
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரி, மூன்று நரசிம்மர் கோவில்களைக் கொண்ட ஒரு சிறப்புமிக்க தலமாகும். இதில் மலை உச்சியில் அமைந்துள்ள கண்டல நரசிம்மர்(Gandala Narasimhar) கோவில் மிகவும் அமைதியான சூழலில் அமைந்துள்ளது. இது மலை அடிவாரத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் மற்றும் மலையில் உள்ள பானக நரசிம்மர் கோயில்களுக்கு அடுத்த மூன்றாவது கோவிலாகும். மலையின் உச்சியில் உள்ள கண்டாலய நரசிம்மர் கோவில் புகழ்பெற்றது. தென்னிந்தியாவின் மிக உயரமான கோபுரங்களில் ஒன்றை கொண்டுள்ள மங்களகிரி கோபுரம் தனித்துவமானது. 153 அடி உயரமும், 49 அடி அகலமும் கொண்டு, 11 நிலைகளைக் கொண்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங்கள் புராதனம் மிக்க கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளன. மங்களகிரி, வேதாத்ரி, மட்டப்பல்லி, வாடப்பல்லி மற்றும் கேதவரம் என்பவையே அந்த பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங்கள் ஆகும். மங்களகிரி மலையை பத்ரகிரி, பீமாத்ரி என்றும் அழைக்கின்றார்கள். இங்கு மலையடிவாரத்திலும், மலையின் நடுப்பகுதியிலும், மலை உச்சியிலும் என 3 லட்சுமி நரசிம்மர் கோவில்கள் உள்ளன.
மங்களகிரி மலையின் மிக உயர்ந்த உச்சியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நரசிம்மர் சுயம்பு மூர்த்தியாக, ஆக்ரோஷமான வடிவத்திற்கு பதிலாக சாந்தமான வடிவத்தில் காட்சி தருகிறார். இங்கு சிற்பங்கள் அல்லது விக்கிரகங்கள் எதுவும் இல்லை. பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். மங்களகிரி மலை பார்பதற்கு ஒரு யானை படுத்திருப்பது போன்ற அமைப்பில் உள்ளது.
மங்களகிரியில் மொத்தம் மூன்று நரசிம்மர் சுவாமி கோவில்கள் உள்ளன. ஒன்று மலையின் அடிவாரத்தில் லஷ்மி நரசிம்மர் சன்னதி உள்ளது. இரண்டாவதாக மலையின் பாதியில் பனகல நரசிம்மர் சுவாமி கோவில் உள்ளது. பித்தளை வாயுடன் கூடிய நரசிம்மருக்கு பானகத்தை நைவேத்தியமாக அருளுவது இத்தலத்தின் சிறப்பாகும்.
மூன்றாவதாக மலை உச்சியில் கண்டல நரசிம்மர் கோவில் உள்ளது. மலைக்கோவிலுக்கு செல்ல மங்களகிரி அடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் உள்ளன. இங்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பதால், மலைக்கு கார், ஆட்டோ செல்லும் வகையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு போடப்பட்டுள்ளது. மலை உச்சியில் உள்ள கண்டல நரசிம்மர் கோவிலில் சிற்பங்கள் எதுவும் இல்லை. சுயம்புவாக நரசிம்ம மூர்த்தி இங்கு காணப்படுகிறார்.
மலையடிவாரத்தில் 153 அடி உயர கோபுரம், 49 அடி அகலமுடன், 11 நிலைகளைக் கொண்டு காட்சி தருகிறது. இந்த கோபுரம் கட்டி முடித்ததும் சற்று திசை மாறி நின்றதாம் கட்டடக் கலைஞர்கள் திகைத்துப் போய் உடனடியாக காஞ்சிபுரத்திலிருந்து சிற்பிகளை வரவழைத்தனர். கோபுரத்தை ஆய்வு செய்த சிற்பிகள் கோபுரத்தின் எதிரில் ஒரு குளம் தோண்டினால் கோபுரத்தின் திசை சீராகும் என்று முடிவெடுத்தனர். அதன்படி குளம் வெட்டவே கோபுரம் கிழக்கு நோக்கி சரியான திசைக்கு திரும்பியது. இது தமிழகக் கலைஞர்கள் ஆந்திராவிற்கு செய்த மிகப்பெரிய கைங்கரியமாக போற்றப்படுகிறது. இந்த கோபுரம் தவிர மேற்கு, வடக்கு, தெற்கு திசைகளிலும் கோபுரங்கள் உள்ளன. வடக்கு கோபுரத்தை வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசலுக்காக திறக்கின்றனர்.
மலையடிவாரத்தில் உள்ள லஷ்மி நரசிம்மரை பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நரசிம்மருக்கு 108 சாளக்கிராம கற்களால் ஆன மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் வழங்கப்பட்ட சங்கு நரசிம்மரிடம் உள்ளது. இதை கிருஷ்ணரே பயன்படுத்தியதாக சொல்கின்றனர். சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட ரதமும் இங்குள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள குண்டூரில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் மங்களகிரி உள்ளது. இங்கு கோவில் காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.