உடுக்கை சத்தம் கேட்டு தானாக நடை திறக்கும் அதிசய கோவில்... எங்க இருக்கு தெரியுமா?

உடுக்கை சத்தம் கேட்டு தானாக நடை திறக்கும் அதிசய கோவிலின் சிறப்பு மற்றும் அந்த கோவில் எங்குள்ளது என்பது குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
Deviramma Temple
Deviramma Temple
Published on

கர்நாடக மாநிலத்தில் சிக்கமகளூரு மாவட்டம் மல்லேனஹள்ளி அருகே உள்ளது பிண்டுகா என்ற கிராமம். இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற தேவிரம்மா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பின்புறம் கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் மலை உள்ளது. இந்த மலையின் உச்சியில், இந்த கோவிலின் தெய்வமான தேவிரம்மன் சிலை அமைந்திருக்கிறது. தேவிரம்மா தனது பக்தர்களை தீய சக்திகள் மற்றும் பிற எதிர்மறை சக்திகளிலிருந்து பாதுகாக்கக்கூடிய ஒரு சக்திவாய்ந்த தெய்வம் என்று நம்பப்படுகிறது.

இந்த கோவில் ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் (அதாவது தீபாவளியின் போது) மலை உச்சியில் உள்ள தேவிரம்மா சிலையை பக்தர்கள் தரிசனம் செய்ய திறக்கப்படும். மற்ற நாட்களில், கிராமத்தில் உள்ள கோவிலில் அம்மன் சிலை இருக்கும். கோவிலின் முகப்பில் பல்வேறு தெய்வங்கள் மற்றும் புராணக் காட்சிகளை சித்தரிக்கும் சிக்கலான செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும் சிற்பங்கள் உள்ளன.

தீபாவளி பண்டியையொட்டி இந்த கோவிலில் நடக்கும் தீப திருவிழாவை காண வரும் பக்தர்கள் மிகவும் கடினமான அந்த மலையின் உச்சியில் உள்ள அம்மனை தரிசிக்க மலை மீது ஏறி செல்வார்கள். எனினும் மற்ற நாட்களில் பக்தர்கள் இந்த மலை மீதுள்ள கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்ய அனுமதி அளிப்பது கிடையாது.

இதையும் படியுங்கள்:
தீபாவளிக்கு மட்டும் திறக்கும் கோயில்!
Deviramma Temple

இந்தாண்டு மலை உச்சியில் உள்ள தேவிரம்மனை தரிசிக்க பக்தர்களுக்கு 2 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பயபக்தியுடன் மலையின் உச்சிக்கு கரடுமுரடான பாதைகளில் ஏறிச்சென்று அம்மனை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த தேவிரம்மனை தரிசனம் செய்ய கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கடந்த சில மாதங்களாக கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பக்தர்கள் மலையின் மீது கயிற்றை பிடித்து ஏறி செல்ல வழிவகை செய்யப்பட்டு இருந்தது.

இந்த கோவிலில் ஒரு ஐதீகம் உள்ளது. அதாவது தீப திருவிழாவின்போது தேவிரம்மா கோவில் நடை சாத்தப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பம்பை உடுக்கை அடிக்கப்படும். அப்போது கோவில் நடை தானாக திறக்கும் என்பது ஐதீகம். அந்த நிகழ்வு நேற்று (அக்டோபர் 22-ம்தேதி) கோவிலில் நடந்தது.

அதாவது தீப திருவிழாவின்போது தேவிரம்மா கோவிலில், அம்மனுக்கு பூக்களால் விசேஷ பூஜைகளும் சிறப்பு அலங்காரமும் செய்யும் போது அம்மன் சிலை திரையால் மூடப்படும். அலங்காரம் முடிந்ததும் வேத மந்திரங்கள் முழங்க பம்பை உடுக்கை அடிக்கப்படும். அப்போது தேவிரம்மா முன்பு உள்ள திரை தானாக திறக்கும் என்பது ஐதீகம்.

அதன்படி உடுக்கை சத்தம் கேட்க, கேட்க அம்மன் முன் உள்ள திரை தானாகவே விலகி அம்மன் ஜெகஜோதியாக பக்தர்களுக்கு காட்சி தந்தாள். இந்த கண்கொள்ளா காட்சியை கண்டதுமே அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மெய் சிலிர்த்தனர். இதன்பிறகு மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதையும் படியுங்கள்:
ஆண்டுக்கு ஒருமுறை, 15 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோவில்!
Deviramma Temple

ஆண்டுதோறும் தீபாவளிக்கு மட்டுமே இந்த அரிய நிகழ்வு நடப்பதால் அந்த சமயத்தில் தேவிரம்மா கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் லட்சக்கணக்கான வெளிமாநில பக்தர்களின் வசதிக்காக கர்நாடக அரசு சார்பில் சிக்கமகளூருவில் இருந்து பிண்டுகாவுக்கு ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதும் வாடிக்கையாகும். இந்த கோவில் சிக்மகளூர் நகரத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com