அஷ்ட ஐஸ்வர்யம் அருளும் மகாலட்சுமி திருக்கோயில்!

Pallipuram Mahalakshmi Temple
Pallipuram Mahalakshmi Temple
Published on

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பகுதியில் நெசவுத்தொழில் செய்து வந்த சில குடும்பத்தினர் வாழ்வாதாரத்தினை பெருக்கிக் கொள்வதற்காக கேரளாவில் உள்ள சேர்த்தலா அருகில் உள்ள ஒரு இடத்திற்கு குடி பெயர்ந்து சென்றனர். அங்கு தொழிலை தொடங்குவதற்கு முன்பாக அவர்கள் காஞ்சிபுரத்தில் வழிபட்டு வந்த மகாலட்சுமியை நினைத்து வழிபட்டனர். அங்கு அவர்களது தொழிலுக்கு நல்ல மதிப்பும் வருவாயும் கிடைத்தது. அவர்களது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வளங்களும் பெருகின. இதனால் மகிழ்ச்சி அடைந்தவர்கள் காஞ்சிபுரத்தில் இருக்கும் மகாலட்சுமி தாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து கோயில் கொள்ள வேண்டினர்.

அவர்களின் வேண்டுதலையேற்ற மகாலட்சுமி தாயாரும் காஞ்சிபுரத்திலிருந்து முதலை ஒன்றின் மீது அமர்ந்து அவர்கள் இருக்கும் இடத்துக்குச் சென்றடைந்ததாக ஐதீகம். அங்கிருக்கும் குளம் ஒன்றின் கரையில் தாங்கள் வழிபட்டு வந்த மகாலட்சுமி வந்திறங்கி இருப்பதை அறிந்த மக்கள் அங்கு புதிதாகக் கோயில் ஒன்றைக் கட்டி வழிபாடு செய்யத் தொடங்கினர். இந்தக் கோயிலில் இருக்கும் மகாலட்சுமி கிழக்கு நோக்கி நின்ற நிலையில் முன்புறம் வலது கையில் நெற்கதிர்கள் இடது கையில் கிளி பின்புற வலது கையில் சக்கரம் இடது கையில் சங்கு ஆகியவற்றைத் தாங்கி, எட்டு வகையான செல்வங்களையும் வழங்கும் அஷ்ட ஐஸ்வர்ய லட்சுமி  மகாலட்சுமியாக வழிபடப்படுகிறாள்.

இக்கோயிலின் சுற்றுப்புறங்களில் கணபதி, சிவபெருமான், ஐயப்பன், சேத்திரபாலர்கள் இருக்கின்றனர். ஆலயத்தின் நுழைவு வாசலில் ஒன்பது கோள்களுக்கான அதிதேவதைகள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கின்றனர். சூரிய உதயத்தின்போது இந்த மகாலட்சுமி கோயில் குளத்து நீரை சிறிது எடுத்து அருந்தி மகாலட்சுமியை வழிபடுபவர்களுக்கு மகாவிஷ்ணு மகாலட்சுமி இருவரையும் சேர்த்து வழிபட்ட பலன்கள் கிடைப்பதாக நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
விரதம் மற்றும் உடற்பயிற்சிக்குப் பிறகு ஜவ்வரிசி உணவு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
Pallipuram Mahalakshmi Temple

இக்கோயில் மகாலட்சுமியை வழிபடுவதால் திருமணம் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறுகிறது. இக்கோயில் வந்து வழிபடும் பக்தர்களுக்கு செல்வம், ஞானம் உணவு, மன உறுதி, புகழ், வீரம், நல்ல புதல்வர்கள் விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் எனும் எட்டு வகையான செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. உப்பு தன்மையுடன் இருக்கும் மிகப்பெரிய ஏரிக்கு அருகில் மகாலட்சுமி வந்து இறங்கிய நீர் நிலை இருக்கிறது. ஆனால், இந்த நீர் நிலையில் மட்டும் சுவையான குடிநீர் இருப்பது இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.

கேரளாவில் மகாலட்சுமிக்கு என இருக்கும் ஒரே கோயில் இந்த ஐஸ்வர்ய மகாலட்சுமி கோயில் மட்டும்தான். இந்தக் கோயில் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், பள்ளிபுரம் என்னும் இடத்தில் உள்ளது. இந்தத் தலத்தை கடவில் மகாலட்சுமி கோயில் என்று பக்தர்கள்அழைக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com