

சுரேஷ் நடந்து கொண்டே இருந்தான். நடப்பது அவனுக்கு பிடிக்கும் என்பதற்காக அல்ல, நடப்பது ஒரு கடமையாகப்பட்டது. குளிப்பது, உண்பது, வேலைக்கு செல்வது, மாலை வருவது, மீண்டும் உண்பது, உறங்குவது போல அதுவும் வாடிக்கையாகிவிட்டது.
ஐராதீஸ்வரர் (குடந்தை-தாராசுரம்) கோயிலை 6 முறை சுற்றுவது அவனுக்கு அவனே இட்டுக்கொண்ட கட்டளை.
“இன்று சற்று மயக்கம் வருகிறதே” என்ற எண்ணம் உதிக்க, சற்றே இளைப்பாற உட்கார்ந்தான்.
சிந்தனை சிறை கைதியாக, அமைதியாக இளைப்பாற முடியவில்லை. "உடம்புக்கு ஏதாவது இருக்குமோ, மாலை ஆபிஸ் முடிந்தவுடன் இன்றே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்."
"சே, ஒரு வேலையை ஒழுங்காக முடிக்க முடியவில்லை. என்னுடைய அடுத்த நகர்வை இந்த ஓய்வு கெடுத்துவிட்டது. இப்படித்தான் எந்த வேலை எடுத்துக் கொண்டாலும், ஒரு தடை என்னை வாட்டுகிறது; வாட்டுவது என்பதைவிட வதைக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
அவனவன் தன் காரியத்தை எப்படி சுலபமாக செய்து கொண்டு போகிறான். எனக்கு ‘வந்ததாலும்’, ‘வாய்த்ததாலும்’ எந்த சந்தோஷமும் இல்லை. முயற்சி செய்து வீட்டில் எல்லோரையும் கரிசனத்துடன், அக்கறையுடன் செயல்பட்டு அமைதியாக வாழ முனைகிறேன்.
ஏனோ? கடவுள் எனக்கு அந்த பாக்கியத்தை அருளவில்லை.
எதற்கு எடுத்தாலும் குறைகாணும் மனைவி; சந்தேகப்படும் மேனேஜர்; ஒத்துழைக்காத சக ஊழியர்கள்; ஆக, நிம்மதிக்காக நடந்தால் என் எண்ணம் என்னை வாட்டுகிறது.
கடவுளே!! உன்னிடம் சரணாகதி அடைந்துவிடுகிறேன்; என்னை எப்படியாவது காப்பாற்று!" கும்பிட்டுக்கொண்டே வெளி பிரகாரத்தில் தன்னை மறந்து தியானித்துக்கொண்டு நின்றான்.
தன்னை மறக்க நினைத்தபோது, உடல் உதரியது; தலையை வேகமாக ஆட்டினான். அப்போதுதான் உணர்ந்தான். காக்கா தலையில் மூச்சா போய் இருப்பது.
ஆமாம். தம் இருத்தலை உணராமல், உணர்த்தி சென்ற காக்கையை அண்ணாந்து பார்த்தான்.
பார்க்கத்தான் முடியும்.
பரவசம் அடைய பழக வேண்டும்.
பழக்கப்பட வேண்டும்.
எல்லாம் நம் செயல்!
வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?
எவ்வளவு தூரம்;
எவ்வளவு தூரம்;
எவ்வளவு தூரம்;
அளக்க முடியவில்லை;
எல்லை இல்லா வாழ்வு;
எதற்கு இப்படி அலைகிறது;
மனமே பேதம் கொள்ளாதே;
உன் குணம் எனக்கு தெரியும்.
உறவை, நட்பை, பழக்க,
வழக்கத்தை, மாண்பை, மதிப்பை,
மதி இழக்க செய்ய வல்ல,
ஆற்றல் உனக்கு இருக்கிறது.
என்ன செய்ய?
பாவி மனிதர்கள் நாங்கள்!
படைக்கப்பட்டோம்,
வளர்க்கப்பட்டோம்,
வாழ்வதற்காக வழிகாட்டப்பட்டோம்.
பார்ப்பவை எல்லாம் பறக்கின்றன.
நான் மற்றும் ஒற்றை ஆளாய் நிற்கிறேன்.
என்ன செய்ய...
இனி என்ன செய்ய முடியும்...
என்ன செய்ய வேண்டும்...
சொல் - உன்னிடமே கேட்கிறேன்.
பிறப்பு என்பது ஜனனம்.
தெரியாமல் நடக்கிறது.
இறப்பு என்பது மரணம்.
தெரிந்தே நடக்கிறது.
நடப்பதை நிறுத்த முடியாது.
முயற்சிக்கிறோம்; முடிந்த வரை போராடுகிறோம்.
பிரிவும் இயற்கையே!!
வாழ்வும் இயற்கையே!!
இறப்பும் இயற்கையே!!
இதில் ஏங்க என்ன இருக்கிறது??
சொல்ல எளிதாக இருக்கிறது - நினைத்தால் சுடுகிறது.
எவ்வளவு நாள் இந்த எண்ணங்களை சுமப்பது?
சுமப்பது சுவை;
அப்படியானால் எதை சுமப்பது,
எதிர் காலத்தையா?
நிகழ் காலத்தையா?
இறந்த காலத்தையா?
சொல் மனமே சொல்.
என் மனசு எனக்கு தெரியவில்லை.
என் இதயம் துடிப்பது எனக்கு உணர்த்துகிறது.
என் துள்ளல் தொடர்ந்து இந்த பிரபஞ்சத்தில் இருந்து கொண்டு என்னை ஆட்டிவிக்க வேண்டும்.
ஆட்கொள்ள வேண்டும்.
என் “இதயம்” என் “மனதை” ஆட்கொள்ள வேண்டும்.
இறைவா,
இயற்கையே,
எல்லாம் வல்ல
பரம்பொருளே,
வழி செய்,
வழி செய்,
வழி செய்....
வழி செய்வாயாக...