மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே நுழைய முடியும் கோவில் பற்றி தெரியுமா?

விஸ்வநாத சுவாமி கோவில்...
விஸ்வநாத சுவாமி கோவில்...

‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது' என்று ஔவையார் பாடியிருந்தாலும் மனித பிறவி என்பது பல இன்ப துன்பங்களை அனுபவிக்க கூடியதாகவே உள்ளது. இக்காலத்தில் மனிதர்கள் மறுபிறவி இன்றி பிறவாமல் இருப்பதை வரமாக கருதுகிறார்கள்.

இப்போது நான் சொல்லப் போகும் கோவிலுக்கு மறுபிறவி என்று ஒன்று இல்லாதவர்களால் மட்டுமே சென்று சிவனை தரிசிக்க முடியும் என்று சொன்னால் ஆச்சர்யமாக உள்ளதல்லவா? ஒருவேளை உங்களுக்கு மறுபிறவி என்பது உண்டெனில் உங்களால் இக்கோவிலுக்கு செல்ல முடியாதபடி தடைகள் வருமாம். அந்த ஈசனே மனம் வைத்தால் மட்டுமே அவரை இக்கோவிலுக்கு சென்று தரிசிக்க முடியும் என்று கூறுகிறார்கள்.

அந்த கோவில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தேப்பெருமாநல்லூரில் உள்ள விஸ்வநாத சுவாமி கோவிலாகும். இங்குள்ள சிவபெருமானை விஸ்வநாத சுவாமி, நாக விஸ்வநாதர், ருத்ராக்ஷேஸ்வரர் என்றும் அழைப்பார்கள். அம்மனை வேதாந்த நாயகி என்று அழைக்கிறார்கள். இக்கோவிலை ராஜராஜ சோழன் கட்டியதாக நம்பப்படுகிறது. இக்கோவில் சனி தோஷத்திற்கான பரிகார ஸ்தலமாகும்.

ஒருமுறை சனீஸ்வரன் பார்வதி தேவியிடம் சென்று சிவபெருமானை 3 மணி நேரம் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது தாங்கள் அதற்கு உதவி புரியுங்கள் என்று கேட்டுள்ளார். இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி அடுத்த நாள் சனி வரும் பொழுது சிவபெருமானை அரச மரத்திற்கு பின்னால் சென்று ஒளிந்து கொள்ளும் படி கூறியிருக்கிறார். சிவனும் அவ்வாறே சென்று ஒளிந்திருக்கிறார். இதை அறிந்த சனியும் அரச மரத்தை பார்த்தவாறே மூன்று மணி நேரம் நின்றுவிட்டு செல்ல முற்பட  பார்வதி தேவி சனியிடம் ஏன் சிவனை பிடிக்காமல் தோற்று செல்கிறீர்களா? என்று கேட்டப்போது,

சிவபெருமானை எந்த வேலையும் செய்ய விடாமல் அரச மரத்திற்கு பின் 3 மணி நேரம் ஒளிய வைத்து விட்டேன். என் கடமை முடிந்தது என்று  ஆணவமாக கூறினார்.

இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் மஹா காலபைரவர் அவதாரம் எடுத்து சனியை இரண்டாக பிளந்து விடுவார். பிறகு சனி தனது கடமையையே செய்ததாகவும், தான் மட்டும் இல்லையென்றால் மனிதர்கள் நடுவிலே குழப்பங்களும் பிரச்சனைகளும் வரும் என்று கூற சிவபெருமான் சனியை பழைய நிலைக்கு மாற்றுவார். இதனால் தான் இக்கோவிலில் மகாபைரவரும், சனீஸ்வரரும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலில் சனீஸ்வரர் கர்வ கோலத்தில் இருப்பார் என்றும் இந்த கோவிலில் சனியின் சக்திகள் ஏதும் பயனற்றதாக ஆகிவிடும் என்று கூறப்படுகிறது.

விஸ்வநாத சுவாமி கோவில்
விஸ்வநாத சுவாமி கோவில்

எனவே இக்கோவிலுக்கு வந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால், சனியால் ஏற்படும் பாதிப்புகளும், பணப்பிரச்சனைகளும் தீரும் என்று நம்பப்படுகிறது. சனியின் மீது கோபம் கொண்ட சிவபெருமான் எல்லா கிரகங்களையும் இடம் மாற்றி சூரியனை பாக்கும்படி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
இளநீர் தாகம் தணிக்க மட்டும்தானா?
விஸ்வநாத சுவாமி கோவில்...

இக்கோவிலின் கற்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டுள்ளது. தினமும் சூரிய கதிர்கள் இக்கோவிலின் மூலவரான சிவபெருமானின் மீது பட்ட பிறகே கோவில் திறக்கப்படும்.

2010ஆம் ஆண்டு சூரிய கிரகணத்தின் போது, சிவபெருமானை தரிசிக்க நாகம் ஒன்று வில்வ இலையுடன் வந்து அவரை தரிசித்தது மட்டுமில்லாமல் தனது தோலை உரித்து அவருக்கு மாலையாக அணிவித்து விட்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய அதிசயங்கள் நிறைந்த இக்கோவிலுக்கு சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் பெருகுகிறது. இருப்பினும் அதற்கும் சிவபெருமானின் அருள் இருந்தால் மட்டுமே முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com