புதுக்கோட்டை சமஸ்தானத்தின் குலதெய்வமாக விளங்கும் பிரகதாம்பாள், மூலவர் கோகணேஸ்வரர், மகிழ வனநாதர் என்ற திருப்பெயருடனும், அம்பாள் பிரகதாம்பாள், மங்களாம்பிகை என்ற பெயருடனும் காட்சி தரும் அழகிய திருத்தலம் அரைக்காசு அம்மன் ஆலயம். தல விருட்சம் மகிழ மரம். தீர்த்தம் மங்கள தீர்த்தம். புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ளது இக்கோவில். புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தல பெருமை:
சிவபெருமான் காமதேனுவுக்கு மோட்சம் தரக் காரணமாக இருந்த சிவத்தலம் இது . ஈசன் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். புதுக்கோட்டை மன்னரோடு நேருக்கு நேர் பேசிய தெய்வம் என்ற வரலாற்று கதை உள்ளதால் இந்த அம்பாளை 'பேசும் தெய்வம்' என்றே அழைக்கின்றனர். மிகவும் பழமையான பாறையின் மீது கட்டப்பட்ட குடைவரைக் கோவில் இது.
அரைக்காசு அம்மன் பெயர் காரணம்:
ஒருமுறை புதுக்கோட்டையை ஆண்ட விஜய நகர பேரரசர் ஒரு முக்கிய ஆவணத்தை இழக்க, அதை கண்டுபிடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் பயனற்று போக, இங்குள்ள அம்மனிடம் பிரார்த்தனை செய்தார். காணாமல் போன ஆவணம் கிடைத்தது. மன்னன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தனது நன்றியை தெரிவிக்கும் வகையில் அரைக்காசு நாணயத்தின் ஒரு பக்கத்தில் பிரகதாம்பாளின் படத்தை பொறித்து பண்டிகை சமயங்களில் அந்த நாணயங்களை குடி மக்களுக்கு விநியோகம் செய்தார். அந்த நாட்களில் அரைக்காசு நாணயங்கள் அரை வட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டன. அன்றிலிருந்து அம்மன் 'அரைக்காசு அம்மன்' என்று அழைக்கப்படுகிறாள்.
இங்கு அரைக்காசு அம்மன் தனி சன்னதியில் வீற்றிருக்கிறாள். ஏதேனும் பொருள் தொலைந்தால் இந்த அரைக்காசு அம்மனுக்கு வேண்டிக்கொண்டு சிறிது வெல்லத்தை எடுத்து நைவேத்தியம் செய்ய உடனே கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருகிறது.
கோவிலின் சிறப்பு:
இக்கோவில் மலையை குடைந்து உருவாக்கப்பட்டது. மண்டபத்தின் நடுவே பிள்ளையாரும், தட்க்ஷிணாமூர்த்தியும் ஒரே சன்னதியில் அமைந்திருப்பது அபூர்வமான அமைப்பு என்கின்றனர். அதையடுத்து கோகர்ணேஸ்வரர் சந்நிதி உள்ளது. தென்திசை நோக்கி கங்காதரரும், கொடிமரம் வந்து படிகள் வழியே மேலே சென்றால் சுனை இருப்பதும் தெரியும். இதுவே கங்கா தீர்ததம் என்று அழைக்கப்படுகிறது.
இக்கோவிலில் நவகிரகங்கள் கிடையாது. சூரியன் சந்திரன் மட்டுமே உள்ளனர். இத்தலத்தின் ஆதி மூர்த்தி மகிழவனநாதர். இந்த லிங்கத்தின் மீது பசுவின் காலடி சுவடுகள் பதிந்திருப்பதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
தேவேந்திரனால் காமதேனுவுக்கு சாபம் ஏற்பட்டு பூலோகத்துக்கு வந்து, கபில மகரிஷி, மங்கள மகரிஷி போன்றவரை வணங்கி சாபம் நீங்க வழி கேட்க, அவர்களோ தினம்தோறும் காசி போய் கங்கை நீரைக் கொண்டு வந்து ஈசனுக்கு அபிஷேகம் செய்துவிட்டு மீதியை பாறையைக் கீறி அதில் விடச் சொல்கிறார்கள். காமதேனுவின் பக்தியை சோதிக்க ஈசன் புலி ரூபத்தில் திருவேங்கைவாசல் வந்து சாப்பிட்டு விடுவேன் என்று பயமுறுத்த, பசுவோ, 'விரத பூஜையை முடித்துவிட்டு வருகிறேன்' என புலியிடம் சொல்லிச் சென்றது. சுவாமிக்கு அபிஷேகம் செய்துவிட்டு மீண்டும் செல்ல அங்கு காமதேனுவுக்கு ஈசன் காட்சி தந்து மோட்சமும் தருகிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்தது இத் திருத்தலம்.
பிரார்த்தனை:
இத்தலத்து ஈசனை வணங்க விமோசனம் கிடைக்கும். ஏதேனும் பொருள் தொலைந்தால் அரைக்காசு அம்மனுக்கு வேண்டிக்கொண்டு சிறிது வெல்லத்தை எடுத்து வைத்து விட்டு தேட உடனே கிடைத்துவிடும். அத்துடன் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் பிரார்த்தனை நிறைவேறியதும் திரவிய பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்துவிட்டு செல்கிறார்கள்.
கோவில் காலை 6:00 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
குறிப்பு:
சென்னைக்கு அருகில்:
சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூர் மிருகக்காட்சி சாலைக்கு அருகில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையை ஒட்டியுள்ள ரத்தினமங்கலம் என்னும் அழகிய கிராமத்திலும் அரைக்காசம்மன் கோவில் அமைந்துள்ளது. புதுக்கோட்டை சென்று தரிசிக்க இயலாதவர்கள் இங்கு சென்று வரலாம்.