
வாழப்பாடிக்கு அருகில், பேளூரில் உள்ளது தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில். இங்கே ஈசன் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிக்கிறார்.
கணம்புல்ல நாயனார் - பெரும் செல்வந்தர். ஈசன் சன்னிதியில் விளக்கேற்றும் பணியைத் தவறாது செய்து வந்த அவரின் பக்தியை சோதிக்க, வறுமையை உண்டாக்கினார் ஈசன். இருப்பினும், மனம் தளராமல் கணம்புல்லை அறுத்து அதை விற்று வரும் பணத்தில் விளக்கேற்றி வந்தார் அத்தொண்டர். ஒருநாள் அந்தப் புல்லும் விற்காமல்போக, உயிரைத் துச்சமாக எண்ணி, தலைமுடியையே திரியாக்கிப் பற்ற வைத்தார். அவரது பக்திக்கு மெச்சி ஈசன் அவருக்கு அருள் புரிந்தார்.
தான்தோன்றீஸ்வரர் ஆலயம் மிகவும் பழைமையானது. அர்ச்சுனன் இத்தலத்துக்கு தீர்த்த யாத்திரை வந்ததாகக் குறிப்பு உள்ளது. வசிஷ்டர் வேள்வி புரிந்ததால் ‘திருவேள்வியூர்’ என்றும், வெள்ளாற்றின் கரையில் கோயில் உள்ளதால் ‘வெள்ளூர்’ என்றும் அழைக்கப்பட்டு, பேளூர் என்று மருவியுள்ளது. பிரம்மாண்ட புராணத்தில் சூத முனிவர், இதன் மூர்த்தி, தலம், தீர்த்தப் பெருமைகளை கூறியுள்ளார். அர்ச்சுனனுக்கு ஹரியும், ஹரனும் ஒன்றெனக் காட்டி, பாசுபதாஸ்திரத்தை சிவன் வழங்கிய பெருமை கொண்ட திருத்தலம் இது.
வசிஷ்டர் வேண்டுகோளின்படி, தாமரை பீடத்தில் எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி, குபேரன் பொன்மாரி பொழிந்தார். அதனால், ஆவுடையில் இல்லாது தாமரை பீடத்தில் அருள்பாலிக்கும் குபேர சிவலிங்கத்தை இங்கே தரிசிக்கலாம்.
ஒருமுறை, மாணிக்கம் செட்டியார் என்பவர் மிளகு மூட்டைகளை எருதின் மீது ஏற்றி, வியாபாரம் செய்யச் சென்றார். இரவு ஆகிவிட்டதால், இங்கே தங்கினார். சமையல் செய்ய சுண்டைக் காய்களை ஒரு கல்லில் வைத்து நசுக்கியபோது, ‘எனக்கு தலை வலிக்கிறது. நீ வைத்திருக்கும் மிளகை அரைத்து பற்றுப்போடு’ என்று ஒரு குரல் கேட்டதாம்.
அவரோ, ’என்னி டம் உளுந்துதான் இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு, விடிந்ததும் அடுத்த ஊருக்குச் சென்றாராம். அங்கே மிளகு மூட்டைகளை விற்கத் திறந்தபோது, அத்தனையும் உளுந்தாக இருந்ததாம். இதனால் வருந்திய அவர் இறைவனை வேண்ட, அவை மீண்டும் மிளகாக மாறியதாம். திரும்பும் வழியில், தாம் சுண்டைக்காய் நசுக்கிய கல்லை ஆராய்ந்து பார்க்க, அது ஒரு சுயம்புலிங்கம் என்றறிந்து, தான்தோன்றி நாதரின் கருவறையை அவர் கட்டுவித்தார். மிளகு, உளுந்தாக மாறிய இடம் உளுந்தூர்பேட்டை எனப்பட்டது. பின்னர் இக்கோயில், 12ம் நூற்றாண்டில் பராந்தக சோழனால் விரிவாக்கிக் கட்டப்பட்டதாம்.
இக்கோயிலில் 2002ம் ஆண்டு 197 அடி உயர ராஜ-கோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கருவறையில் தான்தோன்றி ஈஸ்வரர் சற்று நீள் வடிவில் கட்சி தருகிறார். அம்பாளுக்கு தர்மசம்வர்த்தனி என்பது திருநாமம். நீல நிறத்தில் இருந்த பார்வதி, இங்கே வெள்ளாற்றில் குளித்து பொன்னிறமாகி, கௌரி என அழைக்கப்பட்டாராம்.
சன்னிதி கோஷ்டத்தில் கணபதி, பிரம்மா, தட்சிணாமூர்த்தி, துர்கை, பிட்சாடனர், பைரவர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிராகாரத்தில் கஜலக்ஷ்மி, முருகன் சன்னிதிகளையும், அறுபத்து மூவரையும் தரிசிக்கலாம். பிரதோஷ நந்திக்கு எதிரில் கையில் விளக்குடன் கணம்புல்லர் திருவுருவம் உள்ளது.
இது பிருத்வி ஸ்தலமாகப் போற்றப்படுகிறது. நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் எதுவானாலும் அந்நிலத்தில் இருந்து ஒரு கைப்பிடி மண் எடுத்து வந்து இறைவன் முன் வைத்து வழிபட, பிரச்னை தீரும். அதேபோன்று வீடு கட்டத் தொடங்கு முன்பாக 21 செங்கற்களைக் கொண்டு வந்து ஈசன் முன் வைத்து வழிபட்டு பதினெட்டு கற்களை இங்கு விட்டுவிட்டு மீதமுள்ள மூன்று கற்களை வைத்து கட்டடம் கட்ட ஆரம்பித்தால் தடையின்றி விரைவில் கட்டடம் பூர்த்தியாகும்.
சனி மகாபிரதோஷம், சங்கட ஹர சதுர்த்தி உள்ளிட்டவை விமரிசையாக நடத்தப்படுகிறது. ஆடி பதினெட்டு, விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சிவராத்திரி, திருவாதிரை, அன்னாபிஷேகம் முதலியவை விசேஷ திருநாட்கள்.
செல்லும் வழி: வாழப்பாடியில் இருந்து 4 கி.மீ. பேளூர் பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது கோயில்.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 11 வரை. மாலை 4 மணி முதல் 8 வரை.
-ராதா பாலு.