
பங்குனி உத்திரத் திருவிழா திருவான்மியூர் மக்களுக்கு ஊர் கூடி வடம் இழுக்கும் தேர்த் திருவிழாவாக பெரும் கொண்டாட்டமாக அமைகிறது. ஆம். தியாகராஜர் திருவிழாவிற்கு புகழ்பெற்ற உபய விடங்க தளங்களில் ஒன்றானதும் அருணகிரிநாதர், தண்டபாணி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் போன்ற ஆன்மீக சான்றோர் பாடிய திருவருள் பெற்றதுமான அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் 13 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவில் முக்கிய அம்சமாக கருதப்படும் தேர்த் திருவிழா, தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது.
இது குறித்து அக்கோவிலின் நிர்வாகக் குழுவின் தலைவரான ராஜப்பா அவர்களை சந்தித்தபோது தேர் பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
"தொண்டை வளநாட்டின் தேவாரத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழும் 1300 வருடங்கள் பழமையான அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் இறைவன் வாதை நீக்கும் வான்மியூர் ஈசனாக நம்பிக்கையுடன் நாடி வருபவருக்கு நன்மைகள் அருள்பவராக உறைகிறார்.
திருவொற்றியூர் திருக்கச்சூர் கொண்டு தியாகராஜர் திருவிழாவிற்கு புகழ்பெற்ற உபயவிடங்க தளங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது. சேதமில்லாத திருவான்மியூர் என்று புகழப்படும் திருக்கோவிலில் அருள்மிகு தியாகராஜ ஸ்வாமிக்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பங்குனி திங்கள் 18ஆம் நாள் (1.4.2025) செவ்வாய்க்கிழமை முதல் பங்குனி திங்கள் முப்பதாம் நாள் (13. 04 2025) ஞாயிற்றுக்கிழமை முடிய மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் இந்த தேர்த்திருவிழா மக்களிடையே பெரும் உற்சாகத்தை தருவதாக அமையும்.
மொட்டைக் கோபுரமாக இருந்தபோது 150 வருடம் முன் தேர் இருந்திருக்கிறது என்கின்றனர். அதன் பின் வந்த வருடங்களில் தேரின்றி மாட்டு வண்டியில்தான் சுவாமி ஊர்வலம் வந்துள்ளார். 1968 ல் மகா பெரியவர் உத்தரவுப்படி வெள்ளிக்கிழமை விழாக்குழு துவங்கப்பட்டு கோவிலின் முன்னேற்றம் துவங்கியது.
பல்வேறு துறைகளில் இருந்தவர்கள் சுமார் 15 பேர் சிறுவயது முதலே இந்தக் குழுவில் இணைந்து கோவில் முன்னேற்றத்துக்காக ஒருங்கிணைந்து செயல்பட்டோம். இன்றுவரை செயல்பட்டு வருகிறோம். கோவில் கோபுரம் முதல், 12 முறை கும்பாபிஷேகம் நிகழ்த்தியது, பெரிய தேர் உருவாக்கியது என ஈசனருளால் பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.
1997ல் சிறிய தேர் செய்து வலம் வந்தது. மக்கள் பெரிய தேராக இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கருத 2020 ல் அதற்கான பணிகள் துவங்கப்பட்டு 2023 ல் நிறைவு பெற்றது. முதல் வெள்ளோட்டம் (2023) மார்ச் 2 ல் வெற்றிகரமாக நிகழ்ந்தது.
55 அடி உயரமும் 55 டன் எடையுடன் சென்னையில் உள்ள தேர்களிலேயே பெரிய தேர் எனும் சிறப்பு கொண்டது இந்தத் தேர். சுமார் 3 கோடி செலவில் இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டீக் வுட்டினால் செதுக்கப்பட்டு, ஸ்தல வரலாறு இயம்பும் 350 உருவங்களுடன், புகழ்பெற்ற கஜேந்திர ஸ்தபதி தலைமையில், கள்ளக்குறிச்சி சிற்பிகள் கைவண்ணத்தில், ஆறே மாதத்தில் உருவானது என்பது சிறப்பு.
பங்குனி 20 ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் இந்த விழாவில் தினந்தோறும் சந்திரசேகரர் பலவித வாகனங்களில் பலவிதமான திருக்கோலங்களில் அழகியலுடன் நான்கு மாட வீதிகளிலும் பல்லக்குகளில் வலம் வருகிறார்.
பங்குனி 26 புதன்கிழமையான இன்று சந்திரசேகரரின் அழகிய திருமேனியைத் தாங்கி விதவிதமான வண்ணப்பூச்சுகளும் மலர் அலங்காரங்களும் கண்களைக் கவர பல்லாயிரக்கணக்கான மக்கள் 150 அடி நீளமுள்ள வடத்தைப் பிடித்து இழுக்க திருவான்மியூரின் நான்கு மாட விதிகளையும் சுற்றி வரும் தேரின் அழகு கண்கொள்ளாக் காட்சி.
ஏழூர் சார்ந்த பெண்கள் இங்கு திரண்டு வந்து வடம் பிடிப்பது சிறப்பு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வீட்டுத் திருவிழாவாக எண்ணி இந்தத் திருவிழாவில் பங்கேற்கிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் எவ்வித இடையூறும் வராமல் இருக்க காவலர் பாதுகாப்புடன் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது" என்று முடித்தார்.
வேறு எங்கும் இல்லாத பல சிறப்பான ஆன்மீக அதிசயங்களைக் கொண்ட மருந்தீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழாவைக் காணும் வாய்ப்பு கிடைத்தால் (வரும் ஞாயிறு வரை ) தவிர்க்காமல் சென்று மகிழ்ந்து அருள்மிகு தியாகராஜரின் அருளைப் பெற்று வாருங்கள்.