
‘பசும் பால்‘ என்று சொல்லலாமா? கூடாது. தமிழ் இலக்கணப்படி அது தப்பு. சரி, எப்படித்தான் சொல்ல வேண்டும்? முதலில் பசுக்களை வைத்து உருவான கோவில்களை கவனிப்போம், பிறகு அது தரும் பாலைப் பற்றி பார்க்கலாம்.
கோயிலில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் புனித நீரை, கருவறைக்கு வெளியே, பக்தர்கள் ஏந்தி உட்கொள்வதற்கும், தலையில் தெளித்துக்கொள்வதற்கும் கோமுகம் உதவுகிறது. பசுவின் முகம் (கோ முகம்) அத்தனை பவித்ரமானது என்பதை உணர்த்துவதற்காகத்தான் இந்த ஏற்பாடு.
பார்வதி தேவி பசு உருவில் திருவாடுதுறை ஈசனை வழிபட்டு முக்தி பெற்றதால், அங்கே கோமுக்தீஸ்வரராக ஈசன் அருள்கிறார்.
கரூர் எனும் தலம் காமதேனுவால் பூசிக்கப்பட்டது. அதனாலேயே பசுபதீஸ்வரர் என்றும் ஆநிலையப்பர் எனவும் இங்குள்ள இறைவன் அழைக்கப்படுகிறார்.
கும்பகோணம் - திருப்பனந்தாள் தலத்திற்கு அருகேயுள்ள பந்தணைநல்லூரில், ஈசன் பசுபதீஸ்வரராக காட்சி தருகிறார்.
வசிஷ்டரின் சாபத்தைப் பெற்ற காமதேனு பூசித்த முக்கிய தலமாக, ‘ஆ’எனும் பசுவின் பெயராலேயே விளங்கும் தலம்தான் ஆவூர். இது தசரதர் வணங்கிய கோயிலும் ஆகும். இங்கு வசிஷ்டரால் வாஜபேயம் என்கிற யாகம் நிகழ்த்தப்பட்டது. இத்தலம் கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இதேபோல திருவண்ணாமலைக்கும் விழுப்புரத்திற்குமிடையேயும் ஓர் ஆவூர் தலம் உள்ளது.
தஞ்சாவூர் - அய்யம்பேட்டைக்கு அருகேயுள்ள பசுபதி கோயிலில் இறைவன், பசுபதீஸ்வரர் எனப் போற்றப்படுகிறார்.
தஞ்சைக்கு அருகேயுள்ள தென்குடித்திட்டை கோயில் இறைவனான பசுபதீஸ்வரர், காமதேனுவால் பூசிக்கப்பட்டதால் அப்பெயர் கொண்டார்.
மாடுகளை கட்டும் தொழுவத்துக்குப் பட்டி என்றும் பெயர். இதையொட்டியே நிறைய ஊர்களின் பெயர்களில் பட்டி என்று சேர்த்தார்கள்.
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரராக ஈசன் அருள்கிறார். இதுவும் காமதேனுவால் பூசிக்கப்பட்டதே.
கொங்கு நாட்டிலுள்ள பெரும்பாலான சிவாலயங்கள் காமதேனுவால் வணங்கப்பட்டவை. அவற்றில் முக்கியமாக, ஆதிபட்டீஸ்வரம் என்றழைக்கப்படும் பேரூர் தலத்தைச் சொல்லலாம். இங்குள்ள ஈசனின் பெயர், பட்டீஸ்வரர். கும்பகோணம் பட்டீஸ்வரத்திலிருந்து இதனைத் தனியே பிரித்துக் காட்ட, இத்தலத்தை ஆதிபட்டீஸ்வரம் எனவும் அழைத்தனர்.
திரு ஆமாத்தூர் என்கிற திருவாமாத்தூரில் பசுக்கள் ஈசனை வழிபட்டு, தங்களைத் தற்காத்துக்கொள்ள, கொம்பை பெற்றன. விழுப்புரத்திற்கு அருகிலுள்ள இத்தலத்தை பசுக்களின் தாய்வீடு என்றே அழைப்பர்.
திருவாரூர், நன்னிலத்திற்கு அருகே கொண்டீச்சரம் அமைந்துள்ளது. பார்வதி தேவிக்கும், காமதேனுவின் மகளுக்கும் கொண்டி என்கிற பெயர் உண்டு. இந்த கொண்டியான அம்பிகை, பசுவடிவத்தில் சிவனை வணங்கியதால், இறைவன் பசுபதீஸ்வரர் ஆனார்.
தேனு என்று ஊரின் பெயரோ, ஈசனின் திருப்பெயரோ இருந்தால், அவையெல்லாம் பசு பூஜித்த தலங்களாகும்.
மேல்மருவத்தூர்-அச்சிறுப்பாக்கத்திற்கு அருகே தேனம்பாக்கத்தில் பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது.
பசுவிற்கு கபிலா என்றும் ஒரு பெயர் உண்டு. இப்படி கபிலையால் பூசிக்கப்பட்ட தலமாக, திருப்பதி மலையடிவாரத்தில் கபிலேஸ்வரர் ஆலயம் உள்ளது.
நெல்லை, சங்கரன் கோவிலில் அம்பிகை பசு வடிவில் தேவர்கள் சூழ ஈசனை வணங்கினாள். 'கோ' எனும் பசுவாக தேவி வழிபட்டதால் கோமதி என்றே இன்றும் வணங்கப்படுகிறாள்.
கோமாதாவை வணங்கினால் கோடி புண்ணியம் கிடைக்கும். கோசாலை என்கிற பசுக் கொட்டிலின் அருகே சென்றாலே தெய்வீக அதிர்வுகளுக்கு நாம் ஆட்படுவது நிச்சயம். மனம் அமைதியாவதை உணர முடியும். அதனால்தான் பெரியோர்கள், கோசாலையில் அமர்ந்து நாம ஜபம் செய்வது, கோடி மடங்கு பலன் தரும் என்று சொல்லி வைத்தார்கள்.
அதுசரி, பசும் பால் என்று ஏன் சொல்லக்கூடாது? அப்படிச் சொன்னால் பசுமையான, பச்சையான பால் என்று அர்த்தமாகிவிடும். பசுப்பால் என்றுதான் சொல்ல வேண்டும். ஓகேயா?