108 திவ்ய தேசங்களில் வித்தியாசமான ஆதி வராகப் பெருமாள் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கள்வனூரில் காமாட்சி அம்மன் கோயில் முன்பு ஒரு மூலையில் பெருமாள் மிகச் சிறிய வடிவில் காட்சி தருகிறார்.
திருச்சி - முசிறி சாலையில் உள்ள வேத நாராயணன் கோயிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்து படுத்திருப்பதால் வேத நாராயணப் பெருமாளாக காட்சி தருகிறார்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாளாக திருமயத்தில் காட்சி தருகிறார்.
கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தில் ரங்கநாதப் பெருமாள் ஏழு தலைகள் கொண்ட ஆதிசேஷனுடன் காட்சி தருகிறார்.
ஸ்ரீவைகுண்டம் நத்தத்தில் ஆதி சேஷன் குடைப் பிடிக்க பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோவிலில் பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதீகம்.
கருங்குளத்தில் மூன்று அடிசந்தனக் கட்டை வடிவில் வைத்து பெருமாளாக அபிஷேகம் செய்து பூஜித்து வருகிறார்கள். இரு பக்கமும் சங்கு, சக்கரம் உள்ளது.
மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் ஒரு கரத்தை தலையில் வைத்தும், தரையில் சாய்வாக கால் நீட்டி சயனப் பெருமாளாக காட்சி தருகிறார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர் அனந்த சரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் எழுந்தருளியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து காட்சி தருகிறார்.
திருப்பாற்கடல் ஊரில் உள்ள கோவிலில் ஆவுடையார் மீது சிவலிங்கத்திற்கு பதிலாக பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
திருப்பதி ஏழுமலைக்கு மேல் நாராயண கிரி என்ற தலத்தில் ஏழுமலையானின் பாதச் சுவடுகள் உள்ளது. இதனை ஸ்ரீ வாரி பாதம் என்பர். பெருமாள் திருமலையில் முதலில் தடம் வைத்த இடம் இது என சொல்லப்படுகிறது.
சிங்கப் பெருமாள் கோவிலில் நரசிம்ம பெருமாள் மூன்று கண்களுடன் காட்சி தருகிறார்.
திருக்கண்ணபுரத்தில் கண்ணபுர பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன் பத்மாசனத்தில் காட்சி தருகிறார்.
திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவில் 'பூலோக வைகுண்டம்' என்ற பெருமையும், 108 வைணவத் திருத்தலங்களில் முதல் இடத்தைப் பெற்றது. கோயில் கருவறை மேல் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தின் மேல் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு தங்கக் கலசங்கள் உள்ளன. இங்கு பெருமாள் சேஷ சயனத்தில் (புஜங்க சயனம்) ஆதிசேஷன் மீது சயனித்து காட்சி தருகிறார்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் உள்ள பெருமாள் சிலை 9 அடி உயரம் கொண்டவர். இங்கு இவர் முகத்தில் மீசையுடன் காட்சி தருகிறார். பெருமாள் தன் மனைவி, சகோதரர் என குடும்ப சகிதமாக உள்ளார். இவர் கையில் ஆயுதம் இன்றி காட்சி தருகிறார்.
திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் பெருமாள் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கியும், மூலவரின் வலது புறம் சாலி கோத்திர மகரிஷியும், இடது புறம் பிரம்மாவுக்கு உபதேசம் செய்யும் ஞான முத்திரையுடன் காட்சி தருகிறார்.
புரட்டாசி நாளில் பெருமாளை தரிசித்து அருள் பெறுவோம்.