

சடசட சடவெனக் கொட்டத் தொடங்கியது மழை. ஆவணி மாதம் அந்த பவுர்ணமி தினத்தன்று மனசுக்குள் திருவண்ணாமலை கிரிவலச் செய்தியை வைத்து கண் வாங்காமல் டிவியில் பார்த்துக் கொண்டிருந்த என்னை அந்த மழையின் சடசடப்பு ஈர்த்தது.
சே! நம்மால்தான் திருவண்ணாமலை போக முடியவில்லை. இப்போதெல்லாம் கிரிவலத்தையும், சபரிமலை ஜோதி தரிசனத்தையும் கோயில் கும்பாபிசேக்ங்களையும் நேரில் பார்க்க முடியாவிட்டாலும் பார்க்க தரிசிக்க வேறு உபாயம் இல்லாமலா போய்விட்டது?! தேற்றிக் கொண்டேன்.
ஜன்னல் திறந்து எட்டிப் பார்க்கலாம் என்றால், எங்கே சாரல் மழைத்தூறல் சளியைப் பிடிக்க வைத்து விடுமோ என்கிற அச்சம் வேறு! மழையை வேடிக்கை பார்க்கும் ஆசையில் மண்ணள்ளிப் போட, சரி நம்ம சிசிடிவி வழியே பாப்போமே என்று பார்த்தால்…
சிசிடிவி காட்சியை எதோ வந்து வந்து மறைத்தது! கருப்பாய் சின்னதாய் ஒரு உருவம் ஊர்ந்து நகர்ந்து காட்சிக்கு உபத்திரம் கொடுத்தது. என்ன அது?! யோசிக்கையில்…
அதுவொரு சின்னச் சிலந்தி என்பது பிடிபட்டது. சிலந்தி என்ன செய்கிறது? சிசிடிவி காமராவில் கண்ணாடிச்சில்லில் அங்குமிங்குமாக நகர்ந்து காமராக் கண்ணில் விழும் சாரல், மழைத்துளியைத் துடைத்தபடி அதன் மீது மின்னியது.
ஒருவேளை, பூர்வத்தில் இதுதான் ‘திருவாணைக்கா கோவில்’ நாவல் மரத்தடி சிவன் மேல் சருகு விழாது காத்த சிலந்தியோ?' என எண்ணத்தோன்றியது.
ஜோதியன்று வீட்டிலிருந்தபடியே சபரிமலை அய்யப்பனை மானசீகமாக வணங்கிக் கன்னத்தில் போட்டுக் கொண்டு கைதொழுவதில்லை? கிரிவலக்காட்டிக்காக தொலைக்காட்சிப் பெட்டியில் தூரம் குறைத்து அருகமர்ந்து ஆன்மீகம் காக்கவில்லை நான்?
நினைத்துப் பார்க்கிறேன். பூர்வத்தில் இந்தச் சிலந்தியும் நாவல் மரத்து சருகுவிழாமல் சிவனை காத்த சிலந்தியாய் இருந்திருக்கலாம். எட்டுக்காலால் காமராவின் எல்லாத் திசைக்கும் நடந்து ஈரம் நீக்கி, இந்தச் சிலந்தியும் பூர்வ நியாபகத்தில் சருகு நீக்குவதாய் சாரல் போக்குகிறதோ என்னவோ? இருக்குமா? இருக்காதா? தெரியவில்லை!!
ஆனால், ஒன்று நிச்சயம்..! நினைத்துப் பார்க்க நெஞ்சம் இனிக்கின்றது. சிவனின் மூன்றாம் கண்போலத்தானே வீடுகளின் சிசிடிவிகளின் காமராக் கண்கள்? சிசிடிவி காமராவை சிலந்தி சிவனாக நினைத்ததோ? யாருக்குத்தெரியும்?!
என்னைப் பொருத்தவரை கன்னத்தில் போட்டுகொண்டால் புண்ணியத்தில் கூடப் போகிறது…! எனக்குமட்டும்தானா? சிலந்திக்கு இல்லை?
அகம்பிரம்மாஸ்மி அல்லவா?