கட்டத்தில் சிந்து சமவெளிப் பகுதியில் தேர்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
சில மன்னர்கள் தேர்களின் மீதுள்ள பற்றால் தேர்வான்கிள்ளி, நெடுந்தேர் செழியன், தேர்வான் மலையன் என தங்களது பெயரை தேர்யுடன் சேர்த்துக் கொண்டனர்.
தற்போது தேர் என்பது கோயில்களில் கடவுளர்களை ஊர்வலம் எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் ஒரு ஊர்தி ஆகும். தேரின் பீடம் மரத்தால் ஆனது, மேலும் அது முழுவதும் மரச்சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
திருவிழா நாட்களில் பக்தர்கள் தேர் இழுத்து ஊர்வலம் செல்வர்.
தேர், அரி, இயந்திரம், இரதம், எந்திரம், கவரி, குயவு, கூவிரி, கொடிஞ்சி, சயந்தனம், திகிரி, விமானம், வையம் போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
தேர்களில் மரத்தேர், சித்திரத்தேர், வைரத்தேர், தங்கத்தேர், வெள்ளித்தேர், சட்டத்தேர், சகடைத்தேர், தெப்பத்தேர் என பல்வேறு தேர்கள் உள்ளன.
தேரை உருவாக்க எண்ணெய் சத்துள்ள இலுப்பை, ஆக்கை, வேங்கை, மகிழம், வாகை, சந்தனம், கருமருது, புள்ள மருது போன்ற மரங்களை பயன்படுத்துகின்றனர்.
தேரின் நடுபாகம் தட்டு, நாப்பண் என்று அழைக்கப்படுகிறது. தேரின் மரச்சக்கரத்திற்கு கிடுகு என்று பெயர். தேரில் இருக்கைக்கு அருகே அமைந்திருக்கும் கைப்பிடிக்கு கூவிரம், கொடிஞ்சி என்று பெயர். தேரில் பறக்கும் கொடி இடக்கியம் என்று அழைக்கப்பட்டது. சத்தி, சருத்தி, சிதவல், சீதாரம் என்றும் தேரின் கொடிக்கு பெயர்கள் உண்டு.
தேர்கள் வட்ட, நீள்வட்ட, சதுர, செவ்வக, அறுங்கோண, எண் கோண வடிவங்களில் உருவாக்கப் படுகின்றது. தமிழகத்தில் உள்ள மொத்த தேர்களில் 60 சதவீதம் அறுங்கோண வடிவ தேர்களே.
தேர்களின் அளவிற்கேற்ப 4 முதல் 10 சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன.
தேர்களில் அந்தந்த ஆலய தல வரலாறு குறித்த சிற்பங்கள் இடம் பெறுகின்றன.
கோயில் கருவறை, மண்டபம் அமைப்பில் பொதுவாக தேரை உருவாக்குகின்றனர்.
தேரோட்டம் (Ratha Yatra) என்பது பல மதங்களிலும் தெய்வங்களின் சிலைகளை வைத்து ஊர்வலமாக இழுத்துச் செல்லும் ஒரு விழாவாகும். தேர் இழுப்பதன் மூலம் தெய்வ சக்தி ஊர் முழுவதும் வெளிப்படும் என்றும், ஊருக்குள் இருக்கும் தீய சக்திகள் அனைத்தும் பறந்தோடிவிடும் என்றும் நம்பப்படுகிறது.
தேரை இழுக்க தேரோட்டத்தில் கயிறு, வடம் கொண்டு கட்டி இழுப்பதை மரபாக வைத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள தேர்களில் பெரியது திருவாரூர் தேர் தான். ஆசியாவின் மிகப்பெரிய தேர் என்று ஆழித்தேர் எனும் திருவாரூர் தேர் சொல்லப்படுகிறது. இது 96 அடி உயரமும் 350 டன் எடையும் கொண்ட தேர்.
இதற்கு அடுத்தது ஶ்ரீ வில்லிபுத்தூர் கோயில் தேர் தான். தமிழகத்தில் உள்ள தேர்களில் ஆண்டாள் உலா வரும் தேரே உயரமானது. வன்னி மரம், தேக்கு மரம், கோங்கு மரம் ஆகியவற்றில் செய்யப்பட்ட இந்தத் தேரின் மொத்த உயரம் 75 அடி. உயரமான அமைப்பு, கம்பீரம், அழகு நிறைந்த சுமார் 150 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இந்தத் தேரை சுற்றிலும் புராண நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள அரும்பாவூர் தேர்கள்
தமிழ் நாட்டில் எப்படி பல பொருள்களுக்கு புவிசார் குறியீடு உள்ளதோ, அதேபோல் தமிழக கோவில் தேர்களுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அது தான் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூர் தேர்கள் எனும் புவிசார் குறியீடு. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேர் முதல், தமிழகத்தின் பிரபலமான 300 க்கும் மேற்பட்ட கோவில்களில் இவ்வூர் தேர்கள் தான் வலம் வருகின்றன.
108 வைணவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் தொடங்கி, வடபழநி முருகன் திருக்கோயில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், ஆவுடையார் கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான கோயில்களில் அரும்பாவூரில் வடிவமைத்த மர வேலைப்பாடுகள்தான் தேர்களாகவும், கொடிமரமாகவும், உற்சவரை சுமப்பதற்கான பல்வேறு வாகனங்களாகவும், மரச் சிலைகளாகவும் காட்சியளிக்கின்றன
இங்கு ஒரு தேர் செய்ய 6 மாதம் முதல் 2 வருடங்கள் வரை ஆகுமாம். தேர் மற்றும் மரச் சிற்பங்கள் செய்ய இவ்வூர் மக்கள் பயன்படுத்துவது பூவாகை, மாவிலங்கை, அத்தி, இலுப்பை,தேக்கு போன்ற மரங்களைத் தான். அரும்பாவூரின் முன்மாதிரியான ஸ்தபதிகள் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களுக்காக 400க்கும் மேற்பட்ட கோயில் ரதங்களையும் 5000 கோயில் வாகனங்களையும் கைவினைஞர்களால் செய்துள்ளனர். அந்தந்த கோயில்களில் நேரடியாக தங்கி கைகளால் செதுக்கி தேர்களை உருவாக்குவது தான் அரும்பாவூர் மக்களின் ஸ்டைல்.
இந்த பண்டைய கைவினைப்பொருளுக்கு 2020 ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு (GI) வழங்கப்பட்டது.