பக்தி கர்வமும், மூன்று கத்திகளும்!

Anmiga story...
Anmiga story...Image credit - tsaravanan.com
Published on

க்தி இருக்கலாம். ஆனால், அதில் கர்வம் கூடாது. மகாபாரதத்தில் இருக்கும்  கிளைக்கதை ஒன்று அர்ஜீனனின் அதீத பக்தி கர்வம் எவ்வாறு கிருஷ்ணரால் அடக்கப்பட்டது என்பதை  அழகாக  விளக்குகிறது.

"தெய்வம் என் அருகே அமர்ந்து கொண்டு இருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை! என அர்ஜூனனின் மனம் பாரதப்போரின் வெற்றியில் கர்வம் கொண்டு திளைத்துக் கொண்டிருந்தது. 

அதை உணர்ந்த கிருஷ்ணர், அர்ஜூனனின் பக்தி சார்ந்த கர்வத்தை அடக்க முடிவு செய்தார். 

அர்ஜூனா!  "நான் பெரிதும் மதிக்கும் எனது பக்தை பிங்கலை அஸ்தினாபுரத்தின் அருகில் வசிக்கிறாள். 

அவளைச் சென்று சந்திப்போம். ஆனால், இதே தோற்றத்தில் போனால் உன் உயிருக்கு ஆபத்து நேரலாம். 

நாமிருவரும் பெண் உருவெடுத்து,  தோழிகள் மாதிரி செல்லலாம் என்று கூறி, பிங்கலை வீடு சென்றனர்.

தெய்வீக ஒளியுடன் பிங்கலை கதவைத் திறந்தாள். "தாயே நாங்கள் அடுத்த ஊருக்குச் செல்வதற்காக நடந்துவந்தோம்.

கால்கள் வலிக்கின்றன. இங்கே சற்று இளைப்பாறி விட்டுச் செல்லலாமா?" என்று  கிருஷ்ணர் கேட்கையில், 

"உள்ளே வாருங்கள். நான் பூஜை செய்துகொண்டு இருக்கிறேன். பூஜை முடிந்த பிறகு நீங்கள் உணவருந்தி விட்டுச் செல்லலாம்" என்றாள் பிங்கலை. 

பூஜையறையில் ஒரு பீடத்தில் கிருஷ்ண விக்கிரகமும், சிறியதாக ஒரு கத்தியும், நடுத்தர வடிவில் ஒரு கத்தியும், பெரியதாக ஒரு கத்தியும் இருந்தன. 

தாயே ! கிருஷ்ண விக்கிரகத்தோடு மூன்று கத்திகளையும் பூஜிக்கிறீர்களே! கத்திகள் யாருடையவை? என்று கிருஷ்ணர் கேட்டார். 

என்னுடையவைதான்.  வாய்ப்பு கிட்டும்போது கிருஷ்ணனுக்கு கொடுமை செய்த என் விரோதிகளாகிய மூவரை இதன் மூலம் கொல்ல வேண்டும்.

யார் அந்த விரோதிகள் தாயே? என்று  கிருஷ்ணர் கேட்கையில்,

குசேலன், திரௌபதி, அர்ஜூனன்  என்றவள், தொடர்ந்து,

குசேலரைக் கொல்ல சின்னக் கத்தி.    திரௌபதிக்கு நடுத்தரக் கத்தி. மாவீரன் என்று தன்னைப் பற்றிப் பிதற்றிக் கொண்டு திரியும் அர்ஜூனனைக் கொல்ல  பெரிய கத்தி என்றாள்.

இந்த மூவரும் கிருஷ்ணருக்கு என்ன கொடுமை செய்தார்கள் தாயே? என்று கேட்டார் கிருஷ்ணர். 

வாய் உறுத்தாமல் வெண்ணெயை விரும்பித் தின்னும் என் கிருஷ்ணருக்கு, குசேலர் தவிட்டவலைக் கொடுத்தார். அது கிருஷ்ணரின்  நாவில் புண்ணைத் தோற்றுவிக்கும் என்பது கூட தெரியாமல்,  கொடுத்த காரணம்,  குசேலருக்கு சிறிய கத்தி.

அஸ்தினாபுரத்தில் இருக்கும் திரௌபதிக்கு,  துவாரகையில் இருக்கும் கிருஷ்ணர் வாரி வாரிப் புடவைகளை அருளினானே! புடவையை இழுத்த துச்சாதனனை விட, புடவைகளை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்கிய கிருஷ்ணருக்கு கை எவ்வளவு வலித்திருக்கும். கிருஷ்ணரின் கைகளை வலிக்கச் செய்த திரௌபதியை கொல்ல நடுத்தர அளவுள்ள கத்தி.

கை வலிக்க வலிக்க கிருஷ்ணனைத் தேரோட்டச் சொன்ன அர்ஜுனனைக்கொல்ல, பெரிய கத்தி என்றாள்.

குசேலன் அறியாமல் செய்தான். அவனிடம் தவிட்டு அவல்தான் இருந்தது. எந்தப் பிரதிபலனையும்  எதிர்பார்க்காதவனுக்கு  கிருஷ்ணர்தான் அவன் கேட்காமலே செல்வத்தைக் கொடுத்தான். 

சுயநலமற்றவன் என்பதால் குசேலனை மன்னித்து விடுங்களேன் என கிருஷ்ணர் சொன்னதும்,  சற்றே யோசித்த பிங்கலை,  பீடத்திலிருந்த சிறிய கத்தியைத் தூக்கி வீசினாள். 

திரௌபதிக்கு புடவை கொடுத்ததில் கிருஷ்ணர் கைகள் வலித்தது என்றாலும் ஒரு பெண்ணுக்கு மானம் மிகப் பெரிதென்பதால், அதைக் காத்துக்கொள்ள அவள் கொலைகூடச் செய்யலாம் என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்கின்றன.  எனவே சுயநலமே ஆனாலும் மானம் காக்க வேண்டியதால், திரௌபதியை மன்னித்து விடுங்களேன்.

இதையும் படியுங்கள்:
சொற்களின் வல்லமையை வெற்றிக்கு பயன்படுத்துங்கள்!
Anmiga story...

பிங்கலை இரண்டாவது கத்தியையும் வீசிவிட்டாள்.

போரில் தனக்கு வெற்றி கிட்ட வேண்டும் எனும் சுயநலத்திற்காக கிருஷ்ணரை தேரோட்டச் செய்த அர்ஜூனனை மட்டும் மன்னிக்கவே மாட்டேன். எனவே இந்தப் பெரிய கத்தி இப் பீடத்திலேயே இருக்கட்டும் என்றாள்.

சுயநலம் பிடித்த அர்ஜூனனை நீங்கள் கொல்வது நியாயம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன் என கிருஷ்ணர் கூறுகையில், அர்ஜுனன் திடுக்கிட்டான்.

அர்ஜூனன், கிருஷ்ணர் மனதைக் கவர்ந்த காரணம்,  கை வலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினான்.

அர்ஜூனனை நீங்கள் கொன்றுவிட்டால் உற்ற நண்பனை இழந்து கிருஷ்ணர் வருந்துவது உங்களுக்கு சம்மதம்தானா? என்ற கிருஷ்ணரிடம்,

"நீ சொல்வதும் ஒரு விதத்தில் சரிதான். எனக்கு இப்பிறவி, மறுபிறவி, ஏன்? முக்திகூட வேண்டாம்.

கிருஷ்ணருக்கு மனவருத்தம் தரும் செயலை நான் செய்யமாட்டேன் என்று கூறிய பிங்கலை,  மூன்றாவது கத்தியையும் பீடத்திலிருந்து எடுத்துக் கீழே வீசினாள். 

பெண் வேடத்திலிருந்த அர்ஜூனன், மூதாட்டி பிங்கலையின் தீவிர பக்திக்கு தலை  வணங்கியபோது அவன் பக்தி கர்வம் முற்றிலுமாக அழிந்திருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com