
ஆனந்த பாலாசனம் என்பது புனித சமஸ்கிருத மொழியிலிருந்து உருவானது. ஆனந்தா என்றால் "மகிழ்ச்சி" என்றும், பால் என்றால் "குழந்தை" என்றும், ஆசனம் என்றால் "போஸ்" என்றும் பொருள். இது ஹேப்பி பேபி போஸ், (Happy baby pose) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு மென்மையான மற்றும் நிதானமான ஆசனமாகும்.
செய்முறை
விரிப்பில் மல்லாந்து படுத்துக்கொள்ளவும். கண்களை மூடி மூன்று முறை மூச்சை நன்றாக இழுத்து விடவும். உடலை நேராகவும் நிதானமாகவும் வைத்து, பின்னர் உங்கள் முழங்கால்களை உங்கள் மார்பை நோக்கி கொண்டு வாருங்கள். இப்போது இரண்டு கைகளாலும் இரண்டு கால் உள் பாதத்தை பிடித்து கொள்ளவும். அல்லது கால் பெருவிரலை பிடித்து கொள்ளவும். இப்போது உங்கள் கால்களை அகலப்படுத்தி, உங்கள் முழங்கால்கள் மடக்கியபடி அக்குள் பக்கமாக கொண்டு சென்று கால்களை விரிக்கவும். கை முட்டியை மடக்கக்கூடாது. இந்த நிலையில் உங்கள் தலை, மார்பு, இடுப்பு வரை தரையில் இருக்கும். உங்கள் கால்களை அகலப்படுத்தி, (படத்தில் உள்ளபடி) உங்கள் தொடைகள் அக்குள் பக்கம் வர வேண்டும்.
இந்த நிலையில் கண்களை மூடி ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றுங்கள். நிதானமாக சுவாசத்தில் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் இருந்த பின்னர் கால்களை கீழே இறக்கி பழைய நிலைக்கு வரவும்.
ஆரோக்கிய நன்மைகள்
* ஆனந்த பாலாசனம் தொடை எலும்புகள், இடுப்பு மற்றும் உள் தொடைகள், கால்களில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.
* இது கீழ் முதுகு வலியைக் குறைத்து முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* ஆசனத்தின் போது வயிற்றை அழுத்துவது செரிமானத்தைத் தூண்டவும் மலச்சிக்கலைப் போக்கவும் உதவும்.
* நரம்பு மண்டலத்தை தூண்டி, மன அழுத்தம் மற்றும் சோர்வைக் குறைக்கிறது.
* மனதையும் உடலையும் அமைதிப்படுத்தவும், நிம்மதியான தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
* இந்த ஆசனம் மனதை தெளிவுபடுத்தவும் கவனத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
தவிர்க்க வேண்டியவர்கள்
* உங்களுக்கு முதுகு, கணுக்கால், கழுத்து, முழங்கால், தோள்ப்பட்டை, இடுப்பு அல்லது குளுட் காயம் இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆசனத்தை முயற்சிக்கும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
* கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த ஆசனம் பரிந்துரைக்கப்படவில்லை, ஏனெனில் இது உங்கள் முதுகில் படுத்துக் கொள்வதை உள்ளடக்கியது, இது கருவுக்கு இரத்த ஓட்டத்தைக் குறைக்கலாம்.
* மாதவிடாய் சமயத்தில் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த ஆசனம் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இவர்கள் தவிர்ப்பது நல்லது.
* முதுகு, காலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் யோகா ஆசிரியரின் பரிந்துரையின் படி செய்வது நல்லது.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.