

உடுப்பி கிருஷ்ணன் கோவில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் அமைந்துள்ளது. இந்த கோவில் புகழ்பெற்ற வைணவ ஸ்தலமாகும். 13 ஆம் நூற்றாண்டில் மத்வாச்சாரியார் என்பவரால் நிறுவப்பட்டது. இங்குள்ள கிருஷ்ணன் சிலை மிகவும் பழமையானது. குழந்தை கண்ணன் வடிவத்தில் கையில் மத்து மற்றும் வெண்ணெயுடன் காட்சி தருகிறார்.
இந்த ஆலயத்தில் பிரதான வாயில் எதுவும் கிடையாது. இந்தக் கோவில் பக்தர்களின் ஆன்மீகத்திற்கு அனுபவச் சான்றாக உள்ளது. இங்குள்ள சிலை ரத்தின கற்கள் பதிக்கப்பட்டதாகும். கதவுகள் இல்லாத கோவில். சந்திர பகவான் தனது 27 மனைவிகளுடன் வழிபட்ட கோவில். இங்கு மத்வ புஷ்கரணி என்ற தீர்த்தகுளம் உள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் அன்னதானம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
உடுப்பி பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தினமும் அதிகாலை நாலு மணி முதல் இரவு 9:30 மணி வரை நடை திறந்து இருக்கும்.
இங்குள்ள கிருஷ்ணரை நேரடியாக வழிபட முடியாது. ஒன்பது துவாரங்கள் கொண்ட சாளரத்தின் வழியாகத்தான் கிருஷ்ணரை வழிபட வேண்டும்.
விஸ்வகர்மாவால் செய்யப்பட்ட கிருஷ்ண சிலை துவாரகை கடலில் மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வாச்சாரியாருக்கு கிடைத்தது. அவர் மூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தையின் திரு உருவமே கோவிலில் காணப்படுகிறது. ஒரு நாள் கருவறையின் பின்பக்க சுவர் தாமாகவே விழுந்து பின் சுவர் வழியாக கனகதாசருக்கு கிருஷ்ணன் காட்சியளித்தார்.
கனகதாசருக்கு கண்ணன் வழிபட வகுத்த ஒன்பது துவாரங்கள் அடங்கிய சாளரம் 'கனக தண்டிகை' என அழைக்கப்படுகிறது. பாலகிருஷ்ணனின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் உள்ளது. தட்சணின் சாபத்தால் தன் ஒளியையும், அழகையும் இழந்த சந்திரன் சிவனை நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து தான் இழந்த அழகையும், சக்தியையும் திரும்ப பெற்றதாக வரலாறு உள்ளது.
அப்போது சந்திரன் நிர்மாணித்த குளம் தான் 'சந்திர புஷ்கரணி' ஆகும். சந்திரன் தவம் செய்த காரணத்தால், உடுபா என அழைக்கப்பட்டு பின்னர் அது மருவி 'உடுப்பி' என மாறியது. 'உடு' என்றால் சந்திரன் 'பா' என்றால் அதிபதி என்பதை குறிக்கும். எனவே, உடுபா என்பது மருவி உடுப்பி ஆனது.
உடுப்பி கிருஷ்ணருக்கு எட்டு சீடர்களை தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பெஜாவர் மடம், பாலிமர் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிறூர் மடம் என எட்டு மடங்களையும் ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் கோவிலை நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வாச்சாரியார் கொண்டு வந்தார்.
இந்த நிகழ்ச்சி ஆனது 'பரியாய வைபவம்' என சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது விறகு தேர் அமைக்கப்படுகிறது. இந்தத் தேரின் விறகை தான் சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள்.
கனகதாசர் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்ததால், அவருக்கு முன் வாசல் வழியாக வழிபட அனுமதிக்கவில்லை. எனவே, அவர் கருவறைக்குப் பின்புறம் இருந்து கொண்டு தினசரி ஒரு இசை கருவி மூலம் பாடல் பாடி கிருஷ்ணரை வழிபட்டு வந்தார். இதனால் கிருஷ்ணர் மனம் உருகி கருவறையின் பின்புறம் சுவர் தானாக உடைந்து அவருக்கு கிருஷ்ணர் காட்சி அளித்தார்.
இந்த உடைந்த சுவர் பகுதி தான் 9 துவாரங்கள் கொண்ட 'கனகதண்டிகை' என்ற பகுதி ஆகும். அன்று முதல் இன்று வரை இந்த சாளரத்தின் வழியாகத்தான் கிருஷ்ணரை வழிபட்டு வருகிறார்கள்.
தீபாவளி, ஏகாதசி அன்று தீப வழிபாடு சிறப்பாக நடைபெறும். இந்த சமயத்தில் கிருஷ்ணர் ஒளி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். மத்வாச்சாரியார் கையெழுத்துப் பிரதிக்கு இன்றும் பூஜை நடைபெற்று வருகிறது.
இங்குள்ள 'மத்வ புஷ்கரணி' என்ற நீரில் ஆண்டுக்கு ஒரு முறை கங்கை தீர்த்தம் கலப்பதாக ஐதீகம் உள்ளது. இதிலிருந்து நீர் எடுத்து தான் கிருஷ்ணருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த தீர்த்தத்தின் பெயரைச் சொன்னாலே புண்ணியம் கிடைக்கும். மார்கழி மாதம் இந்த மத்வ தீர்த்தம் தலையில் தெளித்துக் கொண்டால், பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.
மத்வாச்சாரியார் 79 வயது வரை வாழ்ந்து 1317-ல் இறைவனிடம் கலந்தார். இதற்குப் பின்னர் தான் இந்த இந்தக் கோவில் பிரபலம் அடைந்தது.
உடுப்பி கிருஷ்ணர் ருக்மணியால் பூஜிக்கப்பட்ட சாளக்கிரமத்தில் ஆன திருமேனியாகும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த உடுப்பி கிருஷ்ணன் கோவிலை வழிபட்டு கிருஷ்ணர் ஆசிகள் பரிபூரணமாக கிடைக்கவும், மத்வ தீர்த்தம், சந்திர புஷ்கரணி ஆகிய தீர்த்தம் மூலம் புண்ணியம் கிடைக்க இந்த கோவிலுக்கு ஒரு முறை ஏனும் செல்ல வேண்டும்.