Dhoomakethu Vinayagar
Dhoomakethu Vinayagar

குழந்தையாக அவதரித்து தூமாசுரனை அழித்த தூமகேது விநாயகர்!

விநாயகப் பெருமானின் பனிரெண்டு அவதாரங்களில் ஒரு அவதாரமே தூமகேது விநாயக அவதாரம் ஆகும்.
Published on

விநாயகப்பெருமான் பல்வேறு காரணங்களுக்காக வக்ரதுண்ட விநாயகர், சிந்தாமணி விநாயகர், கஜானனர், விக்நராஜர், முந்திய மயூரேச விநாயகர், பிந்திய மயூரேச விநாயகர், தூமகேது விநாயகர், கணேசர், கணபதி, மஹோத்கடர், டுண்டி விநாயகர் மற்றும் வல்லப விநாயகர் என பனிரெண்டு அவதாரங்களை எடுத்தார்.

விநாயகப் பெருமானின் பனிரெண்டு அவதாரங்களில் ஒரு அவதாரமே தூமகேது விநாயக அவதாரம் ஆகும். விஷப்புகை வடிவில் தோன்றிய தூமாசுரன் என்ற அரக்கனை ராஜ குடும்பத்தில் குழந்தையாக அவதரித்து வதம் செய்து அழித்ததால் விநாயகருக்கு 'தூமகேது விநாயகர்' என்ற திருநாமம் உண்டானது. தூமம் என்றால் புகை என்று பொருள்.

மன்னர் ஒருவரின் மனைவி கர்ப்பிணியாக இருந்தாள். அவளுக்கு மகாவிஷ்ணுவின் அம்சமாக ஒரு மகன் பிறந்து அந்த மகனாலேயே தனக்கு மரணம் நிகழும் என்று தூமாசுரனுக்குத் தெரிய வந்தது.

தூமாசுரன் தன் சேனாதிபதியை அழைத்து அரசரின் மனைவியைக் கொன்றுவிடுமாறு உத்தரவிட்டான். ஆனால் அந்த சேனாதிபதிக்கோ கர்ப்பிணியாக இருக்கும் அரசரின் மனைவியைக் கொல்ல மனம் இடம் தரவில்லை. அதனால் அவன் இருவரையும் கொண்டுபோய் ஒரு காட்டில் விட்டுவிட்டுத் திரும்பினான். அங்கே தம்பதி சமேதராய் மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று விநாயகப் பெருமானைத் துதித்தவண்ணம் இருந்தார்கள்.

அரசரும் அவருடைய கர்ப்பிணி மனைவியும் காட்டில் உயிருடன் இருக்கும் விஷயம் தூமாசுரனுக்குத் தெரியவர உடனே அவன் அங்கே போனான். அரசியின் மடியில் விநாயகப் பெருமான் குழந்தையாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்களின் மீது விஷப்புகையைக் கக்கினான். விஷப்புகையானது ஒரு மேகம் போல அந்த இடத்தைச் சூழ குழந்தையாக இருந்த விநாயகர் அவற்றைத் தன்னுள் கிரகித்துக் கொண்டார். களைத்துப் போய் நின்றிருந்த தூமாசுரனை வதம் செய்ய முடிவு செய்த விநாயகர் அவன் பிரயோகித்த தூம அஸ்திரத்தையே அவனை நோக்கித் தன் வாயிலிருந்துப் பிரயோகித்தார். விஷப்புகை தாக்கியதால் தூமாசுரன் அழிந்தான். தூமத்தை அஸ்திரமாகக் கொண்டு தூமாசுரனை அழித்ததால் விநாயகப்பெருமானுக்கு தூமகேது விநாயகர் என்ற திருநாமம் தோன்றியது.

இதையும் படியுங்கள்:
சிவன் முதன் முதலில் கால் பதித்த பூமி: சிவபெருமானின் நிஜமான சொந்த ஊர்! கைலாசம் இல்லை...
Dhoomakethu Vinayagar

தூமகேது விநாயகரின் அவதாரம் குறித்த மற்றொரு புராணக்கதையும் உள்ளது. விகுதி என்றொரு மன்னர் இந்திரப்பதவியின் மீது ஆசை கொண்டு செயல்பட்டார்.

இதனால் அவர் மீது கோபம் கொண்ட சிலர் அவரை சபித்தார்கள். இந்த சாபத்தின் காரணமாக அவர் தூமாசுரன் என்ற அசுரனாகப் பிறந்தான். தூமம் என்றால் புகை என்பது பொருள். தூமாசுரனிடம் விஷப்புகை இருந்தது. தன்னிடமிருந்த விஷப்புகையை தேவர்கள் ரிஷிகள் மீது அவ்வப்போது பிரயோகித்து அவர்களை இம்சைபடுத்தியவாறு இருந்தான்.

ஒருநாள் சுமுதை என்பவளுக்குப் பிறக்கப்போகும் குழந்தையானது தூமாசுரனைக் கொல்லும் என்ற ஒரு அசரீரி ஒலித்தது. விநாயகரே அவளுக்குக் குழந்தையாகப் பிறந்து வளர்ந்தார். தூமாசுரனின் தவறான செயல்களைப் பற்றி அவனிடம் கூறி அவனுக்கு அறிவுரைகள் கூறினார். ஆனால் விதிவசத்தால் அவன் விநாயகர் மீது விஷப்புகையைப் பிரயோகித்தான். அவர் அந்த புகையை தன்னுள் இழுத்து பின்னர் தூமாசுரன் மீது பிரயோகிக்க அவன் மாண்டு போனான். இதனால் விநாயகப் பெருமானுக்கு தூமகேது விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்:
விநாயகர் அணிந்த ருத்ராட்சம் எத்தனை முகமுடையது?
Dhoomakethu Vinayagar

பல்லாவரத்திற்கு அருகில் உள்ள திருநீர்மலையில் மணிகர்ணிகா தடாகம் என்ற திருக்குளத்தின் கரையில் தூமகேது விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இதுபோல பூவிருந்தவல்லிக்கு அருகில் அமைந்த கரையான்சாவடியில் தூமகேது விநாயகர் கோயில் அமைந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com