ருத்ராட்சத்தை அணிவதற்கு என்று தனி சிறப்பு உண்டு. அதை அனைவரும் அணியலாம் என்றாலும் மிகுந்த பய பக்தி உடையவர்கள் தான் அதனை அணிவர். அதை அணிந்து கொண்டால் ஒரு கம்பீர தோற்றம் ஏற்படும். அவரைப் பார்ப்பவர்கள் அனைவரும் அவருக்கு மரியாதை தருவர். அவரின் ஆன்மீக பண்பு அனைத்தும் அசத்தும் வகையில் இருக்கும். அதை அணிந்து கொண்டால் அதற்கான சிறப்பு பண்புகளான பூஜை வழிபாடு போன்றவற்றை தவறாது செய்ய வேண்டும்.
தாவரங்கள் தொகுதியில் இரண்டு பெரும் பிரிவுகள் உண்டு. அவை பூவாத தாவரம், பூக்கும் தாவரம் என்பனவாகும். ருத்ராட்சம் பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தது. இவை வெண்மையான பூ உடையவை. தை மாதங்களில் பூக்கும் இதனுடைய பழங்கள் சிகப்பும் நீலமும் கலந்த நிறத்தில் இருக்கும். கனிகள் தென்னையைப் போன்ற உள் ஒட்டு கனி வகையைச் சேர்ந்தது. 'எலியோ கார்பசி' என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.
ருத்ராட்சத்தின் வகைகள்:
ஒரு முக ருத்ராட்சம் 'சந்திரமுகி' என்று அழைக்கப்படுகிறது. தன் செயலால் பசு ஒன்று இறந்து விட்டதாக கருதிய ஜமதக்கினி முனிவருக்கு கழுவாயாக காசி சென்று அங்கு கிடைக்கும் ஒருமுக உத்திராட்சம் அணியுமாறு சுக மகரிஷி சொன்னதாகவும், இதை அணிபவர் குடும்பத்தில் உள்ளவர்களின் அனைத்து பாவத்தையும் அது அழிக்கும் என்றும் அதன் பெருமை உரைக்கப்படுகிறது. பிறை வடிவில் உள்ள இந்த உத்திராட்சம் கிடைப்பதும் அரிது.
இருமுக உத்திராட்சம் அர்த்தநாரீஸ்வர வடிவு கொண்டதாகக் கருதி அணியப்படுகிறது.
மூன்று முகம் ஆண், பெண் இருவரும் அணிய ஏற்றது.
மாணவர்களுக்கு மிகவும் ஏற்றதாக நான்முக ருத்ராட்சம் விளங்குகிறது. இதனை அணிவதால் நினைவு ஆற்றல் பெருகும் என்று கூறப்படுகிறது.
எளிதில் கிடைக்கக்கூடியது ஐமுக ருத்திராட்சம். இதனை அணிபவருக்கு சிவன் அருள் எளிதில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஆறுமுக ருத்ராட்சத்தை அணிந்தால் ஆறுமுகன் அருளைப் பெறலாம். நினைவாற்றலும் கூடும் என்பது சிறப்பு.
ஜாதக அமைப்பு சரி இல்லாதவர்களுக்கும் ஏழு முக ருத்ராட்சத்தை அணிவதால் நற்பலன் கிட்டுமாம். இதன் அதிபதி காம தேவன். இதை அணிவதால் அகால மரணம் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.
எண் முக ருத்ராட்சத்தின் அதிபதி விநாயகர். அச்சம் களையவும் பஞ்சமா பாதக செயலுக்கான பாவத்தை போக்குவதற்கும் எண் முக ருத்ராட்சம் அணிவதினால் பலன் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒன்பது முக ருத்ராட்சத்தின் அதிபதி பைரவர். துர்க்கை பூஜை செய்பவர்கள் கையில் அணிந்து கொள்ளலாம். நவரத்தின மாலை அணிவதால் கிடைக்கும் பலனை 9 முக ருத்ராட்சம் அணிவதால் அடையலாம் என்று கூறப்படுகிறது
பத்து முக ருத்ராட்சத்தின் அதிபதி திருமால். இதற்கு 'ஜனார்த்தனம்' என்ற பெயரும் உண்டு. திருமாலை வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலனை இம்மணி அணிவதால் பெற இயலும். நச்சு உயிர்களால் விளையும் தொல்லைகளில் இருந்து காக்கும் நன்மை கொண்டது பத்து முக ருத்ராட்சம்.
பதினோரு முக ருத்ராட்சம் அணிவதால் 'அசுவமேத யாகம்' செய்வதால் கிடைக்கும் பயனைப் பெறலாம். இறையருள் குணமான இரக்க, கருணை உணர்வு அதிகரிக்குமாம்.
கர்ணன் அணிந்த ருத்ராட்சம் 12 முகமுடையது. இதனை 'ஆதித்யம்' என்று கூறுவர். இதன் அதிபதி சூரியன். இதனை அணிவதால் புகழும் பெருமையும் கிட்டுமாம். இதனை காதுகளில் அணிவதால் கதிரவன் அருள் பெறலாம் என்றும், இதனால்தான் கர்ணனும் இதனை அணிந்ததாகச் சொல்லப்படுகிறது.
இரண்டு ருத்ராட்சங்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டியே தோன்றியிருக்கும். இது இறைவன், இறைவிக்காக கருதப்படுவதால் கௌரிசங்கர் என்றும், மூன்று சேர்ந்து ஒட்டித் தோன்றினால் மும்மூர்த்தி என்றும் அழைக்கப்படுவகிறது. பொதுவாக இவ்வகை ருத்ராட்சங்கள் அணியும் வழக்கம் இல்லை. வழிபாட்டறையில் வைத்து பூஜை செய்யலாம். இதனால் திருமகள் பார்வை முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
ஒரு ருத்ராட்ச மரத்தின் அடியில் பாம்பு புற்று தோன்றினால் மரத்தில் நிச்சயமா ஒரு முக ருத்ராட்சம் ஒன்று, இரண்டு உண்டாகி உள்ளது என அறியலாம். சிவனே தோன்றிவிட்டார் எனக்கருதி அம்மரத்தை அடியோடு வெட்டி விடுகிறார்கள். இவ்வாறு வெட்டப்படும் மரத்தில் காணப்படும் கனிகளில் ஒரு சிலவற்றில் உள்ள ருத்ராட்சங்களில் பாம்பின் படம் போன்ற புடைப்புகள் காணப்படுகின்றன. இப்புடைப்புகள் உடைய ருத்ராட்சங்களை விநாயகம் அல்லது நாகர், நாக தோஷம் நீக்கும் என்றும் நம்பப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக சாது ஒருவரால் அணிவிக்கப்பட்ட ருத்ராட்சத்தை அணிந்திருப்பவர்கள் அதை பயபக்தியுடன் அணிந்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கூறியபடி நடந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவர்கள் எந்த வார்த்தை சொல்லி அதை அணிவிக்கிறார்களோ அது அப்படியே நடக்கும் என்பது உண்மை.
எனக்குத் தெரிந்த ஒரு தாத்தாவிற்கு பழனி மலையில் உள்ள ஒரு சாது அணிவித்த ஆறுமுக ருத்ராட்சத்தை, அவர் இறந்தப் பிறகு அதில் இருந்த தங்கத்தை எடுத்துக் கொள்வதற்காக ஒருவர் எடுத்துக் கொண்டு விட்டார். சாது சொன்னது போல் அதை எடுத்துக் கொண்டவர்களின் குடும்பம் சுபிட்சமாக இல்லாமல் போய்விட்டது. ஆதலால் பயபக்தியுடன் அணிந்து கொள்வதும், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.