பலே! பலே! பாலி கணேசா!

Daman Safari Ganapathi Bali
Daman Safari Ganapathi
Published on

ந்தோனேஷியாவில் உள்ள அழகான பாலி தீவுக்கு செல்லும் வழியெல்லாம் முழுமுதற் கடவுளான விநாயகர் சிலைகளைக் காணலாம். இங்குள்ள மக்கள் விநாயகரை வெற்றி தரும் தெய்வமாக வழிபடுகிறார்கள். இங்கு ஒவ்வொரு வீட்டிலும் கோயில் இருப்பதைப் பார்க்கலாம். கோயிலின் முகப்பில் விநாயகர் சிலையும் அருகில் அவரது வாகனமான மூஞ்சூறு சிலையும் இருக்கிறது. எந்தவொரு காரியத்தை தொடங்கும் முன்பும் நம்மைப் போலவே அவர்களும் விநாயகரை வழிபடுகிறார்கள்.

பாலினீஸ் மக்கள் வாழ்க்கையில் வெற்றி, பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதலைப் பெறுவதற்காக விநாயகரை வணங்குவதாகக் கூறப்படுகிறது. தனித்துவமான கட்டடக்கலை மற்றும் இந்து புராணங்களிலிருந்து கதைகளை கூறும் சிக்கலான சிற்பங்களுக்கு பெயர் பெற்ற பாலினீஸ் இந்து கோயில்கள் புரா என்று அழைக்கப்படுகின்றன. பழைமையான கோயில்களின் கருவறையில் தெய்வ விக்கிரஹங்கள் ஏதுமில்லை. ஆனால், தினமும் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கும் கோயிலின் நுழைவாயிலின் இரு புறங்களிலும் துவார பாலகர்கள் போல சிலைகள் காணப்படுகின்றன.

‘ஆயிரம் கோயில்களின் தீவு’ என்று அழைக்கப்படும் பாலியில் கோவா கஜா என்ற விநாயகப் பெருமானை வழிபடும் ஒரு குகைக் கோயில் உள்ளது. பதினொறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் பாலியைச் சுற்றியுள்ள மற்ற கோயில்களிலிருந்து வேறுபட்டது. இக்கோயில் வளாகத்தைச் சுற்றியுள்ள கட்டமைப்புகள் இந்து மற்றும் பௌத்த தாக்கங்களைக் காட்டுகின்றன. பாலியில் உள்ள இந்து கலாசாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்ததுதான். பாலி பள்ளிகளில் இன்றும் கூட ரிஷிகளை பற்றிய பாடங்கள் இருக்கின்றன.

பாலியின் தலைநகரான டென்பசாரிலிருந்து வடக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சங்கே கிராமத்தில் ஸ்ரீ மஹாகணபதி கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி ஜாதிக்காய் மரங்கள் அடர்ந்த காடு உள்ளது. இந்த கோயில் பாலியில் உள்ள பழைமையான மற்றும் மிக முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். மேலும், இது அதன் தனித்துவமான கட்டடக்கலை மற்றும் அழகான சிற்பங்களுக்கு பெயர் பெற்றது. இந்தக் கோயில் வளாகத்தில் பல ஆலயங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் சிவன், விஷ்ணு மற்றும் துர்கா தேவி உட்பட வெவ்வேறு இந்து தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

Ganeshagumpha Udayagiri
Ganeshagumpha Udayagiri

கோயிலின் பிரதான சன்னிதி விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விநாயகரின் சிலை கருப்பு கல்லால் ஆனது மற்றும் சுமார் இரண்டு மீட்டர் உயரம் கொண்டது. இந்த சிலை 17ம் நூற்றாண்டில் இந்த கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயில் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளையும் யாத்ரீகர்களையும் ஈர்க்கிறது. பாலியில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தேசிய உடை ‘வேஷ்டி’தான். எந்த ஒரு பாலி கோயிலுக்கும் வேஷ்டி அணியாமல் உள்ளே செல்ல முடியாது.

இதையும் படியுங்கள்:
கை விரல் நகங்கள் அடிக்கடி உடைகிறதா? ஜாக்கிரதை!
Daman Safari Ganapathi Bali

இந்தோனேசியாவின் மிக உயரமான சிலைகளில் ஒன்றான விநாயகர் சிலை பாலியில் தாமான் சஃபாரி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த சிலை 46 மீட்டர் உயரம் கொண்டது, தமான் சஃபாரி என்பது பாலியில் உள்ள ஒரு வனவிலங்கு பூங்காவாகும்,. பூங்காவின் நுழைவாயிலில் அமைந்துள்ள இந்த சிலை 2011ல் கட்டப்பட்டது. இங்கு விநாயகர் உட்கார்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார், இங்கு வருகை தந்து விநாயகரை பிரார்த்தனை செய்வது தடைகளை அகற்றவும், தங்களின் இலக்குகளை அடையவும் உதவும் என்று மக்கள் நம்புகிறார்கள்,

ஹிந்துக்களின் சொர்க்க பூமி பாலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உலகின் அழகிய தீவுகளில் பாலி முக்கிய இடம் வகிக்கிறது. அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை, பாரம்பரியமிக்க இந்து கலாசாரம், நடனம், இசை என அனைத்திலுமே ஆன்மிக உணர்வு நிறைந்த இந்த தீவு உலக சுற்றுலா பயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சரியம் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com