அனுமனுக்கு ஏன் வடை மாலை சாற்றப்படுகிறது என்று தெரியுமா?

offered to Hanuman...
அனுமன்
Published on

னுமன் கோவில்களில் விசேஷ தினங்களில் வடைமாலை சாற்றி விசேஷ வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அனுமனுக்கு ஏன் வடைமாலை சாற்றப்படுகிறது என்பதைப் பற்றிய புராண நிகழ்வினை இப்பதிவில் நாம் தெரிந்து கொள்ளுவோம்.

அஞ்சனாதேவிக்கும் வாயுபகவானுக்கும் பிறந்தவர் அனுமன். இளம்பிராயத்தில் ஒருநாள் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அனுமனுக்குப் பசி எடுத்தது. அனுமன் வானில் தெரிந்த சூரியனை ஒரு பழம் எனக் கருதிவிட்டார். பசியை போக்கிக் கொள்ள அதை உண்பதற்காக வானில் சூரியனை நோக்கிப் பாய்ந்து சென்றார். வாயு பகவானின் மைந்தனான அனுமன் விண்ணில் வாயு வேகத்தில் பறக்கத் தொடங்கினார். இதே சமயத்தில ராகுவும் சூரியனைப் பிடித்து கிரகணத்தை ஏற்படுத்த சூரியனை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வாயு மைந்தனான அனுமனின் வேகத்துக்கு ராகுவால் ஈடுகொடுக்க முடியுமா என்ன ? அனுமனை முந்த வெகுவாக சிரமப்பட்ட ராகு தன்னைவிட வேகமாகச் செல்லும் அனுமனின் வேகத்தையும் வீரத்தையும் கண்டு பிரமித்தார்.

ராகு பகவான் அனுமனிடம் “அனுமனே. நான் சூரியனைப் பிடித்து கிரகணத்தை உண்டு பண்ண வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்னால் உன் வேகத்திற்கு ஈடு கொடுத்துப் போட்டி போட முடியாது. தயைகூர்ந்து உன் வேகத்தைக் குறைத்துக் கொள்” என்றார். ஆனாலும் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார். இதன் பின்னர் அனுமனிடம் ராகு பகவான் “எனக்கு உகந்த தானியமான கருப்பு உளுந்தினால் வடை செய்து மாலையாக்கி அந்த வடை மாலையை எவரொருவர் அனுமனாகிய உனக்குப் படைத்து வணங்குகிறாரோ அவரை எந்தக் காலத்திலும் தான் பிடிப்பதில்லை. என்னால் அவருக்கு இராகு தோஷம் ஏற்பட்டிருந்தாலும் அது உடனே நீங்கிவிடும்” என்றும் உரைத்தார். இதன் அடிப்படையிலேயே அனுமனுக்கு மிளகு வடையை மாலையாகச் சாற்றி வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. உளுந்தினால் வடைகள் செய்து மாலையாக்கி பாம்பின் உடலைப் போல அனுமனுக்கு சாற்றப்படுகிறது.

ராகுவின் தோஷத்திலிருந்து விடுபடமட்டுமில்லாது பிற வேண்டுதல்களுக்காகவும் அனுமனுக்கு வடைமாலை சார்த்தப்படுகிறது. அனுமனுக்கு 27, 54, 108, 1,008 என்ற எண்ணிக்கையில் வடைகள் கோர்க்கப்பட்டு வடைமாலை சாற்றப்படும் வழக்கம் இருந்து வருகிறது.

ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டுகிறது. அன்று அனுமன் கோவில்களில் 108 எண்ணிக்கை முதல் 1,00,008 எண்ணிக்கை வரை அனுமனுக்கு வடைமாலை சாற்றப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
விதியைக் காட்டிலும் விடாமுயற்சிக்கு வலிமை அதிகம்!
offered to Hanuman...

நாமக்கல்லில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் வருடந்தோறும் அனுமன் ஜெயந்தி அன்று 18 அடி உயரமுள்ள ஒற்றைக் கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலையால் அலங்காரமும் சிறப்பு பூஜையும் நடைபெறுவது வழக்கம். 2250 கிலோ உளுத்தம் பருப்பு மாவும், 32 கிலோ மிளகு, 33 கிலோ சீரகம், 750 லிட்டர் நல்லெண்ணெய் கொண்டு ஒரு லட்சத்து எட்டு வடைகள் தயாரிக்கப்படுகின்றன.

அனுமன் கோவில்களில் நெற்றியில் இட்டுக் கொள்ள செந்தூரம் வழங்கப்படுகிறது. இராமபிரானின் ஆயுள் பலத்திற்காக நெற்றியில் செந்தூரம் பூசிக் கொள்ளுவதாக ஒருமுறை சீதாதேவி கூறியதை கேட்ட அனுமன் “என் பிரபு இராமபிரானின் ஆயுள்கூடுமென்றால் நான் என் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொள்வேன்' என்று கூறி செந்தூரத்தைப் பூசிக்கொண்டார். இதன் அடிப் படையிலேயே அனுமன் கோவில்களில் செந்தூரம் தரும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com