சித்திரையில் சித்திரை!

சித்திரையில் சித்திரை!

ச்சர்யங்கள் பல நிறைந்த மாதம் சித்திரை. சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரம் கூடிய நாளுக்கு தனிச் சிறப்பு உண்டு. (நாளை சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்) தம் ஆசார்யனான, நம்மாழ்வாரையே தமது வாழ்க்கையாகக் கொண்ட மதுரகவியாழ்வார் அவதாரம் செய்தது சித்திரை மாதம் சித்திரை  நட்சத்திரத்தில். தமது ஆசார்யரான, ராமானுஜரின்  வாக்கையே தம் வாழ்க்கையாய் கொண்ட அனந்தாழ்வார் அவதரித்ததும் சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்தில்தான். குரு பக்தியின் சிறப்பைக் காட்டும் இரு பாகவதோத்தமர்களை இந்த தரணிக்குத் தந்த பெருமை சித்திரையின் சித்திரைக்கு உண்டு.

’தேவு மற்றறியேன்’ என்று தம் குருவான நம்மாழ்வாரை மட்டுமே போற்றி, ’கண்ணி நுண் சிறுதாம்பு’ என்ற 11 பாசுரங்கள் கொண்ட பிரபந்தத்தை அருளியவர் மதுரகவியாழ்வார். பன்னிரு ஆழ்வார்களில் அனைவருமே இறைவனின் பெருமைகளைப் போற்றி பாசுரங்கள் பாடியபோது, தம் ஆசார்யனையே தெய்வமாகப் பார்த்து, பாவித்து அவர் தம் பெருமையைப் போற்றி அதனையே தம் வாக்கில் ஏற்றி ஆழ்வார்களில் நடு நாயகமாய் விளங்குபவர் மதுரகவி ஆழ்வார்.

’பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும்

செயல் நன்றாகத் திருத்திப்பணிகொள்வான்’

என்று ஒரு குருவின் உயர்ந்த குணங்களை மட்டுமே சொல்லக்கூடியவை அந்த 11 பாசுரங்கள். நம்மால் நம் குருவுக்கு ஒரு பயனும் இல்லை என்று  நன்கு தெரிந்திருந்தும், நம்மை திருத்தி பணி கொண்டு மாற்றக்கூடியவர் நம் குருதானே? என்று அழகாக குருவின் அருளை  நமக்காக அருளியவர் மதுரகவியாழ்வார். இறைவனை நம்மால் நேராகச் சென்று அடைந்து விடமுடியாது. ஒரு குருவின் சிபாரிசு கடிதம் (குரு அருள்) என்பது இருந்தால் மட்டுமே இறை அருள் என்பது நமக்குக் கிடைக்கும் என்பதை மதுரகவியாழ்வார் தம் பாசுரங்களின் வழியே நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார்.

 இத்தனைக்கும் மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரை விட வயதில் மிகவும் மூத்தவர். ஆனாலும், நம்மாழ்வாரை தம் குருவாகக் கொண்டு, அவரையே சரணடைந்தார். துவாபர யுகத்தின் இறுதியில் பிறந்தவர் மதுரகவி ஆழ்வார். கலியுகத்தில் தோன்றியவர் நம்மாழ்வார். இறைவனை குருவாகப் பார்த்தவர்கள் பிற ஆழ்வார்கள். ஆனால், தம் குருவையே இறைவனாகப் பார்த்தவர் மதுரகவிஆழ்வார்தான். அதனாலன்றோ, சித்திரையில் சித்திரைக்கு தனி ஒரு ஏற்றம் என்று அருளினார் மணவாள மாமுனிகளும் தனது, ’உபதேச ரத்தின மாலையில்’

’ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த

சீராரும் சித்திரையில் சித்திரை நாள்- பாருலகில்

மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும்

உற்றது எமக்கென்று நெஞ்சே ஓர்’ என்று கூறுகிறார்.

னி, அனந்தாழ்வான் பக்கம் வருவோம். ஸ்ரீரங்கத்தில் ஒரு நாள் பகவத் ராமானுஜர் தம் சிஷ்யர்களுக்கு  நாலாயிர திவ்ய பிரபந்த காலக்ஷேபம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திருமலையப்பன் ராமானுஜரின் கனவில் தோன்றி, ’சிந்துப்பூ மகிழும் திருவேங்கடம்’ எனும் திருவாய்மொழி வரியைச் சொல்லி, ’ஆயிரம் பூக்கள் இத்திருமலையில் மலர்ந்திருக்கும்போது அதைப் பறித்து வந்து எனக்கு புஷ்ப கைங்கர்யம் செய்ய யாருமே இந்தத் திருமலையில் இல்லையே’ என்று கேட்டு விட்டு மறைய, அடுத்த நாள் அந்தத் திருவாய்மொழியை தம் சிஷ்யர்களுக்கு விளக்கி, ’புஷ்ப மண்டபமான அந்தத் திருமலையில் ஒரு அழகான நந்தவனம் அமைக்க வேண்டும். அந்த நந்தவனத்திலிருந்தே பூக்களை எடுத்து மாலையாகக் கட்டி அவனுக்கு அனுதினமும் புஷ்ப கைங்கர்யம் செய்யக் கூடியவர்கள் இங்கே யாரேனும் உள்ளீரா?’ என சிஷ்யர்களைப் பார்த்து  ஸ்வாமி ராமானுஜர் கேட்க, உடனடியாக அனந்தார்யா, (இதுவே அவரது இயற்பெயர்) ’இதோ நான் செல்கிறேன்’ என்று கூட்டத்திலிருந்து குரல் கொடுத்தார் . அவரைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் சிந்திய ராமானுஜர், ’நீரே ஆண்பிள்ளை’ என்று அவரைப் பார்த்து அழைத்ததாலன்றோ அவர் அனந்தான் பிள்ளை என்றே அழைக்கப்பெற்றார்.

’ஆசார்யர் ஆசைப்பட்டார் நந்தவனம் அமைக்க. அவரது ஆசியோடு அந்த நந்தவனத்தை தான் அங்கே சென்று அமைத்திடுவோம்’ என்று தம் நிறைமாத கர்ப்பிணியோடு திருமலைக்கு கிளம்பியே விட்டார் அனந்தாழ்வார். அடர்ந்த காட்டுப் பகுதி ஆயிற்றே. அங்கே எப்படி செல்வது, யார் வீட்டில் தங்குவது, தனி ஒரு ஆளாக நந்தவனம் அமைக்கும் வேலையை எப்படிச் செய்வது?  நிறைமாத கர்ப்பிணியை யார் அங்கே பார்த்துக் கொள்வார்கள் என்று எந்த கேள்விகளையும் தம் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் தம் குருவின் வாக்கையே வேள்வியாய் கொண்டு திருமலைக்குச் சென்று  நந்தவனம்  அமைத்தே விட்டார் அனந்தாழ்வார். குருவின் வாக்கை வாழ்க்கையாய் கொண்டு வாழ்ந்த இந்த சித்திரப் புதல்வர், திருவேங்கடமுடையானின் பரிபூரண அருளுக்குப் பாத்திரமாகி நின்றார்.

சித்திரை சித்திரையில் பிறந்த இந்த இரு மஹனீயர்களையும் என்றுமே நினைவில் கொண்டு நலம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com