திருமூலருக்கு திருக்காட்சி தந்த சாத்தனூர் காசிவிஸ்வநாதர்!

காசிவிஸ்வநாதர் ஆலயம்...
காசிவிஸ்வநாதர் ஆலயம்...

திருமூலருக்கு இறைவன் இத்தலத்தில் காட்சி கொடுத்தார் என்பதே இத்தலத்தின் சிறப்பாகும். 63 நாயன்மார்களில் ஒருவரும், 18 சித்தர்களில் ஒருவருமான திருமூலர் இத்தலத்தில் அவதாரம் செய்து  திருமந்திரம் எழுதினார். இறைவன் திருக்காட்சி தந்த ஊர் சாத்தனூர் எனும் கிராமம். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது இது. 

காசி விஸ்வநாதர், விசாலாட்சி தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.  பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள திருமூலரை வணங்கி செல்கின்றனர். கூடுவிட்டு கூடு சென்ற திருமூலருக்கு திருக்காட்சி தந்தார் சிவனார். 

திருக்கயிலாயத்தில் இருந்து யாத்திரையாக பல தலங்களுக்குச் சென்று இறைவனைத் தரிசித்த திருமூலர், காவிரிக் கரையோரம் உள்ள ஒரு கிராமத்துக்கு வந்தார். அங்கே, மேயச்சலுக்கு வந்த பசுக்கள், ஓரிடத்தில் பெருங்கூட்டமாக நின்று கொண்டிருந்தன. அருகில் வந்து பார்த்தால்  எல்லாப் பசுக்களின் கண்களிலிருந்து கரகரவென வழிந்துக்கொண்டிருந்தது நீர்.

பசுக்களின் கூட்டத்துக்கு நடுவே எட்டிப் பார்த்தார்; அதிர்ந்து போனார். அங்கே, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வந்தவன், ஏதோ விஷ ஜந்து தீண்டி இறந்து போயிருந்தான். 

ஐந்தறிவு உயிர்கள், வாயில்லா ஜீவன்கள் இந்தப் பசுக்கள். இத்தனை நாளும் தங்களைத் தொட்டுத் தடவிக் குளிப்பாட்டியவன், தங்கள் பசியறிந்து உணவு கொடுத்தவன், காடு - மேடுகளைக் கடந்து கவனமாகவும் கரிசனத்துடனும் மேய்ச்சலுக்கு ஓட்டி வந்தவன், இருள் கவியத் துவங்கியதும் ஜாக்கிரதையாக, பத்திரமாக இப்பிடத்துக்கு அழைத்துச் சென்றவன் இறந்துக்கிடக்கிறானே...! என அந்தப் பசுக்கள் கலங்குவதை உணர்ந்து சிலிர்த்தார் சிவனடியார்.

காசி விஸ்வநாதர், விசாலாட்சி
காசி விஸ்வநாதர், விசாலாட்சி

புல்தரையில் அப்படியே படுத்துக்கொண்டார். கண்கள் மூடினார்; உயிரின் மையப் புள்ளியை உற்றுக் கவனித்தார்; இன்னும் கூர்ந்து கவனிக்க, அது அசைந்தது. இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக நகர்ந்தது; சட்டென்று உடலிலிருந்து நழுவி வெளியேறி, மேய்ப்பனின் உடலைத் தேடிச் சென்று, அவனது உடலுக்குள் புகுந்தது.

ஆம்... சிவனடியார் கூடு விட்டுக் கூடு பாய்ந்துவிட்டார். மேய்ப்பவனின் உடல் மெள்ள அசைந்தது; கை, கால்கள், உணர்வு பெற்று துடித்தன; கண் திறந்தான். சட்டென்று எழுந்தான் தென்னாடுடைய சிவனே போற்றி! திருச்சிற்றம்பலம் என்றும் வானம் பார்த்துக் கை கூப்பினான்.

தன் உடலை விட்டுவிட்டு வந்த இடத்துக்குச் சென்றார்; அதிர்ந்தார். அங்கே அவரது உடலைக் காணோம். வேறொரு உடலில்தான் இனி நான் வாழவேண்டுமா? என்று கலங்கினார் மூலர், அப்போது, அங்கே அவருக்குத் திருக்காட்சி தந்தார் சிவனார்.

இதையும் படியுங்கள்:
அக்கார வடிசல் கோவில் பிரசாதம் வீட்டிலேயே செய்யலாமே!
காசிவிஸ்வநாதர் ஆலயம்...

எல்லா உடலும் ஒன்றுதான்; எல்லா உயிரும் ஒருவருடையதுதான்! உனக்குள் இருப்பது மட்டுமல்ல... அவனுக்குள், இவனுக்குள் அந்தச் செடிகொடிகளுக்குள், மாடுகள், பூச்சிகள் எனச் சகல உயிர்களிடமும் நீ இருக்கிறாய், மூலனது பிறப்பின் ரகசியம் இதுதான் ! 

பிறப்பு இறப்பு குறித்து உலகத்துக்கு விளக்கப்போகிறான் மூலன், என்று அருளி மறைந்தார்.  அந்த மூலன் வேறு யாருமல்ல... திருமந்திரங்களையும் சிவஞான நெறிகளையும் நமக்குப் போதித்து அருளிய திருமூலர்தான் அவர். மூலனுக்குக் காட்சி தந்த சிவனார் காசிவிஸ்வநாதர் எனும் திருநாமத்துடன் இங்கே கோயில் கொண்டிருக்கிறார். அம்பாளின் திருநாமம் விசாலாட்சி. 

கோவில் இருப்பிடம்;

கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலும், திருவிடைமருதூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது சாத்தனூர் கிராமம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com