
வருடத்திற்கு நான்கு விதமான நவராத்திரிகள் வருகின்றன.
வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. அது பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் நடைபெறும்.
ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. இது ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.
சாரதா நவராத்திரி புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.
தை மாதத்தில் கொண்டாடப்படுவது ஷியாமளா நவராத்திரி. தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது.
பெரும்பாலான தமிழக மக்கள் கொண்டாடுவது புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரியினைத் தான்.
ஆனால் உழைப்பையும் உழவுத் தொழிலுக்கும் துணை நிற்கும் வாராகியை கொண்டாடுவது இந்த ஆஷாட நவராத்திரி காலத்தில் தான். அதுவும் ஆனி மாதத்தில் தான் சந்திரமான கால கணித முறையில் ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலமாகும்.
ஆனி, ஆடி மாதங்களில் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வளமையும் செழுமையும் தரும் விவசாயத்தின் ஆரம்ப காலமாகும். அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி, ஆடி மாதம். இந்த காலத்தில் அம்பிகையை விவசாயம் பெருகி உலகம் சுபிட்சமாக விளங்க மனம் உருக பிரார்த்தனை செய்வதே ஆஷாட நவராத்திரி ஆகும்.
ஆஷாட நவராத்திரி வாராகி தேவிக்கு உரியதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. வாராஹி பன்றி முகத்தையும் எட்டு கரங்களையும் உடையவள். அம்பிகையின் கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற ஏர் கருவியும் கலப்பையையும் கொண்டு கருப்பு நிற ஆடை உடுத்தி சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பாள் என கூறுகின்றது. தேவி புராணங்களின்படி சப்த மாத பத்து மாதர்களில் ஒருவராக போற்றப்படுகிறார் வாராகி தேவி. ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத்தலைவிகளில் ஒருவராகும். அளப்பரிய சக்தி கொண்டவள், வேண்டுபவருக்கு வேண்டியவற்றை உடனடியாக அருளக்கூடியவள். ஆஷாட நவராத்திரி ஒவ்வொரு நாளிலும் சப்த மாதா தெய்வங்களையும் அஷ்ட மாத்ரிகா தெய்வங்களையும் வழிபாடு செய்வதும் எட்டாம் நாளில் வாராகி தேவியை போற்றுவதும் வளமான வாழ்க்கையை தந்தருளும்.
‘ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்’
என்ற இந்த காயத்திரியை நூற்றியெட்டு முறை ஜெபிக்க வேண்டும்.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள ஸ்ரீ மகாவாராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழாவில் தேங்காய் பூ அலங்காரம் செய்யப்படும். பத்து நாட்கள் இங்கு விமர்சையாக ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படும். இனிப்பு அலங்காரம், மஞ்சள் அலங்காரம், குங்குமம் அலங்காரம், சந்தன அலங்காரம், தேங்காய் பூ அலங்காரம், மாதுளை அலங்காரம், நவதானிய அலங்காரம், வெண்ணெய் அலங்காரம், காய்கறி அலங்காரம், புஷ்ப அலங்காரம் என தினமும் வெவ்வேறு அலங்காரமும் அபிஷேகமும் ஆராதனையும் இங்கு மிகச்சிறப்பாக நடைபெறும்.
தஞ்சை கோவிலில் வாராகி அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பு பெற்று விளங்குவதற்கு காரணம் சோழ மன்னர்கள் வெற்றி தெய்வமாக வாராகி அம்மனை வழிபாடு செய்ததுதான். சோழ மன்னர்கள் எந்த செயலையும் தொடங்கும் முன்பு வாராகிக்கு சிறப்பு வழிபாடு செய்வார்கள். ராஜராஜசோழன் வாராகி அம்மனை வழிபட்ட பின்னரே எதையும் செய்வாராம். குறிப்பாக போருக்கு புறப்பட்டு செல்லும்போது வாராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்திய பின்னர்தான் செல்வாராம். அதனால் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றார். அதனால் வாராகி அம்மன் சோழர்களின் வெற்றி தெய்வமானாள்.
நாமும் வாராகி தேவியை வழிபட்டு வாராகியின் அருளை பெறுவோம்.
ஆன்மீகத் தகவல்கள் என்ற நூலில் இருந்து ...