பவித்ரம் மிக்க பாதுகைகள்!

பவித்ரம் மிக்க பாதுகைகள்
பவித்ரம் மிக்க பாதுகைகள்

ரு சமயம் பகவான் மஹாவிஷ்ணு தனது கிரீடம், சங்கு, சக்கரம் முதலியவற்றை அனந்தன் மேல் வைத்துவிட்டு, பாத ரக்ஷைகளைத் தரையில் கழற்றி வைத்துவிட்டு சற்று ஓய்வெடுக்க எண்ணி அகன்றார்.

பகவானின் கிரீடம், சங்கு, சக்கரம் மூன்றும் கர்வத்துடன் பாதரக்ஷைகளைக் கண்டு நகைத்து, "பார்த்தீர்களா! என்ன இருந்தாலும் நாங்கள் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறோம். நீங்கள் பாவம் தரையில் கிடக்கிறீர்கள்! எங்களைப்போல் எந்நாளும் நீங்கள் அரியாசனத்தில் அமர முடியாது" என்று எள்ளி நகையாடின.

பகவான் திரும்பி வந்ததும், பாதரக்ஷைகள் அவரிடம் அதுபற்றி முறையிட்டன. அதைக் கேட்ட பகவான், ''கவலை வேண்டாம். திரேதா யுகத்தில் ஸ்ரீராமனாக நான் அவதரிக்கும்போது உங்கள் துயர் தீர்க்கப்படும். இப்போது உங்களைக் கண்டு நகைத்தவர்களையே, உங்களுக்குச் சேவை செய்ய தலைமேல் சுமக்கச் செய்வேன்!' என்றார் கருணையுடன்.

பகவான் அன்று சொன்னதைப்போல, ஸ்ரீராமனாக திருஅவதாரம் செய்தார். பரதன் முடிசூட வேண்டி கைகேயி செய்த சதியால் ஸ்ரீராமன் வனவாசம் சென்று விட, விஷயம் தெரிந்த பரதன், ஸ்ரீராமன் இருக்கும் இடம் நோக்கி ஓடுகிறான். தனது தாய் செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கோருகிறான்.

மீண்டும் அயோத்தி திரும்பி, ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு வேண்ட, ஸ்ரீராமன் மறுத்துவிடுகிறார்.

பிறகு, 'உங்கள் பாதுகைகளையாவது கொடுங்கள் அண்ணா. அதை சிம்மாசனத்தில் வீற்றிருக்கச் செய்து, அதன் பிரதிநிதியாக நான் ஆட்சி புரிகிறேன்” என்று வேண்ட, மனமிரங்கிய அண்ணல் ஸ்ரீராமன் தமது பாதரக்ஷைகளைக் கொடுத்தனுப்புகிறார்.

கவான் மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமனின் பாதரக்ஷைகளை, சங்கு, சக்கரங்களின் அம்சமாகப் பிறந்த பரதனும் சத்ருக்னனும் தங்கள் தலைமேல் தாங்கிச் சென்று, அதை சிம்மாசனத்தில் அமர்த்தி, அதன் பிரதிநிதிகளாகவே ஆட்சி புரிந்தனர்.

இதையும் படியுங்கள்:
பனீர் சாப்பிடும் ஆவலை தூண்டுவது எது தெரியுமா?
பவித்ரம் மிக்க பாதுகைகள்

ராம ராஜ்ஜியத்தைவிட, பரதனின் மேற்பார்வையில் நடைபெற்ற ஸ்ரீ ராமனின் பாதுகா ராஜ்ஜியம் பவித்திரமாக இருந்தது என்றால், ஸ்ரீராமனின் பாதுகைகள் எந்தளவு புனிதமும் சக்தியும் மிக்கது என்பதை யூகித்து அறியலாம். இதனைப் போற்றும் விதமாகவே, இன்றும் பெருமாள் கோயில்களில், சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்ட கிரீடத்தின் மீது அமர்ந்த பாதுகைகள் பக்தர்களின் தலை மீது, 'ஸ்ரீ சடாரி' எனும் பெயரில் சாத்தப்படுகிறது.

பெருமாள் தரிசனத்துக்குப் பிறது தரப்படும் துளசித் தீர்த்தம், மஞ்சள் காப்பு, குங்குமம் முதலிய பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதுடன், ஸ்ரீ சடாரியை சிரசில் தரித்துக்கொள்ளும்போதுதான், வழிபாடு பூர்த்தியானதாகக் கருதப்படுகிறது. காலம் எப்போது யாரை எந்த உயரத்தில் வைக்கும் என்று கணிக்க முடியாது. அதைத்தான் 'ஸ்ரீ சடாரி நமக்கு உணர்த்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com