பொம்மைக் கொலு நவராத்திரி நமக்கெல்லாம் தெரியும்; ஆனால் ஆஷாட நவராத்திரி என்னும் பதினொரு நாள் விழா ஒன்று கொண்டாடப்படுகிறது, தெரியுமா? முக்கியமாக தஞ்சைப் பெரிய கோயிலில் வருடந்தோறும் வெகு சிறப்பாக மேற்கொள்ளப்படும் விழா இது.
தஞ்சை பெரியகோயிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், முருகன், விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் உள்ளன. இவர்களில் வராகி அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆஷாட நவராத்திரி பெருவிழா 11 நாட்கள் நடைபெறுகிறது.
முதல்நாள் காலை சம்பிரதாயப்படி கணபதி ஹோமம். அதைத் தொடர்ந்து வராகி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். மாலையில் வராகி அம்மன் இனிப்புப் பலகார அலங்காரத்தில் இனிமையாகத் திகழ்கிறாள். விழா நாட்களில் தினமும் காலையில் யாகமும், மாலையில் அம்மனுக்கு அலங்காரமும் நடைபெறுகின்றன.
Varahi amman ashada navratri thanjavur big templeஅதன்படி 2-ம் நாள் மஞ்சள், 3-வது நாள் குங்குமம், 4-வது நாள் சந்தனம் 5-வது நாள் தேங்காய்ப்பூ, 6-வது நாள் மாதுளை, 7-வது நாள் நவதானியம், 8-வது நாள் வெண்ணெய், 9-வது நாள் கனிவகை, 10-வது நாள் காய்கறி, 11-வது நாள் புஷ்பம் என்று பலவகை அலங்காரங்களில் வராகி அம்மன் அருட்காட்சி நல்குகிறாள். கடைசி நாளன்று மாலை நேரத்தில் அம்மன் திருவீதி உலாவும் உண்டு.
பதினோராம் நாள் மாலை 5 மணிக்கு கேரள ஜெண்டை வாத்தியம், நாதஸ்வரம் முழங்க கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் வாணவேடிக்கையுடன் நான்கு ராஜவீதிகளில் வராகி அம்மன் வீதிஉலா வருகிறாள்.
விழா நாட்களில் தினமும் காலை 8 மணிக்கு சிறப்பு வராகி ஹோமமும், 10 மணிக்கு அம்மனுக்குச் சிறப்பு தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு இசைநிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மன் வழிபாடு சிறப்பு வாய்ந்தது. பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜ ராஜசோழன் போருக்கு செல்லும் முன்பு இந்த வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த அன்னையின் அருள் பெற்றுதான் எந்த செயலையும் தொடங்குவார்.
சப்த கன்னியரில் ஒருவரான வராகி அம்மன், திருமாலின் வராக அம்சமாக கருதப்படுகிறார். இவள் வராகமெனும் பன்றி முகத்தையும், எட்டு கரங்களையும் உடையவள். பின்னிரு கரங்களில் தண்டத்தினையும் கலப்பையையும் கொண்டவள். கருப்புற நிற ஆடையுடுத்தி சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கிறாள். சப்த மாதர்களில் வராகி அம்மன் உக்கிரமான தெய்வமாக பார்க்கப்பட்டாலும், அன்பை பொழிவதில் ஒரு தாய்க்கு நிகரானவள். வராகி அம்மன் ராஜ ராஜேஸ்வரி அம்மனின் குதிரைப்படை தலைவியாகவும், பத்மாவதி அம்மனின் காவல் தெய்வமாகவும் அறியப்படுகிறார்.
வராஹர் அவதார நினைவூட்டலாக அம்மன் வராஹி என்று நாமம் கொண்டிருந்தாலும், பேச்சு வழக்கில் வாராஹி என்றும் அழைக்கப்படுகிறார்.