சதுர்வேதி மங்கலம் ராஜகோபால சுவாமி - வலது கையில் சங்கு, இடது கையில் சக்கரம்!

ராஜகோபால சுவாமி...
ராஜகோபால சுவாமி...
Published on

அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில்! 

ணிமங்கலம் என்ற பெயரை கேள்விப்பட்டவுடன் நம் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது சதுர்வேதி மங்கலம் என்பதுதான். வரலாற்றில் படித்த சோழ, பாண்டிய சாம்ராஜ்யங்கள் தான். அதிலும் குறிப்பாக சோழராஜ்யம் தான். மணிமங்கலத்தில் அமைந்திருக்கும் இத்திருக்கோயிலின் பெருமைகளை இப்பதிவில் காண்போம். 

அமைவிடம்:

தாம்பரத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவு. தாம்பரம் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மணிமங்கலம் காவல் நிலைய பேருந்து நிலையத்தில் இறங்கி, மேற்கே சுமார் 300 அடி தொலைவில் நடந்து சென்றால் மணிமங்கலத்தில் இருக்கும் அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோவிலை அடையலாம். இன்னும் சொல்லப்போனால் வண்டலூரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 

ராஜகோபாலர் காட்சி:

கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் இக்கோயிலின் நுழைவாயிலில், தீபஸ்தம்பம், பலிபீடம், துவஜஸ்தம்பம், கருடன் சன்னதி ஆகியவை உள்ளன. இவற்றைக் கடந்து சென்றால் உள்பிரகாரமும், மூலவர் சன்னதியும் உள்ளது. உள்பிரகாரத்தில் யோக நரசிம்மரும், ஈசானிய மூலையில் ஆழ்வார்கள் சன்னதியும் உள்ளது. கருவறையில் திருமகள் நிலமகள் சகிதமாக ராஜகோபாலன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

வெளிப்பிரகாரத்தில் தெற்கு புறத்தில் தனிக்கோயில் தாயாராக செங்கமலவல்லித் தாயாரும் ,வடக்குப் புறத்தில் ஆண்டாள் சன்னதியும், சன்னதி தெருமுடிவில் திருவடிக்கோவிலும் உள்ளது.

பூஜை முறை:

இருகால பூஜை நடைபெறும் இக்கோயலில் தரிசனத்திற்காக காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கிறது .பாஞ்சராத்திர ஆகம முறைப்படி பூஜை நடைபெறுகிறது. 

விசேஷ நாட்கள்:

வருடப்பிறப்பு உற்சவங்கள், புரட்டாசி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீ ஜெயந்தி, திருக்கார்த்திகை, ஆவணி பவித்திர உற்சவம் ஆகியவற்றுடன் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் சாற்றும் முறை உற்சவங்களும் நடைபெறுகின்றன. 

சிறப்பு:

பொதுவாக பெருமாள் வலது கையில் சக்கரத்தையும் இடது கையில் சங்கையும் வைத்திருப்பார். இந்தக் கோயிலில் வலது கையில் சங்கையும் இடது கையில் சக்கரத்தையும் வைத்திருப்பது தனிச் சிறப்பு. 

பிரார்த்தனை:

கண்ணோய் தீரவும், கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கவும் வேண்டுதல் செய்கிறார்கள். 

நேர்த்திக்கடன்: 

பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமிக்கு வஸ்திரம், துளசி மாலை சார்த்தி சிறப்பு திருமஞ்சனம் செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். 

இதையும் படியுங்கள்:
நேரம் - அது ரொம்ப முக்கியம்!
ராஜகோபால சுவாமி...

சதுர்வேதி மங்கலம் பெயர் சிறப்பு:

பல்லவர் காலத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இத்திருக்கோவில் அமைந்திருக்கும் ஊருக்கு மணிமங்கலம் என்று பெயர் வழங்கப்பட்டாலும், சோழர் காலத்தில் லோகமாதேவி சதுர்வேதிமங்கலம் எனவும், ராஜாதி ராஜ ராஜேந்திரன் மற்றும் வீர ராஜேந்திரன் காலத்தில் ராஜ சூடாமணி சதுர்வேதிமங்கலம் எனவும், குலோத்துங்க சோழர் காலத்தில் பாண்டியனை இருமுடி வெற்றி கொண்ட சோழ சதுர்வேதி மங்கலம் எனவும் வழங்கப்பட்டது. பின்னர் வந்த சோழர் காலத்தில் கிராம சிகாமணி சதுர்வேதிமங்கலம் எனவும் குறிக்கப்படுகிறது. நான்கு வேதமும் ஓதும் மரபினருக்கு தானமாக வழங்கப்பட்ட கிராமமாக இருந்துள்ளது  இந்த மணிமங்கலம் என்னும் கிராமம். 

கல்வெட்டுக் குறிப்பு:

இத்திருக்கோயில் கல்வெட்டுகளில் 'காமகோடி விண்ணகர் 'எனவும், பரவர் வாரி விண்ணகர் எனவும், திருவைகுளம் எனவும் வழங்கப்படுகிறது . இந்தக் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளதை படித்துப் பார்த்தால் துவாரபுரி தேவன் எனவும் வண்டுவார் பதி எனவும் இறைவன் வழங்கப்படுகிறார். (ஆதலால் வண்டுவார் பதி எனப்படும் பகுதி தற்போது வண்டலூர் என பெயர் மாற்றம் பெற்றிருக்கலாம் அல்லது வண்டுவாஞ்சேரி என்னும் பகுதியாகவும் இருந்திருக்கலாம் என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்தாக உள்ளது.)

மேலும் இத்திரு கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளதை பற்றியும் சண்டைகள் நடந்துள்ளது பற்றியும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இன்னும் சொல்லப்போனால், இத்திருக்கோயிலின் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள யோக நரசிம்மருக்கு விளக்கேற்றுவதற்காக தனியாக நிலம் வழங்கப்பட்டு இருப்பதையும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. 

இத்திருக்கோயிலின் உப கோயிலாக வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. ஆன்மீகப் பயணம் செய்பவர்கள்  மற்றும் கண் நோய் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து ஒரு முறை பிரார்த்தனை செய்து செல்லலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com