
கன்னியாகுமரியில் உள்ள பகவதியம்மனை பக்தர்கள் கன்னித்தாயாக வழிப்படுகிறார்கள். இக்கோவில் 108 சக்தி பீடங்களுள் ஒன்றாகும். 3000 ஆண்டுகள் பழமை பொருந்திய இக்கோவிலை பற்றிய குறிப்புகள் பல நூல்களில் உள்ளது. பரசுராமரால் இக்கோவில் கடற்கரைக்கு அருகிலே கட்டப்பட்டு கன்னியாகுமரி அம்மனின் சிலை நிறுவப்பட்டு அன்றிலிருந்து வழிப்படப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கன்னியாகுமரி அம்மன் தாயிடம் யோகசக்தி நிறைந்த ஒளிப்பொருந்திய மூக்குத்தி வந்த கதையைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
திருவிதாங்கூர் பகுதியில் வசித்து வந்த பனையேறும் தொழிலாளி ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்தது. நான்காவது குழந்தையும் பெண்ணாக பிறந்தது. இனி பெண் குழந்தை பிறந்தால் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்று சபதம் செய்தார். அடுத்ததும் பெண்ணாகவே பிறக்க உயிரை விட முடிவெடுத்தார். அருகில் இருந்த பாம்பு புற்றுக்குள் தனது கைகளை விட்டார். உள்ளே பாம்பு இருந்தால் தன்னை கடிக்கட்டும் என்பது அவரது எண்ணம்.
ஆனால் அவர் உள்ளே கைவிட்டதும் சூடாக அவர் கைகளுக்கு ஏதோ தென்பட்டது. அது என்னவென்று வெளியே எடுத்து பார்த்தவருக்கு மிக பெரிய ஆச்சர்யம். அவருக்கு பாம்பு புற்றுக்குள் இருந்து ஒளிப்பொருந்திய மாணிக்க கல் கிடைத்தது. அதை மன்னரிடம் எடுத்துச்சென்று கொடுத்தார். அந்த விலைமதிக்க முடியாத மாணிக்க கல்லுக்கு பதில் மன்னர் அந்த தொழிலாளிக்கு பொன்னையும், பொருளையும் அள்ளிக்கொடுத்தார்.
அன்று இரவு மன்னரின் கனவில் ஒரு சிறுமி தோன்றி, ‘அந்த மாணிக்க கல்லில் எனக்கு ஒரு மூக்குத்தி செய்து போடக்கூடாதா?’ என்று கேட்டார். கனவில் வந்தது அந்த ஊரை சேர்ந்த அம்மன் என்பதை அறிந்துக்கொண்ட மன்னர். அம்மனுக்கு மூக்குத்தியை செய்து அணிவித்தார்.
அம்மனின் மூக்குத்தி வெளிச்சம் கடற்கரையில் பட்டு கலங்கரை விளக்கத்தின் வெளிச்சத்தை விட அதிகமாக ஜொலித்தது. இதனால், படகுகள் திசைமாறி சென்றன. அவ்வளவு ஒளிப்பொருந்திய மூக்குத்தியை உடைய அம்மன்தான் கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆவார். எனவே, ஆலயத்தின் கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு தெற்கு வாசல் வழியாக அம்மனை தரிசிக்கும் முறை வழக்கத்திற்கு வந்தது.