முழு முதற் கடவுள் விநாயகரை ஆலயத்திலும், வீட்டிலும் ஆற்றங்கரை, அரசமரத்தடி என எப்படி வழிபாடு செய்தாலும் கை கூப்பித் தொழுதால் கணபதி காப்பாற்றுவார்.
எந்த மரத்தடியில் பிள்ளையார் இருக்கிறாரோ அந்த மரத்திற்குரிய நட்சத்திரம், நாள் பார்த்து பிள்ளையாருக்கு அபிஷேகம், வஸ்திரம், மாலை அணிவித்து நைவேத்தியம் செய்து படைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும்.
அரச மர பிள்ளையார்
அரச மரத்தடி பிள்ளையாரை எப்போது வணங்கினாலும் உடனடியாக நற்பலன் கிடைக்கும். மேலும் மூல நட்சத்திரத்தில் மோதகம் படைத்து குறிப்பிட்ட அளவில் வலம் வந்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும். சந்தோஷங்கள் வந்து சேரும். பூச நட்சத்திரத்தில் இவ்விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்தால் விளை பொருள், பூமியால் லாபம் கூடும் பணக்கஷ்டம் தீரும்.
ஆல மரத்தடி பிள்ளையார்
ஆலமரத்தடி விநாயகரை வழிபட்டால் ஞானம் போற்றும் வாழ்வு அமையும். பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் கன்னிப் பெண்களுக்கு திருமணத் தடை நீங்கும். ஆலமரத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து இருக்கும் விநாயகரை நோயுற்றவர்கள் மகம் நட்சத்திரத்தில் சித்திரான்னங்கள் நிவேதனம் செய்து தானமளித்தால் கடுமையான நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.
வன்னி மரத்தடி பிள்ளையார்
வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். இம்மரத்தின் அடியில் இருக்கும் பிள்ளையார் வலஞ்சுழியாக வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு. அவிட்ட நட்சத்திரத்தில் நெல் பொரி யால் அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் கை கூடும்.
புன்னைமர பிள்ளையார்
புன்னைமர பிள்ளையாரை ஆயில்ய நட்சத்திரத்தில் இளநீர் அபிஷேகம் செய்து வஸ்திரங்கள் அணிவித்து ஏழைகளுக்கு உணவு உடைகள் தானம் செய்தால் தம்பதியர்களிடம் மனக்கசப்பு நீங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள்.
வேப்ப மரத்தடி பிள்ளையார்
வேப்ப மரத்தடி பிள்ளையார் கிழக்கு நோக்கி இருப்பது சிறப்பு. உத்திரட்டாதி நாளில் தயிர் சாதம் நைவேத்தியம் படைத்து தீபம் ஏற்றி வழிபட்டால் வேலை வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். கன்னியருக்கு மனம் போல் மாங்கல்யம் கிடைக்கும்.
வில்வ மரத்தடி பிள்ளையார்
வில்வ மரத்தடியில் அருள் புரியும் பிள்ளையார் தெற்கு நோக்கியும், சித்திரை நட்சத்திரத்தில் ஏழைகளுக்கு தானம் அளித்து, வில்வ மரத்தை சுற்றி வர பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். புதன், வியாழனில் சந்தனத்தால் அலங்காரம் செய்து வழிபட்டால் பிள்ளைகள் ஆர்வமாக படிப்பார்கள்.
இலுப்பை மர பிள்ளையார்
இலுப்பை மரப் பிள்ளையாருக்கு ரேவதி நட்சத்திரத்தில் செவ்வாயில் பசு நெய் கொண்டு தீபம் ஏற்றி மஞ்சள் நிற ஆடைகளை 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு தானம் செய்தால் தனித்து வாழும் முதியவர்கள், பெண்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை கூடும்.
சந்தன மரத்தடி பிள்ளையார்
சந்தன மரத்தடியில் பிள்ளையார் அமர்ந்திருப்பது அபூர்வமானது. இந்த பிள்ளையாருக்கு சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட வியாபாரம் அமோகமாக நடைபெறும்.
மகிழ மரத்தடி பிள்ளையார்
மகிழ மரத்தடி பிள்ளையாருக்கு அனுஷ நட்சத்திரத்தில் மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்து வழிபட வெளிநாடு சென்றவர்கள் நலமுடன் இருப்பர். நாவல் மரத்தடி பிள்ளையார் வடக்கு நோக்கியும், ரோகிணி நட்சத்திரத்தில் அருகம் புல் மாலையை சாத்தி வழிபட்டால் வெண்ணெய் தானம் அளித்து வழிபட பிரிந்த குடும்ப உறவுகள் ஒன்று சேர ஒற்றுமை அதிகரிக்கும்.
எந்த மரத்தில் உள்ள பிள்ளையாரையாவது வணங்கி அருள் பெறலாம்.