

சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில் (Chottanikkara Bhagavathy Temple) கேரளாவில் சக்தி வாய்ந்த பெண் தெய்வமாக கருதப்படுகிறது. இந்த கோவில் எர்ணாகுளத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோட்டானிக்கரை இடத்தில் அமைந்துள்ளது.
குறிப்பாக பில்லி சூனியத்திற்கு நிவர்த்தி செய்யப்படும் ஸ்தலமாக உள்ளது. திருமண தடைகள் நீங்கவும் குழந்தை பேறு கிடைக்கவும் நீண்ட ஆயுளுக்காகவும் இந்த கோவிலுக்கு எண்ணற்ற பக்தர்கள் வருகின்றனர். அன்னை பராசக்தி ஜோதி வடிவில் தோன்றி மும்மூர்த்திகளுக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் காட்சி கொடுத்த இடமாகும். இந்தக் கோவில் சபரிமலை ஐயப்பனுக்கு நிகராக கருதப்படுகிறது.
பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது. பகவதி அம்மன் வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. அன்னை பகவதியை திருமால் உடன் சேர்த்து அம்மே நாராயணா என்று வழிபடுகிறார்கள். அதாவது நாராயணியும் நாராயணனும் ஒன்று என்ற பொருள்படும். அன்னை பகவதி தினசரி மூன்று ரூபத்தில் காட்சி அளிக்கிறார்கள். காலையில் வெண்ணிற ஆடையில் சரஸ்வதி ரூபத்திலும், மாலையில் சிவப்பு நிற புடவையில் மகாலட்சுமி ஆகவும், இரவில் கருநீலபுடவையில் துர்க்கையாகவும் காட்சி அளித்து வருகிறார்கள்.
பகல் உச்சி கால பூஜையிலும் இரவு உச்ச பூஜைகளும் மகாகாளியாக அருள்பாலிக்கிறார். இந்த கோவில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோவில் ஆகும்.
பெண்களுக்கு திருமண தடை அகலவும் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பில்லி சூனியத்திலிருந்து விடுபடவும் இந்த அம்மன் காக்கும் தெய்வமாக விளங்குகிறாள். மூன்றரை அடி உயரமுள்ள இந்த சிலை ருத்ராட்சத்தால் செய்யப்பட்டது. காலையில் நிர்மல்யத்திற்கு பிறகு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது.
முற்காலத்தில் இந்த இடத்தில் காட்டுவாசிகள் அதிகம் வசித்து வந்தனர். ஆதிவாசிகளின் தலைவன் கண்ணப்பன் என்பவர் தினசரி பசு மாடுகளை கொன்று அதன் இறைச்சியை சாப்பிட்டு வந்தான். ஒரு நாள் அவரது மகள் தன் தந்தையிடம் இருந்து ஒரு பசுவை காப்பாற்றினார். மகள் மீது இருந்த பாசத்தினால் கண்ணப்பனும் அந்த பசுவை கொல்லாமல் விட்டுவிட்டார். இனி பசுக்களை கொல்வதில்லை என்ற முடிவுக்கு வந்தார். இருப்பினும் அவர் முன்பு செய்த பாவத்தால் தன் மகள் இறக்கும் நிலை ஏற்பட்டது. அவரது கனவில் மகளால் காப்பாற்றப்பட்ட பசு தோன்றியது. வந்த பசு தேவி என உணர்ந்தார். அந்தப் பசு கண்ணப்பன் கனவில் தோன்றி மாட்டு தொழுவத்தில் தான் சிலையாக இருப்பதாகவும் தன் அருகில் மகாவிஷ்ணு சிலையும் இருக்கும் எனக் கூறி மறைந்தது.
மறுநாள் கண்ணப்பன் மாட்டு தொழுவத்தில் போய் பார்க்கும் பொழுது அங்கு அம்மன் சிலையும் விஷ்ணு சிலையும் காணப்பட்டது. அதை சிறிய கோவிலாக மாற்றி கண்ணப்பன் வழிபட்டு வந்தார். பின்னர் அந்த இடம் புதர்கள் மண்டி காடாக மாறியது. இந்த நிலையில் காட்டில் ஒரு பெண், புல் வெட்டும் போது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ரத்தம் வடிந்தது. இந்தச் செய்தி அங்குள்ள பிரபலமான நம்பூதிரி இடம் கூறப்பட்டது.
அவர் தேவ பிரசன்னம் பார்த்து, தேவியின் பெருமையை உணர்ந்து மீண்டும் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்தார். இதுவே சோட்டானிக்கரை அம்மன் அருள் பாலிக்கும் இடமாக மாறியது. இங்குள்ள கொடி மரத்தின் அருகில் இருந்து பார்த்தால் மூலஸ்தானத்தில் உள்ள அம்மனை தரிசிக்கலாம்.
குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக கோவிலில் வடபுறத்தில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் பூஜை செய்து வழிபாடு நடத்தி அதன் பின்னர் பள்ளியில் சேர்க்கின்றனர். இங்கு 12,000 புஷ்பாஞ்சலி செய்து அம்மனுக்கு சிகப்பு நிற புடவை அணிவித்து வழிபாடு செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.
ஆதி காலத்தில் இந்த கோவிலுக்கு உயிர் பலி கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த செயல் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது சைவ வழிபாடு மட்டுமே நடைபெற்று வருகிறது.
பில்லி சூனியம் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து பூரண குணமடைந்து செல்கிறார்கள். இங்கு குருதி பூஜை சிறப்பாக நடைபெறும். தினசரி குருதி பூஜை நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மாசி மகத்தில் சோட்டானிக்கரை மகம் மிகவும் கோலாகலமாக நடைபெறும்.
பெண்களுக்கு திருமணம் நடைபெறவும் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இந்த கோவிலுக்கு எண்ணற்ற பெண்கள் வருகை தருகிறார்கள். தேவியின் வலது புறம் மகாவிஷ்ணு காணப்படுகிறார். கேரளாவில் பெண்கள் சபரிமலை என போற்றப்படுகிறது.