முனீஸ்வரர் இவர் ஒரு காவல் தெய்வம் என்பது நாம் அறிந்த ஒரு ஆன்மிக தகவல். ஆனால், இவரின் அவதாரங்கள் இவரின் வரலாறுகள் பற்றி நாம் அறிந்திருக்கிறோமா இப்பதிவில் அறிந்து கொள்ளுங்கள்.
முனீஸ்வரன் என்பவர் சிவபெருமானின் அம்சம் ஆவார். வீரமும், ஆவேசமும் நிறைந்த தெய்வமான இவர் அந்தகாசுரனை அழித்தவர். இவர் சிவபெருமானின் அந்தரங்க காவலர்களில் ஒருவர்.
முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்னும் அசுரன் தேவர்களையும், மக்களையும் வதைத்து இடையூறு செய்து வந்தான். அந்த அசுரனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி அன்னை பராசக்தியை அனைவரும் வேண்டினர்.
பார்வதி அம்மன் காத்தாயி என்ற பெயரில் பூமியில் அவதரித்தார். அசுரனை அழிக்க காத்தாயி அம்மன் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, கருமுனி, கும்பமுனி, வால் முனி, சட்டை முனி என்று ஏழு முனிகளை உருவாக்கினார். அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்தகாசுரனை அடக்கி வதம் செய்தார்கள்.
பின்னர் முனிகள் அனைவரும் ஒரே வடிவமாக கலியுகத்தில் மக்களை காப்பதற்காக பூமிக்கு வந்தனர். இவர்களின் அம்சமாக விளங்குபவரே முனியப்பன் ஆவார். முனீஸ்வரர் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மேல் 5 மணிக்குள் மட்டுமே நகர்வலம் வருவார். அதுவும் 12 மணிக்குமேல் 5 மணிக்குள் சுமார் 20 அடி உயரத்திற்கு வெண் புகைவடிவில் வலம் வருவார்!
நன்மைகளை காத்து தீமைகளை அழிப்பவர். கிராமங்களில் கோயில் கொண்டுள்ள இவர் இரவு நேரங்களில் காத்து, தீய சக்திகளை அடியோடு ஒழித்துக் கட்டக்கூடியவர். இவரின் கண்கள் நெருப்பு போல பிரகாசிக்கும், கனல் கக்கும் கண்களும், அருள் ஒளிரும் மேனியும், கொண்டவராக முனியப்பன் இருப்பார். முனீஸ்வரன் அருள் கிடைத்தால் சகல சவுபாக்கியங்களும் கிட்டும்.
இவர் தமிழ்நாட்டில் பெரும்பாலான சமுதாயத்தினர்க்கு குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் அருள் பாவிக்கிறார். இவர் பெயரில் நிறைய பேர்கள் வழங்கப்பட்டு அங்கெங்கு வழிபட்டு வருகின்றனர்.
வாழ்முனி, செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி, பூமுனி போன்ற ஐந்து முனிகளை பஞ்ச முனி என்கிறார்கள்! இவர்கள் அம்மனுக்கு துணையாக இருந்தவர்கள். வாழ்முனி, செம்முனி, முத்துமுனி, ஜடாமுனி, பாலக்காட்டு முனி, வேதமுனி, இலாடமுனி ஆகிய ஏழு முனிகள் பெயரிலும் இவர் வணங்கப்படுகிறார்.
மதுரையில் பாண்டி முனியாக அருள்பாவித்துக்கொண்டு இருக்கிறார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்கு வாசலில் அமைந்துள்ள மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாட்டைக் குறிக்கின்றது. இவருக்கு சாராயம், சுருட்டு இவைகளுடன் கிடாவெட்டி படையல் போடப்படுகிறது.
மனநலம் பாதிக்கப்பட்டவர், மனச்சிதைவு உள்ளவர்கள், தைரியம் இழந்தவர்கள் இவரை வணங்கினால் மனம் சரியாகும்.
இவரை யார் வணங்கினாலும் எந்த தீய சக்திகளை அறவே நெருங்காது என்பது உண்மையாகும். முனீஸ்வரன் வழிபாடு இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் உண்டு.