
இந்தியாவில் அதிசயம் நடக்கும் பல கோவில்கள் உண்டு. கோவில்களுக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும் என்பதை கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்னல் தாக்கி துண்டுகளாக வெடிக்கும் லிங்கம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
இப்படிப்பட்ட அதிசய நிகழ்வு நடக்கும் கோவில் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பிஜிலி என்ற மலைமீது மகாதேவ் ஆலயம் ஒன்றில் நடக்கிறது. இது மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாகும். இக்கோவில் கருவறையில் உள்ள லிங்கத்திற்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்னல் தாக்கும். இந்த நவீன யுகத்தில் இது மிகவும் ஆச்சர்யமான விஷயம் தான்.
இக்கோவிலைப் பற்றி ஒரு புராணக் கதையும் சொல்லப் படுகிறது. குலந்த் எனும் அரக்கன் மலைப் பாம்பு வடிவம் எடுத்து பூமியில் உள்ள அனைவரையும் துன்புறுத்தி வந்தான். இவன் மத்தனா என்ற கிராமத்திற்கு வந்து அங்கு பாயும் வ்யாஸ் நதியைத் தடுத்து நிறுத்தி விட்டான். இதனால் பல உயிர்கள் நீரில் மூழ்கி மாண்டன. இதனால் கோபமடைந்த சிவபெருமான் அரக்கனை வதம் செய்கிறார். உடனே அரக்கன் பிஜிலி மலையாக மாறியதாகவும், அதன் மீது மகாதேவ் கோவில் கட்டப்பட்டது என்றும் தெரிகிறது.
பிறகு சிவபெருமான் இந்திரனை அழைத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்கோவில் லிங்கத்தை மின்னல் காக்குமாறு கட்டளையிட்டார். மின்னலின் தாக்குதலால் லிங்கம் மட்டும் தான் உடையும் கோவிலுக்கு எந்த சேதமும் ஏற்படாது!
இக்கோவில் புரோகிதர்கள் உடைந்த லிங்கத் துண்டுகளை சேகரித்து அதோடு கடலைமாவு, பருப்பு மற்றும் உப்பு சேர்க்காத வெண்ணை இவற்றை பசை மாதிரி ஆக்கி உடைந்த லிங்கத்தை ஒன்று சேர்த்து பூசுகின்றார்கள். இது காய்ந்ததும் பழைய லிங்கமாக மாறிவிடும். மின்னல் தாக்கியதும் கோவிலை கொஞ்ச நாட்கள் திறக்க மாட்டார்கள்.
லிங்கம் நன்றாகக் காய்ந்ததும் பழையபடி அபிஷேகம், ஆராதனை செய்கிறார்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் லிங்கம் உடைந்த சுவடே தெரியாது.