நச் தகவல் 1 - 21 நாட்கள்:
நவராத்திரி முடிந்த 21 ஆம் நாள் தீபாவளி பண்டிகை வருவதின் பின்னணியில் இருக்கும் தகவல் குறித்து தெரிந்து கொள்ளலாமா? ஸ்ரீராமர் ராவணனுடன் யுத்தம் புரிந்து வெற்றி பெற்ற நாள் தசரா பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
பிறகு, ஸ்ரீராமர் இலங்கையிலிருந்து அயோத்தியை நோக்கி தன்னுடைய படைகள் சகிதம் நடந்து வர 504 மணி நேரங்களாயினவெனக் கூறப்படுகிறது. ஒரு நாளுக்கு 24 மணி நேரக்கணக்குப்படி, 504 ஐ 24 ஆல் வகுத்தால் வருவது 21 நாட்கள். இலங்கைக்கும் அயோத்திக்கும் இடையே உள்ள தூரம் 3145 கிலோ மீட்டரெனக் கூறப்படுகிறது. இதை 504 மணி நேரங்களில், நடைப் பயணமாக 21 நாட்களில் வந்தது போற்றுவதற்குரியதாகும்.
நச் தகவல் 2 - 5 நாட்கள்:
வட மாநிலங்களில் 5 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளி தகவல்… விபரம்.
தன் தேரஸ் --- (தனத்ரயோதசி)
அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பாக வரும் தன்தேரஸ் அன்று லெஷ்மி தேவியும், குபேரனும் வணங்கப்படுகின்றனர். வெல்லத்துடன் கொத்தமல்லிவிதைப்பொடியை சேர்த்து நிவேதனம் செய்யப்படுகிறது.
சோட்டி தீபாவளி:
இந்நாள் ஸ்ரீகிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்த நாளாக கருதப்படுகிறது. அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடையணிந்து கடவுளுக்கு பூஜை செய்வதிலிருந்து சோட்டி தீபாவளி தொடங்குகிறது.
நரக சதுர்த்தசி:
தீபங்களின் ஒளிவிழாவாகிய நரக சதுர்த்தசி மாலையில் லெஷ்மி தேவியை மனதார வணங்கி, லெஷ்மி பூஜையை அநேகர் செய்து வருகின்றனர்.இதற்கும் முகூர்த்த நேரம் உண்டு.
பாலி ப்ரதிபாதா:
இது கோவர்தன பூஜையென்றும் அழைக்கப்படும். கோவர்தன கிரியை, ஸ்ரீ கிருஷ்ணர் குடையாக பிடித்து நின்ற தினமென்று கொண்டாடப்படுகிறது. குஜராத்தியர்கள், மார்வாடியர்கள் ஆகியோர்களுக்கு பாலி ப்ரதிபாதா தினமன்றுதான் புதுவருடம் ஆரம்பமாகிறது.
பாய் தூஜ்:
இந்நாள் "யமத்விதியா" வென அழைக்கப்படுகிறது. யமதர்மராஜன், தன்னுடைய சகோதரி யாமி வீட்டிற்கு, பாய்தூஜ் தினத்தன்று செல்ல, யாமி அன்புடன் வரவேற்று விருந்து படைத்ததாக கூறப்படுகிறது. சகோதர-சகோதரிகளின் சந்திப்பு, பரிசுப்பொருட்கள் பரிமாறிக்கொள்வது, விருந்தோம்பல் போன்றவைகள் நடைபெறும்.
தகவல் 3 -- மத்தாப்பூ
மத்தாப்பூ என்றாலே மகிழ்ச்சிதான். ஆனால், பலர் வாங்குவதில்லை. நமது முன்னோர்களுக்காக, மத்தாப்பூ வாங்கி கொளுத்துவது அவசியம். இதன் பின்னணி தகவல்....!!
பித்ருக்கள், இந்த மத்தாப்பூ வெளிச்சத்தைப் பயன்படுத்தி, சொர்க்கம் நோக்கி முன்னேறிச்செல்ல வழிகாட்டுமெனக் கருதப்படுகிறது. துலா மாத ஐப்பசியில் வரும் சதுர்த்தசியன்று "உல்கா"வெனப்படும் நெருப்பைக் கையில் பிடிக்க வேண்டுமென்பதற்கு காரணம் பித்ருக்களே. இதைக் கூறும்
ஸ்லோகம் பின்வருமாறு :-
"துலா ஹம்ஸ்தே ஸஹஸ்ராம்சௌ!
ப்ரதோஷ பூத தர்ஸ்மோ!
உல்கா ஹஸ்தா நரா குர்யு: பித்ரூணாம் மார்க தர்சனம்! "
தகவல் 4 -- முக்கியத்துவம்:-
அஞ்ஞானமெனும் இருளை அகற்றி மெய்ஞானம் பெறுவதே தீபாவளிப் பண்டிகையின் முக்கியத்துவமாகும்.
மேலும், ஏழை-பணக்காரன் பாகுபாடின்றி அனைவராலும் கொண்டாடப்படுகிறது. நாமும் தித்திக்கும் தீபாவளியை வரவேற்று கொண்டாடுவோம்.