கல்லிலே கடவுளை காண முடியுமா? - விவேகானந்தரின் விளக்கம்!

Swami Vivekananda
Swami VivekanandaImg Credit: Pinterest
Published on

ஒருசமயம், ஆல்வார் சமஸ்தானத்துக்கு மன்னர் மங்கள் சிங்கின் அழைப்பின் பேரில் சென்றிருந்தார் விவேகானந்தர். அவர் தங்குவதற்காக ஒரு மாளிகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

அந்த மாளிகை, ஏராளமான கலைப் பொருட்களுடன் அழகுற விளங்கியது. ஆனால் அங்கிருந்த பணியாளர்களில் சிலர், 'தம் மன்னருக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை; அதனாலேயே அவர் எந்தக் கோவிலுக்கும் சென்றதில்லை' என்று குறைபட்டுக் கொண்டதை அறிந்தார் விவேகானந்தர். 

மங்கள் சிங்குக்கும் உருவ வழிபாடு பற்றிய தன் அவநம்பிக்கையை விவேகானந்தரிடம் சொல்லி விளக்கம் கேட்க வேண்டும் என்று தோன்றியது. சுவாமியை அவர் தங்கியிருந்த மாளிகைக்குச் சென்று பார்த்தார். ‘‘சுவாமி, எனக்கு விக்ரக வழிபாடு செய்வதில் உடன்பாடு இல்லை. வெறும் கல்லாலும், உலோகத்தாலும் ஆன பொருட்களால் எனக்கு எந்தவகையிலும் பக்தி வரவில்லை. ஆனால் மக்கள் என்னவோ இதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள். என்னையும் மறைமுகமாகவேனும் வழிபடச் சொல்லி வலியுறுத்துகிறார்கள். ஏன் இப்படி?‘‘ என்று கேட்டார்.

அந்த மாளிகை சுவர்களில் மாட்டப்பட்ட ஓவியங்களில் மன்னர் மங்கள் சிங்கின் படம் ஒன்றும் இருந்தது. மன்னருடன் அப்போது வந்திருந்த திவான் ஒருவரைப் பார்த்து விவேகானந்தர், ‘‘அதோ, உங்களுடைய மன்னரின் அந்த ஓவியத்தின் மீது எச்சில் உமிழ்ந்துவிட்டு வாருங்கள்,‘‘ என்று சொன்னார்.  

திவான் திடுக்கிட்டார். திகைத்து நின்றார். உடனே சுவாமி, ‘‘சரி, திவானுக்கு இதில் விருப்பம் இல்லை, போலிருக்கிறது, வேறு யாராவது இதைச் செய்ய முன்வருகிறீர்களா?’’ என்று கேட்டார்.

அதிகாரிகள் பயந்து நடுங்கினார்கள். மன்னர் கோபம் கொள்வாரோ, அது சுவாமியை வெகுவாக பாதிக்குமோ என்றும் கவலைப்பட்டார்கள். ‘‘சுவாமி, என்ன சொல்கிறீர்கள், நீங்கள்? இது எங்களை அரவணைத்துக் காக்கிற எங்கள் தெய்வமான மகாராஜாவின் ஓவியம். இதனை அவமதிப்பது, எங்கள் அரசனையே அவமதிப்பது போலாகாதா?‘‘ என்று சற்றே எரிச்சலுடன் கேட்டார்கள். 

இதையும் படியுங்கள்:
அரங்கனுக்கே டாக்டரா? யாரப்பா அது?
Swami Vivekananda

விவேகானந்தர் மன்னர் பக்கம் திரும்பினார். ‘‘மன்னரே, இது வெறும் ஓவியம்தான். இதில் உடலோ, உணர்வோ இருக்கிறதா என்று பாருங்கள், இல்லையே! ஆனாலும் இந்த ஓவியத்தில் உங்களையே காண்பதாக இவர்கள் நினைக்கிறார்கள். அதனாலேயே இதற்கு மரியாதையும் செய்கிறார்கள். அதுபோலதான் கடவுள் விக்ரகங்களும். அவற்றை வெறும் கல் அல்லது உலோகம் என்றெல்லாம் அவர்கள் நினைப்பதில்லை. அவற்றிலேயே அவர்கள் தெய்வத்தைக் காண்கிறார்கள். அதனால்தான் அவற்றை வழிபடுகிறார்கள். இந்த பாரம்பரிய வழிபாட்டு நம்பிக்கையில் எந்தத் தவறும் இல்லைதானே?‘‘ என்று கேட்டார். 

அன்றுதான் மன்னருக்கு கல்லிலே கலைவண்ணம் மட்டுமல்ல, கடவுளையும் காணலாம் என்ற ஞானோதயம் வந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com