
1. திருச்சியில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள திருவெள்ளரை புண்டரிகாட்ச பெருமாள் கோயில் தென்னாட்டில் முதல் வைணவத்தலம். இக்கோயிலின் முழு உரிமையும் இங்குள்ள செங்கமலவல்லி தாயாருக்கு தான். இக்கோயில் பங்குனி தேர் உலாவில் முதலில் செல்வது தாயார் தேர்தான். அதன் பிறகு தான் பெருமாள் தேர் செல்லும். வீதி உலா முடிந்தவுடன் தாயார் அனுமதி பெற்ற பிறகே பெருமாள் கோயிலில் நுழைய முடியும்.
2. சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில். வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள நான்காவது திருத்தலமான இது, வாயுலிங்க தலமாகும். இங்கு அருள்மிகு பெரிய நாயகி உடனுறை அருள்மிகு காமநாதீஸ்வரர் அருள்பாலிக்கிறார். 1190 முதல் 1260 வரையான காலத்தில் மகத தேசத்தை ஆண்ட வாணகோவரையர் ஆறகழூரில் மிகப் பிரம்மாண்ட அளவில் தேர் திருவிழாவை நடத்துவதை தங்களது பெருமையாக கருதினர்.
இங்கு தேரோட்டம் ராஜ வீதியில் பங்குனி உத்திர திருவிழாவின் போது பெரிய நாயகி சமேத ஸ்ரீ காமநாதிஸ்வரர், பூங்குழலி சமேத ஸ்ரீ சோழவேழ்வரர் மற்றும் ஸ்ரீ தேவி, பூ தேவி சமேதசமேத கரிவரத பெருமாள் என்ற வைணவ ஆலய தேரும் சேர்ந்து வருவது இங்கு மட்டுமே நடக்கும் அதிசயம்.
3. ஒசூர் அருகே கர்நாடகா எல்லையில் உள்ளது 'உஸ்கர் கிராமம்'. இங்கு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மத்தூரம்மன் கோயில் உள்ளது. இங்கு நடக்கும் பங்குனி தேர்த்திருவிழா விஷேசமானது. இவ்விழாவில் அலங்கரிக்கப்பட்ட 12 தேர்களை பக்தர்கள் இழுப்பது இல்லை. அந்த தேர்களை மாடுகள் இழுத்து ஊர்வலமாக வருவதை பக்தர்கள் பரவசத்துடன் பார்ப்பார்கள்.
4. பெரும்பாலான மாரியம்மன் கோயில்களில் அம்மன் அமர்ந்த கோலத்தில் தான் இருப்பார். ஆனால் திருப்பூர் கருவலூர் மாரியம்மன் கோயிலில் அம்மன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இங்கு பங்குனி உத்திரம் தேர்த்திருவிழா விஷேசமானது. இதற்காக இந்த அம்மன் 15 நாள் உண்ணாவிரதம் இருக்கிறார்.
5. பொதுவாக கோயில்களில் பங்குனி உத்திரம் அன்று திருக்கல்யாணம் நடத்தப்படும். ஆனால் பெரம்பலூர் செட்டிக்குளம் தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திரம் சமயத்தில் மூன்று திருக்கல்யாணம் நடத்தப்படும். இக்கோயில் எதிராக உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரம் அன்று மட்டும் மலையிலிருந்து உற்சவர் இறங்கி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
6. தேனி மாவட்டம் தேவாரத்தில் உள்ளது வைகுண்ட பெருமாள் கோயில் இங்குள்ள மகாலட்சுமி தாயாருக்கு பங்குனி உத்திரம் அன்று மாதுளம் பழ முத்துகளால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இத்தல விருட்சமும் மாதுளை தான். மகாலட்சுமி தாயாருக்கு மாதுளை முத்துகளால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.
7. கோவை பேரூர் பட்டீஸ்வரர் சிவன்கோயிலில் பெருமாள் கோயிலில் உள்ளது போன்ற சொர்க்க வாசல் உள்ளது. பங்குனி உத்திரம் அன்று இங்கு நடராஜர் மற்றும் சிவகாமி வீதி உலா உள்ளே நடக்கும். உலா முடிந்து திரும்பும் போது சிவகாமி மட்டும் இந்த செர்க்கவாசல் வழியாக வருவார்.
8. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ஒரு பெரிய தென்னந்தோப்பிற்குள் ஸ்ரீ சிலுவையில் அய்யனார் கோயில் உள்ளது. இங்கே பங்குனி உத்திரத்தன்று கொடை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கே பங்குனி மாதம் 9 ம் நாளில் காலை 6மணியிலிருந்து 6.40 க்குள் 600 மீட்டர் தென்னந்தோப்பு, 60 அடி நீளம் உள்ள முன் மண்டபம், 10 அட நீளமுள்ள நடு மண்டபம், 8 அடி குறுகிய கருவறை தாண்டி மூலஸ்தானம். இத்தனை தடுப்புகளையும் தாண்டி சூரிய ஒளிக்கதிர்கள் சிலுவையில் அய்யனார், பூரண வள்ளி மீது சிரசில் முதலில் மிளிர்ந்து, சீராக பாதம் வரை பட்டு மறைகிறது. இந்த அதிசய நிகழ்வு வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நடக்கும். சூரிய ஒளி விழுவதற்கு வாய்ப்பே இல்லாத இடத்தில் சூரிய ஒளி மிளிர்வதை அதிசயமாக பார்க்கிறார்கள்.