தம்பியே அண்ணனாக அவதரித்து அற்புதம் நிகழ்த்திய பலராம ஜயந்தி!

Balaram Jayanti
Balaram Jayanti
Published on

கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்கு சில தினங்களுக்கு முன்பு பலராம ஜயந்தி கொண்டாடப்படுகிறது. வரும் 26ம் தேதி ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி கொண்டாடப்படுகிறது. இன்று பலராம ஜயந்தி தினமாகும்.

பலராமர் ஆதிசேஷனின் அம்சம் ஆவார். பாற்கடலில் பகவான் மகாவிஷ்ணுவை சுமந்து கொண்டு இருக்கும் அந்த ஆதிசேஷனே கிருஷ்ண அவதாரத்தின்போது கண்ணனின் அண்ணனாக. பலராமராக அவதரித்தார் என்கின்றன புராணங்கள். பலராம ஜயந்தி நாடு முழுவதும் பல பகுதிகளில் பலவிதமாகக் கொண்டாடப்படுகிறது.

அன்னை தேவகி வயிற்றில் கருவாகி உருவாகி அவதரித்தவர் பகவான் கண்ணன். அதே தேவகியின் வயிற்றில் கருவாகி மாயையினால் ரோஹிணியின் வயிற்றில் வளர்ந்து அவதரித்தவர் பலராமர். ஆதிசேஷனின் அம்சமான பலராமர் எப்போதும் கண்ணனுக்கு சேவை செய்வதற்காகவே கிருஷ்ணருக்கு அண்ணனாகப் பிறந்தார் என்கின்றன புராணங்கள்.

தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்த கம்சன், தங்கை தேவகியையும் அவரது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்து வைத்தான். வரிசையாக பிறந்த ஆறு குழந்தைகளை கொன்றான். ஏழாவதாக கருவுற்றாள் தேவகி. உடனே மகாவிஷ்ணு தனது மாயையால் கருவை தேவகி வயிற்றில் இருந்து வசுதேவரின் முதல் மனைவியான ரோஹிணி வயிற்றுக்கு மாற்றினார். ரோஹிணியை பாதுகாப்பாக ஆயர்பாடியில் நந்தகோபரின் வீட்டிற்கு அனுப்பியும் வைத்தார்.

கூடவே மாயை நந்தகோபரின் மனைவி யசோதாவின் வயிற்றில் கருவாகி உருவானாள். தேவகிக்கு ஏழாவதாக உருவான கரு கலைந்துபோனதாக கம்சனிடன் கூறப்பட்டது. மீண்டும் எட்டாவதாக கர்ப்பமானாள் தேவகி. சில மாதங்களில் ஆயர்பாடியில் ரோஹிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பலசாலி என்று பெயர் சொல்லும் வகையில் அக்குழந்தைக்கு பலராமன் என்று பெயர் சூட்டினர்.

கிருஷ்ண ஜயந்திக்கு சில நாட்களுக்கு முன்பாக நிகழ்ந்த பலராம அவதாரம் கண்ணனுக்கு உதவி செய்யவே நிகழ்ந்தது. தேவகிக்கு சிறையில் எட்டாவது குழந்தை பிறந்தது. நள்ளிரவில் பிறந்த குழந்தை மகாவிஷ்ணுவின் அம்சமாக இருந்தது. அந்த நேரத்தில் உலகெங்கும் ஒரே வெள்ளம் பரவியது. நட்சத்திரங்கள் பிரகாசமாக இருந்தன. பூமி எங்கும் சுபிட்சமாக இருந்தது. ஆறுகள் சலசலத்து ஓடின. பூமி எங்கும் அமைதியாகத் திகழ்ந்தது. அதர்மத்தை அழிக்கப்போகும் அவதாரம் நிகழ்ந்து விட்டது என்பதை இந்த பூமியே உணர்ந்து கொண்டது.

கம்சனின் கையில் குழந்தை கண்ணன் சிக்காமல் இருக்க மழை பெய்து தண்ணீர் பெருக்கெடுத்தது. அந்த நடுநிசியில் இரவோடு இரவாக நந்தகோபரின் வீட்டுக்கு குழந்தையை கொண்டு சென்றார் வசுதேவர். யசோதாவிற்கு பிறந்த பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு தனது குழந்தையை மாற்றி வைத்துவிட்டு வந்தார். ஆயர்பாடி மாளிகையில் கண்ணன் தனது அண்ணன் பலராமனுடன் ஆடிப்பாடி வளர்ந்தார். பசுக்களை மேய்த்துக் கொண்டு கோபியர்களுடன் விளையாடிக்கொண்டும் வளர்ந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.

இதையும் படியுங்கள்:
புராணக் கதை - ராமனின் வருத்தம் தீர்த்த கிருஷ்ணன்!
Balaram Jayanti

நரகாசுரனின் தம்பியான மயிந்தன் தனது அண்ணனின் மரணத்திற்கு பழிவாங்க கண்ணனைத் தேடி கோவர்த்தனகிரி வந்தான். பலராமனைத்தான் கண்ணன் என்று எண்ணி, பலராமனின் உடைகளை கிழித்தெறிந்து வம்புக்கிழுத்தான். மயிந்தன் மரங்களை வேரோடு பிடுங்கி அங்கிருந்த கோபியர்கள் மீது வீசி வம்புக்கிழுத்தான். இதைக்கண்ட பலராமன் கோபங்கொண்டு மயிந்தனோடு சண்டைக்கு சென்றார். பலராமன் தனது கை முட்டியால் மயிந்தன் தலையில் ஓங்கி ஒரு கொட்டு கொட்டினார். வாயிலும், மூக்கிலும் இரத்தம் சிந்தி மயிந்தன் கீழே விழுந்து இறந்தான். முதல் அசுர வதம் நிகழ்ந்தது.

ஒரு சமயம் நாரதர், மகாவிஷ்ணுவிடம், “ஐயனே! நீங்கள் துயில் கொள்ளும் சாதாரண பாம்பான ஆதிசேஷனை கிருஷ்ண அவதாரத்தில் உங்கள் அண்ணனாகப் பிறக்கச் செய்து, அவர் கால் பிடித்து, கை பிடித்து பலவாறாக சேவை செய்த காரணம் என்ன?” எனக் கேட்டார். அதற்கு கிருஷ்ணர், “நாரதா! ஒரு சமயம் எனது காலில் விழுந்து என் பாதுகையை வாங்கிய பரதனுக்கு கிடைத்தது 14 வருட அரச யோகம். ஒரே முறை என் கால் பட்டதன் விளைவு கல்லாய் இருந்த அகலிகையின் சாபம் நீங்கியது. ஆனால், சதா சர்வ காலமும் ராம அவதாரத்தில் அண்ணாவென என் காலடியில் கிடந்த லட்சுமணனுக்கு நான் எதுவுமே செய்யவில்லையே. அதனால்தான் லட்சுமணனாய் அவதரித்த ஆதிசேஷனை எனது அண்ணனாய், பலராமனாய் பிறக்கச் செய்து அவன் கால் பிடித்து சேவை செய்தேன்” என பதில் கூறினார்.

இதையும் படியுங்கள்:
"தவத்திலிருந்து எழுக!" முருகப் பெருமான் உபதேசம் நல்கிய பாம்பன் சுவாமிகள்!
Balaram Jayanti

இறைவனின் பாதங்களில் சரணடைந்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது பலராம அவதாரம். பலசாலி பிள்ளைகள் வேண்டுமா? பலராமனை நினைத்து வணங்குங்கள். இறைவனின் பாதங்களில் சரணடைந்தால் எல்லா வளமும் பெறலாம் என்பதை பலராம அவதாரம் நமக்கு உணர்த்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com