ஆஞ்சநேயரின் காலடியில் ஸ்ரீ சனிபகவான் உள்ள அபூர்வமான ஸ்தலம்!

ஸ்ரீகோதண்டராமஸ்வாமி திருக்கோயில்
ஸ்ரீகோதண்டராமஸ்வாமி திருக்கோயில்

செங்கற்பட்டு நகரத்தின் மையப்பகுதியில் பழம்பெருமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீகோதண்டராமஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. முற்காலத்தில் இங்குள்ள நீர்நிலைகளில் செங்கழுநீர்ப்பூக்கள் நிறைந்திருந்தன. இதனால் செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் மருவி செங்கற்பட்டு என்றானது.

தொடக்க காலத்தில் வரதராஜப் பெருமாள் கோயிலாக விளங்கிய இத்தலம் கி.பி.1041 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. தற்போது இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபட்டாபிராமர் முற்காலத்தில் செங்கற்பட்டு கோட்டைவாயிலில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருந்தார். பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட படையெடுப்பின் காரணமாக கோட்டைவாயில் திருத்தலம் தகர்க்கப்பட திம்மராஜா ஜமீன்தாரால் கி.பி.1768 ல் ஸ்ரீபட்டாபிராமர் அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்பின்னர் இத்தலம் கோதண்டராமர் கோயில் என்றழைக்கப்பட்டது. இத்தலத்து சனிபவகான் மிகவும் சிறப்பு வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.

ஆஞ்சநேயர் மகேந்திர மலையிலிருந்து இலங்கை செல்ல தயாராக இருந்தார். அங்கே வந்த சனிபகவான் ஆஞ்சநேயரிடம் “தங்களுடன் ஏழரை ஆண்டுகாலம் இருக்க வேண்டிய காலம் இது” என்றார். இதற்கு ஆஞ்சநேயர் “நான் ராமபிரானின் காரியமாகச் செல்லுகிறேன். எனவே நான் இலங்கையிலிருந்து திரும்பி வந்ததும் நீ என்னைப் பிடித்துக் கொள்ளலாம்” என்றார். இதற்கு சனீஸ்வரனும் ஒப்புக் கொள்ள ஆஞ்சநேயர் ஆகாய மார்க்கமாக இலங்கைக்குச் சென்று இலங்கையில் சீதாதேவியை தரிசித்துத் திரும்பிய பின்னர் இராமபிரானுக்கு உதவியாக இராவணனை அழிக்க சேது கரையிலிருந்து இலங்கைக்கு பாலம் அமைக்கத் தீவிரமாக இருந்தார். அந்த சமயத்தில் சனிபகவான் அங்கு வந்து ஆஞ்சநேயரைப் பிடித்துக் கொண்டு அவர் தலைமீது அமர்ந்து கொண்டார். ஆஞ்சநேயர் பாலம் அமைக்க மலைத் துண்டுகளை எடுத்துத் தன் தலை மீது வைக்க தலையில் இருந்த சனிபகவான் பாரம் தாங்காமல் “ஆஞ்சநேயனே நான் நசுங்கி விடுவேன் போலிருக்கிறதே” என்று அலறினார்.

வரதராஜப் பெருமாள்...
வரதராஜப் பெருமாள்...

மேலும் “ஆஞ்சநேயனே. தலையிலிருந்து என்னை இறக்கி விட்டு விடுங்கள்” என்று கெஞ்ச ஆஞ்சநேயர் சனிபகவானை தலையிலிருந்து இறக்கி விட அவர் காலைப் பிடித்துக் கொண்டார். உடனே ஆஞ்சநேயரோ சனிபகவானை தன் கால்களுக்கு அடியில் மிதித்தார். உடனே சனிபகவான் “ஆஞ்சநேய ஸ்வாமி. என்னை விட்டுவிடுங்கள்” என்ற கேட்டுக் கொள்ள அதற்கு ஆஞ்சநேயர் “இனிமேல் பக்தர்கள் யாராவது ராம காரியத்தில் ஈடுபட்டிருக்கும் போது அவர்களைப் பிடிக்கமாட்டேன் என்று வாக்கு கொடுத்தால் உன்னை விடுவிக்கிறேன்” என்றார். சனிபகவானும் அவ்வாறே வாக்கு கொடுத்து தன்னை விடுவித்துக் கொண்டார்.

ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர் இத்தலத்தில் மிக அபூர்வமான ஒரு திருக்கோலத்தில் வாயுமூலையில் ஒரு தனி சன்னிதியில் வீர ஆஞ்சநேயர் என்ற திருநாமம் தாங்கி எழுந்தருளியுள்ளார். இவருடைய வலது கரம் அபயத்திலும் இடது கரத்தில் தாமரையும் காலடியில் சனிபகவானுடன் காட்சி தருகின்றார். ஆஞ்சநேயஸ்வாமியின் காலடியில் ஸ்ரீசனிபகவான் உள்ளவாறு காட்சி தரும் மிக அபூர்வமான இந்த திருமேனியை வேறு எங்கும் காண முடியாது. சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கத்திலிருந்து விடுபட இத்தலத்து ஆஞ்சநேயரை வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். பக்தர்கள் இத்தலத்தில் தங்கள் குறைகளைத் தெரிவித்துக் கொண்டு மட்டை உரிக்கப்பட்ட தேங்காயில் மஞ்சள் தடவி அதை புதிய வஸ்திரத்தில் கட்டி பிரார்த்தனை நிறைவேற அனுமன் சன்னிதிக்குள் கட்டிவிட்டுகச் செல்லுகிறார்கள். அவர்கள் குறைகள் அனைத்தும் ஆஞ்சநேயர் அருளால் வெகுவிரைவில் அகலுகின்றன.

இதையும் படியுங்கள்:
முதுமையைத் தள்ளிப்போட உதவும் 7 உணவுகள்!
ஸ்ரீகோதண்டராமஸ்வாமி திருக்கோயில்

இத்தலம் காலை 07.30 மணி முதல் 10.30 மணி வரையிலும் மாலை 05.30 மணி முதல் இரவு 08.30 மணி வரையிலும் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும்.

செங்கற்பட்டு நகரின் மத்தியில் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வேதாச்சல நகரை ஒட்டி இத்தலம் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com