சித்தர் கோபத்தால் மூன்றாய் உடைந்த லிங்கம்; மீண்டும் அவரே ஒட்டித்தந்த அதிசயம்!

Irumbai mahakaleshwar temple
Irumbai mahakaleshwar templeImg Credit: Cityseeker
Published on

மகரிஷி ஒருவரால் நிறுவப்பட்ட இடத்தை 'மாகாளம்' என்று அழைக்கிறார்கள். வடக்கில் 'உஜ்ஜைனி' ஒரு மாகாளம். தெற்கில் 'அம்பர்' ஒரு மாகாளம். நடுநாட்டில் உள்ளதுதான் இந்த 'இரும்பை' மாகாளம். இக்கோவிலின் மூல நாதரான மகா காளேஸ்வரரின் லிங்கத் திருமேனி தான் சித்தர் ஒருவரின் கோபத்தால் மூன்றாய்ப் பிளந்து, பின்னர் அதே சித்தரே அறம் பாடி ஒட்டித்தந்த லிங்கமாகும். வாருங்கள் இரும்பை மகா காளேஸ்வரர் கோவிலைத் தரிசிக்கலாம்.

புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் செல்லும் நெடுஞ்சாலையில் இரும்பை கிராமம் உள்ளது. இருஞ்சேரி என்பதே இவ்வூரின் பெயராய் கல்வெட்டுகள் சொல்கின்றன. இலுப்பை மரங்கள் அடர்ந்த பகுதி என்பதால் இருஞ்சேரி என்ற இவ்வூர் இலுப்பை என்றாகி காலப்போக்கில் இரும்பை என்று ஆகியிருக்கிறது. இங்கே மூன்றாம் குலோத்துங்க சோழனால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது தான் இந்த சிவாலயம்.

இந்தப்பகுதி வறண்டு கிடந்தபோது மக்கள் மன்னரிடம் முறையிட்டனராம். மன்னன் மந்திரியிடம் இதுபற்றி ஆலோசனை கேட்க, “இக்கோவிலுக்குப் பக்கமுள்ள குளக்கரையில் அரசமரத்தடியில் அந்த மரத்து இலைகளை மட்டுமே உணவாய் உண்டு பல்லாண்டுகளாய் ஒரு சித்தர் தவத்தில் இருக்கிறார். அவரால் வறட்சி நீங்க வழி சொல்ல முடியலாம். கேட்டுப்பார்க்கலாம்” என்றிட, மன்னனும் ஊர்மக்களும் சித்தரைக் காணச் சென்றனராம். தவத்தில் அமர்ந்திருந்த சித்தரை எழுப்புபவருக்கு நிலமானியம் அளிக்கப்படும் என்று மன்னர் அறிவிக்க, அக்கோவிலில் நடனமாடும் வள்ளி என்ற பெண்மணி சித்தரை எழுப்ப‌ முன்வந்தாளாம்.

மாவில் உப்பு கலந்து அரச இலை போலவே செய்து சித்தர் இருந்த மரத்தடியில் தினமும் ஒன்று போட்டுவந்தாளாம் வள்ளி. இலையென நினைத்து சித்தரும் அதைச் சாப்பிட்டு வந்தாராம். நாளடைவில் உப்பினால் சித்தர் உணர்வுபெற்றுத் தவம் கலைத்தாராம். வள்ளியிடம் “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்க, அவளோ ஆலயத்திலுள்ள மகா காளேஸ்வரரை தரிசிக்க வரவேண்டும் என்று அழைத்தாளாம். அவரும் இசைந்திட மன்னர் முன்னிலையில் வள்ளியின் நடன நிகழ்ச்சி கோவிலில் நடந்ததாம். அப்போது அவள் காலில் இருந்த சலங்கை அவிழ்ந்து விழுந்துவிட சித்தர் அதை எடுத்து அவளுக்கு மீண்டும் கட்டிவிட்டாராம். அதைக் கண்ட மக்கள் “ஒரு சித்தர் பெண்ணைத் தொட்டு சலங்கை கட்டலாமா?” என்று பேசிவிட, பெருங்கோபம் கொண்ட சித்தர் அறம் பாடினாராம். உடனே கருவறையில் இருந்த லிங்கத்திருமேனி மூன்றாய் வெடித்துச் சிதறியதாம். ஒரு பகுதி பல கிலோமீட்டர் தள்ளிப்போய் விழுந்துவிட இன்றுவரை அந்த இடம் புல்பூண்டு முளைக்காத கழுவெளி இடமாகத்தான் உள்ளது.

இதையும் படியுங்கள்:
புதுவை வில்லியனூரில் உள்ள ‘பெரிய கோவில்’ தெரியுமா? கோகிலாம்பிகை உடனுறை காமேஷ்வரர் ஆலயம் போவோமா?
Irumbai mahakaleshwar temple

இதனால் தவற்றை உணர்ந்த மக்கள் சித்தரிடம் மன்னிப்புக் கோர, சித்தரும் மனமிறங்கி மீண்டும் அறம் பாட, உடைந்த லிங்கம் ஒட்டிக்கொண்டதாம். லிங்கத்திருமேனியில் உடைந்து ஒட்டிய தடங்கள் செப்புப்பட்டையால் குறிக்கப்பட்டுள்ளன. இந்த அதிசயத்தை நிகழ்த்திய சித்தர் 'கழுவெளி' சித்தர் என்று இந்த சம்பவத்திற்குப் பிறகு அழைக்கப்பட்டாராம். மகா காளேஸ்வரருக்குப் பக்கத்திலேயே இவரும் கோவில் திருச்சுவற்றிலேயே பெரியதாய்ச் செதுக்கப்பட்டு காட்சி தருகிறார்.

அம்பாள் பெயர் குயில்மொழி அம்மை. வடிவழகியாய் மூலவர் சந்நிதானத்திலேயே இருந்து அருள்பாலிக்கிறாள். ஆடலரசரும் சிவகாமி அம்மையோடு சபையில் காட்சி தருகின்றார். விநாயகர், ஆறுமுகர், தக்ஷிணாமூர்த்தி, துர்கை ஆகியோரும் தனித்தனிச் சந்நிதிகளில் காட்சி தருகிறார்கள். வெளிப்பிரகிரத்தில் தலவிருட்சமான புன்னைமரமும் அதைத்தொடர்ந்து உள்ள மகா வில்வ மரத்தடியில் (12 இலைகள் கொண்டது) மற்றொரு லிங்கத்திருமேனியும் உள்ளது. அவரைத் தொடர்ந்து ஸ்ரீ ராமதூரரான அனுமனுக்குத் தனிச்சந்நிதி உள்ளது.

இக்கோவிலின் நவக்கிரகங்கள் அனைவருமே அவரவர் மனைவியரோடு அருள்பாலிப்பது வேறெங்கும் காணமுடியாத ஒன்றாகும்.

பைரவர், சந்திரர், சூரியர் சந்நிதிகளும் உள்ளன. இக்கோவிலுக்கு தேவார மூவர்களும் பாடல் செய்திருப்பது மற்றொரு சிறப்பாகும். மூவர் தேவார‌ பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் இரும்பை மாகாளமும் ஒன்றாகும். குறிப்பாக சம்பந்தர் மகா காளேஸ்லரர் மேல் 11 தேவாரப் பதிகங்கள் செய்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
ராகு - கேது தோஷமா? வக்கிரமடைந்து வில்லங்கம் செய்யும் கிரகங்களால் தொல்லையா? கவலைய விடுங்க...இந்த கோவிலுக்கு போங்க
Irumbai mahakaleshwar temple

பின்னாளில் பட்டினத்தாரும் இந்த இறைவனைப் பாடியிருக்கிறார்.

மாதா உடல் சலித்தாள்; வல்வினையேன்

கால்சலித்தேன்; வேதாவும் கைசலித்துவிட்டானே

நாதா இரும்பையூர் வாழ் சிவனே இன்னம்

ஓர் அன்னை கருப்பையூர் வாராமற்கா

மறுபிறவி இல்லா வரம் கேட்டுப் பட்டினத்தார் இந்த இறைவன் மேல் பாடியுள்ள பாடல் இது..

ஆலயத்துக்கு வெளியில் கழுவெளி சித்தர் தவம் அமர்ந்திருந்த குளத்தைம் கரையையும் அரச மரத்தையும் தரிசிக்கலாம்.

அமைதியான இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் உள்ள இக்கோவில் சஞ்சலத்தில் அலைபாயும் மனதை அமைதிப்படுத்தும் என்பது நிச்சயம்.

வாகனம் நிறுத்தப் பெரிய‌ இடம் உள்ளது. பூக்கடைகளும் உள்ளன. நிச்சயமாகப் போய்வாருங்கள். இரும்பை மாகாளத்தின் மகா காளேஸ்வரர் அருள் பெற்றிடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com