நாராயணனின் மனைவியான மகாலட்சுமி எட்டு விதமான வடிவங்கள் எடுத்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள். ஆகவே அஷ்டலட்சுமியாக வணங்கப்படுகிறாள். எட்டுவிதமான லட்சுமிகளையும் அவர்களை வணங்குவதால் உண்டாகும் பலன்களையும் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஸ்ரீ கஜலட்சுமி
கஜலட்சுமி அழகான தாமரை மலரில் இரண்டு யானைகள் தங்கள் துதிக்கையில் பொற்குடத்தை தாங்கி அதில் உள்ள தண்ணீரை அபிஷேகம் செய்யும் வகையில் வீற்றிருக்கிறாள். கஜலட்சுமியின் இரண்டு கைகளில் தாமரை மலர்களும், மற்ற இரண்டு கைகள் அபய ஹஸ்தமாகவும் இருக்கின்றன. இப்படிப்பட்ட கஜலட்சுமியை வணங்குவதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
ஆதிலட்சுமி
அழகான வாசமுள்ள மலர்களினால் தொடுக்கப்பட்ட தோரணங்களினால் சூழப்பட்டவள். தாமரை மலரில் அமர்ந்தவள். மஞ்சள் பட்டு உடுத்தி, தலையில் வைர கிரீடத்தை அணிந்த ஆதிலட்சுமியை வணங்கும் எல்லா உயிர்களுக்கும் உடல் நலம்பெற அருள் புரிகிறாள்.
சந்தான லட்சுமி
இவள் புத்திர பாக்கியம் தருபவள். வீட்டில் மங்கலத்தையும் மனநிறைவையும் ஏற்படுத்தும் தேவதை. இவள் ஒரு கையில் பூரண கும்பத்தையும் மற்றொரு கையில் அபய முத்திரையையும் தாங்கி அருள் பாலிக்கிறாள். அவளது மடியில் குழந்தைகளை வைத்திருக்கிறாள்.
தனலட்சுமி
இவள் சகல விதமான தனங்களை தருபவள். குறைவில்லாத வசதிகளையும் சகல சௌபாக்கியத்தையும் அளிப்பவள். இவள் முத்து, வைரம் ஆகியவற்றினால் செய்யப்பட்ட விலை மதிக்க முடியாத ஜொலிக்கும் மாலைகளை அணிந்திருக்கிறாள். பேரழகு நிறைந்த இவள் எட்டு கரங்களை உடையவள்.
தான்ய லட்சுமி
இவள் ஒளி பொருந்திய கிரீடத்தை அணிந்தவள். அலங்கார தேவதை . சகலவிதமான தான்யங்களுக்கும் அதிபதி. விளைச்சலை பெருக்குபவள் . நிறைவான வாழ்க்கையை அளிப்பவள். இந்த தேவியின் கைகளில் வளமையை குறிக்கும் விதமாக செந்தாமரை, கரும்பு ஆகியவை இருக்கின்றன. இவள் சுகபோகமாக அமர்ந்து பக்தர்களுக்கு வசதி வாய்ப்புகளை வாரி வழங்குகிறாள்.
விஜயலட்சுமி
வெற்றியின் சின்னமாக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். எட்டு கரங்களை உடைய இவள் அருகில் அன்னப்பறவை காணப்படுகிறது .இவள் அலங்கார ரூபிணியாக பளபளக்கும் ஆடை ஆபரணங்களோடு கண்கவரும் இடத்தில் காட்சி தருகிறாள்.
வீரலட்சுமி
இவள் துணிவும் நம்பிக்கையும் அளிப்பவள் .அந்தக் கால மன்னர்கள் அஷ்டலட்சுமிகளில் யார் தன்னை விட்டுப் போனாலும் பொறுத்துக்கொள்வார்கள். ஆனால் வீரலட்சுமி மட்டும் தங்களை விட்டுப்போக அனுமதிக்க மாட்டார்கள். காரணம் வீரமும் துணிவும் இருந்தால் போதும். அதைக் கொண்டு மற்ற அனைத்து லட்சுமிகளையும் மீட்டு எடுத்து விடலாம் என்பது அவர்களுடைய நம்பிக்கை.
ஸ்ரீ மகாலட்சுமி
நான்கு கரங்களுடன் இரண்டு கைகளில் தாமரை மலரை பிடித்து இருக்கிறாள். இரண்டு கைகளில் அபய வரத முத்திரைகளை தாங்கி அருள் பாலிக்கிறாள். அறம், பொருள், இன்பம், மோட்சம் என்பவற்றை பக்தர்களுக்கு தன்னுடைய நான்கு கரங்களினாலும் வாரி வழங்குகிறாள் என்று புராணங்கள் கூறுகின்றன.