
ஒரு லட்சம் ஸ்லோகங்கள் அடங்கியுள்ள மஹாபாரதத்தில் ஏராளமான புதிர் ஸ்லோகங்கள் உள்ளன. அதே போல ஒரே ஒரு ஸ்லோகத்தில் ஏராளமான கதைகளையும் உண்மைகளையும் உள்ளடக்கியுள்ள ஸ்லோகங்களும் உள்ளன.
வியாஸ பாரதத்தை நன்கு படித்தவர்கள் மட்டுமே அறியக் கூடிய ஸ்லோகங்களாக இவை அமைந்துள்ளன. எடுத்துக்காட்டிற்கு ஒன்றைப் பார்க்கலாம்.
ஒரு மனிதனின் வாழ்வில் பகை உருவாக ஐந்து காரணங்கள் உண்டு என்று பூஜனி என்ற பறவை குறிப்பிடும் ஸ்லோகம் ஒன்று உண்டு. இது பற்றிய வரலாற்றை சாந்தி பர்வம் 139-ம் அத்தியாயத்தில் காணலாம்.
காம்பில்ய தேசத்தை ப்ரம்மதத்தன் என்னும் அரசன் அரசாண்டு வந்தான். அவனுடைய அந்தப்புரத்தில் பூஜனி என்னும் பறவை ஒன்று நெடுங்காலமாக வசித்து வந்தது. அது எல்லா பிராணிகளின் சப்தங்களையும் அறியும் வல்லமையைக் கொண்டிருந்தது. அந்தப் பறவைக்கு ஒளி பொருந்திய ஒரு குஞ்சு பிறந்தது. அதே சமயத்தில் பிரம்மதத்தனுக்கும் ஒரு புத்திரன் பிறந்தான். அந்த இருவருக்குமாக பூஜனி பறவை கடற்கரை சென்று இரு கனிகளைக் கொண்டு வருவது வழக்கமானது. ஒன்று அரசகுமாரனுக்கு. இன்னொன்று தனது குஞ்சுக்கு. இந்தக் கனியால் நல்ல வளர்ச்சியை ராஜகுமாரன் அடைந்தான். ஒரு நாள் அவன் குஞ்சுடன் விளையாடிக் கொண்டிருந்த போது அதைக் கொன்று கீழே போட்டு விட்டு தாதியிடம் சென்று விட்டான். வழக்கம் போல வந்த பூஜனி தன் குஞ்சு கொல்லப்பட்டு தரையில் கிடப்பதைப் பார்த்ததும் அலறியது.
இதைச் செய்தது ராஜகுமாரன் தான் என்பதை உணர்ந்த பூஜனி நேரடியாக அவனிடம் சென்று தன் கால்களால் அவனது கண்களைப் பெயர்த்து தூக்கி எறிந்தது.
பிறகு அது ப்ரம்மதத்தனை நோக்கி, “இனி நான் இங்கு இருக்க மாட்டேன்; செல்கிறேன்” என்றது.
அரசனோ, “எங்களால் செய்யப்பட்ட குற்றத்திற்கு பிரதியாக நீ என் மகனின் கண்களைப் பிடுங்கி விட்டாய். இரண்டும் சமமாகி விட்டது. இங்கிருந்து போக வேண்டாம்” என்று கூறினான்.
உடனே பூஜனி, “பகை என்பது பெண்களால் செய்யப்பட்டது, வீடு முதலிய பொருள்களால் செய்யப்பட்டது,, வாக்கால் செய்யப்பட்டது, பிறவியால் ஏற்பட்டது,, குற்றத்தால் ஏற்பட்டது, என்று ஐந்து காரணங்களால் ஏற்படுகிறது” என்று விளக்கியது.
பின்னர் பகை உள்ள இடத்தில் இருக்கமாட்டேன் என்று கூறி அங்கிருந்து அகன்றது.
இங்கு பூஜனி கூறிய ஸ்லோகத்தில் உள்ள பகைக்கான ஐந்து காரணங்களில் மஹாபாரதமே அடங்கி விட்டதைப் பார்க்கலாம்.
பகைக்கான காரணங்கள் ஐந்து.
முதலாவது பெண்களால் ஏற்படும் பகை. கிருஷ்ணனுக்கும் சிசுபாலனுக்கும் ஏற்பட்ட பகை ருக்மிணி என்ற பெண்ணால் ஏற்பட்டது. சேதி நாட்டு மன்னனான சிசுபாலனின் நண்பனான ருக்மி ருக்மிணியின் சகோதரன். அவன் ருக்மிணியை தன் நண்பனுக்கு மணம் முடித்துக் கொடுக்க விருப்பப்பட்டான். ஆனால் ருக்மிணியோ கிருஷ்ணனை மனதார விரும்பினாள். அவள் அம்பிகை கோவிலுக்குச் செல்லும் சமயம் அவளைத் தன் ரதத்தில் ஏற்றிக் கொண்டு சென்ற க்ருஷ்ணன் அவளை மணம் புரிந்து தன் பட்டமகிஷி ஆக்கினான். இதனால் சிசுபாலனுக்கும் கிருஷ்ணனுக்கும் தீராப் பகை ஏற்பட்டது. சிசுபாலனின் அன்னைக்குக் கொடுத்த வாக்கின் படி அவன் நூறு முறை தன்னை இகழ்ந்ததைப் பொறுத்த கிருஷ்ணன் பின்னர் அவனைத் தன் சக்கராயுதத்தால் வீழ்த்திக் கொன்றான். இது பெண்ணினால் ஏற்பட்ட பகை.
இரண்டாவது வீடு முதலிய சொத்துக்களால் ஏற்படும் பகை. துரியோதனனுக்கும் பாண்டவர்களுக்கும் ஏற்பட்ட தீராப் பகை அரசு யாருக்கு என்பதில் ஏற்பட்ட ஒன்று. ஐந்து கிராமங்களையாவது தா என்று பாண்டவர்கள் கேட்ட போது ஊசி முனை அளவு கூட நிலத்தைத் தரமாட்டேன் என்று கௌரவர் கூறியதால் ஏற்பட்டது மஹாபாரதப் போர். இதனால் கௌரவர் அழிந்தனர். பாண்டவர் வென்றனர். இது சொத்தினால் ஏற்பட்ட பகை.
மூன்றாவது வாக்கினால் ஏற்படும் பகை. வில்வித்தை போன்ற சகல வித்தைகளிலும் ஆசார்யரான துரோணரும் த்ருபதனும் இளமையில் ஒரே குருகுலத்தில் மிக்க நட்புடன் பழகியவர்கள். மன்னனாகும் போது உனக்கு பாதி ராஜ்யம் தருவேன் என்று அன்பின் மிகுதியால் துருபதன் துரோணரிடம் வாக்களித்தான். காலகிரமத்தில் அவன் மன்னனான போது ஒரு நாள் துரோணர் அவனது அரசவைக்குச் சென்ற போது வெளியிலேயே அவமதிக்கப்பட்டார். பின்னர் உள்ளே சென்று துருபதனைச் சந்தித்த போது அவன் நீயும் நானும் சமமாக முடியுமா என்று ஏளனாமாகப் பேச அவமானத்தால் குன்றிப் போன துரோணர் வெளியேறினார். தீராப் பகை உண்டானது. இது வாக்கினால் உண்டான பகை.
அடுத்து பிறவியால் ஏற்படும் பகை. எலி, பூனை முதலியவற்றுக்குப் பிறப்பினாலேயே பகை ஏற்படுகிறது. புலிக்கும் மானுக்கும் உள்ள பகை போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
அடுத்து குற்றத்தினால் ஏற்படும் பகை. பூஜனிக்கும் பிரம்மதத்தனுக்கும் ஏற்பட்ட பகை குற்றத்தால் விளைந்தது.
பகையைப் பற்றி நன்கு விளக்கிய பூஜனி பிரம்மதத்தனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு தனக்கு இஷ்டமான திசையை நோக்கிப் பறந்தது.
பகையைப் பற்றி ஒரு ஸ்லோகம் தரும் ஐந்து விளக்கங்கள் அருமையானவை. இந்த ஐந்து பகைகளையும் அறிந்து அவற்றை விலக்கினால் மனித குலம் செழிக்கும் அல்லவா!
இதே போல ஏராளமான ரகசியங்களை உள்ளடக்கி உள்ள ஸ்லோகங்கள் கொண்ட மஹாபாரதம் உலகின் உன்னதமான இதிகாசமாகும், இல்லையா?!