

தருமபுரியில் இருந்து நல்லம்பள்ளி வழியாக சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள அதியமான்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது காலபைரவர் திருக்கோயில். காசிக்கு அடுத்தபடியாக காலபைரவருக்கென்று அமையப்பெற்ற பழமையான திருக்கோயில் இது. அதனால் இக்கோயில் தென்னகக்காசி அல்லது தட்சிணகாசி என்று அழைக்கப்படுகிறது.
தகடூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த அரசர்களில் ஒருவர் அதியமான். கடையெழு வள்ளல்களில் ஒருவனாகப் போற்றப்படும் அதியமான், ஔவைப் பிராட்டிக்கு நெல்லிக்கனி தந்து மகிழ்ந்தான். நற்பண்புகளும், புகழும் கொண்டு அதியமான் சிறப்பாக ஆட்சி புரிந்தாலும், அவர் சிற்றரசர் தானே. பகை மன்னர்களுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு பொருள் பலமும், படை பலமும் அவரிடம் இல்லை. இது அதியமான் மனதில் சற்று அச்சத்தையும் கவலையையும் தந்தது.
அதனால், தன் நாட்டை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க படைபலத்தைக் கூட்ட முடிவு செய்தான். கூடவே, வேறு ஏதேனும் வழி உள்ளதா என்று அமைச்சர்கள் மற்றும் ராஜகுருவோடு ஆலோசனை செய்தான். பல்வேறு யோசனைகளுக்குப் பின், காவல் தெய்வமான காலபைரவருக்கு ஆலயம் எழுப்ப முடிவு செய்தான்.
சிவபெருமானின் அம்சமான காலபைரவரில் மொத்தம் அறுபத்துநான்கு பைரவர்கள் உள்ளனர். இவர்களில் முதன்மை வாய்ந்தவர்களில் ஒருவர் உன்மத்த பைரவர். காசிக்கு ஆட்களை அனுப்பி, அங்கிருந்து உன்மத்த பைரவர் சிலையைச் செய்து கொண்டுவரச் செய்து, பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பினான் அதியமான். காலபைரவரை மட்டும் தனியே பிரதிஷ்டை செய்யக்கூடாது என்று ஆன்றோர்கள் அறிவுறுத்தியதால், நவக்கிரகங்களையும் அமைத்தான்.
இக்கோயிலில் அருளும் பைரவர் திருமேனியில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் அடங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. மன்னன் தன் நாட்டைப் பாதுகாக்க அமைத்த பைரவர் என்பதால், இவர் கையில் திரிசூலத்துடன் போர் வாளும் இருப்பதை இப்போதும் காணலாம்.
காலபைரவரின் சந்நிதி உள்ள மண்டபத்தின் உட்கூரையில் நவக்கிரகங்களின் திருவுருவங்களும், பன்னிரண்டு ராசிகளின் சின்னத்தையும் சக்கர வடிவில் அமைத்திருப்பதைக் காணலாம்.
நினைத்த காரியம் நிறைவேற, வெண்பூசணியில் தீபம் ஏற்றி வழிபடும் முறை இக்கோயிலில் பின்பற்றப்படுகிறது. கோயிலை வலம்வரும்போது பைரவர் சந்நிதிக்குப் பின்புறம், பைரவரின் வாகனமான நாயின் சிலைகள் இருக்கின்றன. வெண்பூசணி தீபத்தை ஏற்றி கோயிலை வலம்வந்த பிறகு இங்கே தீபத்தை வைக்கிறார்கள்.
இந்த வெண்பூசணி தீபப் பிரார்த்தனையை 12 ஞாயிற்றுக்கிழமை அல்லது 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் தொடர்ந்து செய்துவர, நினைத்த காரியம் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
சுமார் 1200 வருடம் பழமையான இந்தக் கோவிலில் அருளும் காலபைரவரின் சிரசினைப் பார்த்து மேஷ ராசிக்காரர்கள் வணங்கினால் தோஷங்கள் நீங்கும். ரிஷப ராசிக்காரர்கள் கழுத்துப் பகுதியையும், மிதுனம் தோள் பகுதியையும், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி இடுப்பு, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு, மகர ராசிக்காரர்கள் முட்டியின் கீழ்ப்பகுதி, கும்பம் கணுக்கால், மீனம் பாதம் என வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.