அரங்கனுக்கே டாக்டரா? யாரப்பா அது?

Srirangam Ranganathaswamy and Dhanvantari
Ranganathaswamy
Published on

ஸ்ரீரங்கம் அரங்கன் கோவிலில் தன்வந்த்ரிக்குத் தனி சந்நதி இருக்கிறது. இவ்வாறு அவர் அர்ச்சாரூபம் கொண்ட கதை ரொம்பவும் சுவையானது.

ராமானுஜர், அரங்கனுக்கு மிகவும் நெருங்கியவர் - அவருடன் உரையாடும் அளவுக்கு! அப்படித்தான் ஒருசமயம் அரங்கனாகிய பெரிய பெருமாளைப் போய்ப் பார்த்தார் ராமானுஜர். பெருமாள் அப்பொழுது தைல காப்பு சாத்தி இருந்தார். ஒரு போர்வையால் போர்த்திக் கொண்டும் படுத்திருந்தார்!

இதை பார்த்த ராமானுஜர் பதறினார். பெருமாளை வெறும் கல் விக்ரகமாக அவரால் கருத முடியவில்லை. பெருமாளிடம், "திருமேனிக்கு ஏதாவது நோய்த் தீங்கா?‘‘ என்று கேட்டார்.

"ஆமாம். உடம்பு கொஞ்சம் சரியில்லைதான்," என்று பதிலளித்தார் பெருமாள்.

"எப்படி இப்படி ஆச்சு?‘‘ பதற்றத்துடன் ராமானுஜர் கேட்க, 

‘’எனக்கு தயிர் சாதத்துடன், நெல்லிக்காயை வைத்து நிவேதனம் செய்தார்கள். நானும் பக்த கைங்கர்யம் ஆயிற்றே என்று சாப்பிட்டுவிட்டேன். அதுதான் போலிருக்கிறது, ஜுரம் வந்து விட்டது" என்றார் பெருமாள்.

கண்ணீர் பெருகியது ராமானுஜருக்கு. ‘‘மனுஷ சரீரமானால் மருத்துவரை அழைத்து வந்து காட்டலாம். உங்களுக்கு என்று யாரை அழைத்து வருவேன்?‘‘ என்று நாத்தழுதழுக்கக் கேட்டார்.

"நமக்கு தான் டாக்டர் இருக்கிறாரே," தீனமான குரலில் சொன்னார் பெருமாள்.

"அப்படியா, யார் அவர், உடனே சொல்லுங்கள், அழைத்து வருகிறேன்,‘‘ என்று உற்சாகமானார் ராமானுஜர். 

‘‘நம் ஆலயத்தில் ‘தன்வந்திரி'யை பிரதிஷ்டை செய்யப்பா. அவர் என்னைப் பார்த்துக்கொள்வார்," என்று தீர்வும் சொன்னர் பெருமாள்.

அந்தகணமே முயற்சி எடுத்து கோவிலில் தன்வந்த்ரி பகவானை ஸ்தாபித்தார் ராமானுஜர். அன்றிலிருந்து இன்றுவரை ரங்கநாதப் பெருமாளுக்கு எந்த நிவேதனம் தயாரிக்கப்பட்டாலும், அதை தன்வந்திரி எதிரில் வைத்து அது பெருமாள் உடல்நலத்துக்கு உகந்ததுதான் என்ற அவருடைய அனுமதி பெற்ற பின்னரே, பெருமாளுக்குப் படைக்கப்படுகிறது!

Srirangam Dhanvantari
Srirangam Dhanvantari

இப்படி பெரிய பெருமாளே தன் மற்றும் தன் பக்தர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கவென்று தம் அம்சத்தையே மருத்துவனாக வைத்திருக்கும் திருத்தலம்தான் ஸ்ரீரங்கம்!

இதையும் படியுங்கள்:
காசிக்கு நிகரான ஆலயம் தமிழகத்தில் எங்கு உள்ளது தெரியுமா?
Srirangam Ranganathaswamy and Dhanvantari

மஹாவிஷ்ணுவின் அம்சமே தன்வந்த்ரி என்கிறார் குறுமுனி அகஸ்தியர். பிரபஞ்ச நன்மைக்காக, உலக மக்களின் நோய் உபாதைகளை நிவர்த்தி செய்வதற்காகவே அவதரித்தவர் அவர் என்றும் புகழ்கிறார். 

பாற்கடல் கடையப்பட்டபோது விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றியவர் தன்வந்த்ரி என்றும் ஒரு கூற்று உண்டு. அப்படித் தோன்றிய அவர், கடைதலால் கிடைத்த அமிர்தத்தை மருந்தாக்கி, நோயுற்றவர்களுக்கு அளித்து அவர்களின் உடல் நலம் காத்தார். இந்த முறையில், எல்லா வகையான நோய்களையும் உடனே தீர்க்கும் அருமருந்து அருளிய பிரபஞ்சத்தின் முதல் டாக்டராகத் திகழ்ந்தார் தன்வந்த்ரி.

இதையும் படியுங்கள்:
சிவனின் அம்சமான முனீஸ்வரன் பற்றித் தெரியுமா?
Srirangam Ranganathaswamy and Dhanvantari

பாற்கடலில் தோன்றிய தன்வந்த்ரி அடுத்தடுத்து மானிடரிடையே பல பிறவிகள் எடுத்து மக்களின் நோய்த் துன்பம் தீர்க்கப் பல வைத்திய முறைகளை அருளியவர் என்றும் சொல்லப்படுகிறது. 

இதன்படி ஒரு பிறவியில் அவருடைய தந்தையார் உஞ்சவிருத்தி செய்து ஜீவனம் நடத்தியிருக்கிறார். கையில் பிடித்திருந்த தம்பூராவை மீட்டியபடி மஹாவிஷ்ணு நாமத்தைப் பாடல்களாகப் பாடியபடி தெருவழியே தந்தையார் செல்வார். அவருடைய தெய்வீக கானத்தில் மனம் நெகிழ்ந்த அப்பகுதி வாழ் மக்கள், அவருக்கு தானியம், பழம், காய்கறிகள் என்று வழங்கினர். அவற்றை வைத்து அவர் குடும்பத்துப் பசியாற்றினார். 

தன் மகன் தன்வந்த்ரிக்கு எல்லாவிதமான சாஸ்திரங்களையும் அவர் கற்பித்தார். அக்காலத்திய சித்தர்களுடனும் பழகி வைத்திய நுணுக்கங்களையும் அறிந்தார் தன்வந்த்ரி. இந்த வகையில் மூன்று லட்சம் மருத்துவ கிரந்தங்களில் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார் என்பார்கள். ‘ஒரு சூரியனைப் போல பிரகாசித்தவர் தன்வந்த்ரி‘ என்று அவருடைய கல்வி ஞானத்தைப் போற்றுகிறார் அகஸ்தியர்.

இன்னொரு பிறவியில் தீர்க்கதமர் என்பவருடைய மகனாகப் பிறந்து பல மருத்துவ நூல்களை எழுதினார். அடுத்து காசிராஜனுடைய மகனாகப் பிறந்து மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றியிருக்கிறார். தொடர்ந்து, தீர்த்தபசு என்பவருக்கு சேதுமான் என்ற பெயரில் மகனாக அவதரித்தார். இந்த சேதுமான்தான் ஆயுர்வேதத்தை உபதேசித்தவர். (ஆயுர்வேத மருத்துவ மனைகளில் இன்றும் தன்வந்த்ரியின் ஓவியம் வைக்கப்பட்டு, வழிபடப்படுவதைக் காணலாம்.)

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் மூன்று விதமான கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்!
Srirangam Ranganathaswamy and Dhanvantari

மற்றொரு பிறவியில் அனு என்ற அரசனுக்கு மகனாகப் பிறந்தார். அப்போது பரத்வாஜ முனிவரிடம் ஆயுர்வேத மருத்துவ முறைகளைக் கற்றுத் தேர்ந்தார். அவ்வாறு கற்றறிந்ததை எட்டு பாகங்களாகப் பிரித்து தன் மாணவர்களுக்கு உபதேசித்திருக்கிறார். அவர் எந்த ரகசியத்தையும் பாதுகாக்காமல், தன் மருத்துவ அறிவைப் பொதுவுடமையாக்கினார். 

ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை என்று அறியப்படும் தன்வந்த்ரி பல நூல்களை வடமொழியிலும், தமிழிலும் எழுதியிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com