எளிய காணிக்கையை உவந்து ஏற்ற பாபா!

அக்டோபர் -15 ஷீரடி ஸ்ரீசாயி பாபா மஹா சமாதியடைந்த நாள்!
Shirdi Srisai Baba
ஷீரடி ஸ்ரீசாயி பாபா
Published on

தயப்பூர்வமான அன்புடன் யார் எதை அனுப்பினாலும் யாருடன் அனுப்பினாலும்  அது உண்மையாக, அனுப்பப்பட்டால்  அந்த சிறிய காணிக்கையை அடியவர் மறந்தாலும் ஷீரடி ஶ்ரீசாயி பாபா தவறாமல் அதை நினைவுபடுத்தி பெற்றுக் கொள்வார். பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில் "யார் பக்தியுடன் எனக்கு ஒரு இலை, ஒரு பூ, ஒரு பழம் அல்லது தண்ணீரை அர்ப்பணிக்கிறார்களோ அந்த காணிக்கையை நான் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன்." என கூறுகிறார். அவ்வகையில் பக்தர்கள் தூய அன்புடன் பாபவுக்கு அர்ப்பணித்த சிறிய காணிக்கைகளை ஏற்றுக் கொண்டு அவர்களை ஆசிர்வதித்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள் அற்புதமானவை.

பாந்த்ராவை சேர்ந்த தார்கட் குடும்பம் பாபாவின் தீவிர பக்தர்கள். குடும்ப தலைவர் பாபாசாஹேப் தார்கட் முன்னர் பிரார்த்தனா சமாஜத்தில் இருந்தார். ஒருமுறை தார்கட்டின் மனைவியும் மகனும் ஷீரடி செல்ல தீர்மானித்தனர். ஆனால் தான் ஷீரடி சென்றால் தனது வீட்டில் சாய்பாபாவின் வழிபாடு சரியாக கவனிக்கப்படாது மற்றும். தனது தந்தை  சாய்பாபாவின் உருவப்படத்தை வழிபடுவதில் அக்கறை காட்ட மாட்டார் என்று மகன் நினைத்தார். ஆனால் மகன் செய்ததைப் போலவே தானும் வழிபாடு செய்வதாக அவரது தந்தை உறுதியளித்தபோது  தாயும் மகனும் ஷீரடிக்குச் சென்றனர்.

மறுநாள் தார்கட் அதிகாலையில் எழுந்து குளித்து பாபாவின் படத்தின் முன் வணங்கி பிரார்த்தனை செய்த பிறகு  கற்கண்டை நைவேத்தியம் செய்தார். பின்னர் அது மதிய உணவு நேரத்தில் பரிமாறப்பட்டது. அன்று மாலையும் மறுநாளும் எல்லாம் நன்றாக சென்றது. தன் வாழ்நாள் முழுவதும் இப்படி பூஜை செய்திராத தார்கட் தன் மகனுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி எல்லாம் திருப்திகரமாக நடை பெறுவதில் மிகுந்த நம்பிக்கை கொண்டார். மூன்றாவது நாள் அவர் வழக்கம்போல் காலை பிரார்த்தனையை முடித்துவிட்டு வேலைக்கு புறப்பட்டார். மதியம் வீட்டுக்கு வந்தபோது, சாப்பாட்டுடன் பரிமாற பிரசாதக் கற்கண்டுகள் இல்லாததைக் கண்டார். அவர் அன்று காலையில் நைவேத்தியம் செய்ய முற்றிலும் மறந்துவிட்டார். தன் மகனுக்கு உண்மைகளைக் கூறி ஒரு கடிதம் எழுதி அதை பாபாவின் காலடியில் வைத்து அவர் செய்த தவறுக்கு மன்னிப்பு கோருமாறு கேட்டுக் கொண்டார்.

இதையும் படியுங்கள்:
அனந்த பத்மநாப சுவாமி கோவில் – அறியாத தகவல்கள்!
Shirdi Srisai Baba

ஏறக்குறைய அதே நேரத்தில், ஷீரடியில் நண்பகல் ஆரத்தி தொடங்கவிருந்தபோது  பாபா திருமதி தார்கட்டிடம்  "அம்மா, நான் பாந்த்ராவில் உள்ள உங்கள் வீட்டில் சாப்பிட ஏதாவது கிடைக்குமா என தேடினேன்; , பாவ் (திரு. தார்கட்) எனக்கு சாப்பிட எதுவும் விட்டு வைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் பார்த்தேன். அதனால் நான் பட்டினியாகத் திரும்பினேன்."என்றார். அந்தப் பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால் அருகில் இருந்த மகன் பாந்த்ராவில் வழிபாட்டில் ஏதோ தவறு இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார். எனவே தான் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்குமாறு பாபாவிடம் வேண்டினார். அதற்கு அனுமதி மறுத்த பாபா  ஷீரடியில் பூஜை செய்ய அனுமதித்தார். பிறகு மகன் தன் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதி  ஷீரடியில் நடந்த அனைத்தையும் குறிப்பிட்டு, வழிபாட்டை அலட்சியப்படுத்த வேண்டாம் என்று தனது தந்தையிடம் மன்றாடினான்.இந்த இரண்டு கடிதங்களும் ஒன்றையொன்று கடந்து மறுநாள் அந்தந்த தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ருமுறை பாபாவின் பெரும் பக்தரான  பாந்த்ராவைச் சேர்ந்த ரகுவீர் பாஸ்கர் புரந்தரே என்பவர் ஷீரடிக்கு தன் குடும்பத்துடன் புறப்பட்டார்.  பாந்த்ராவில் திருமதி புரந்தரேயிடம்  திருமதி தார்கட் இரண்டு கத்தரிக்காய்கள் அளித்து  ஷீரடியில் ஒரு கத்தரிக்காயில் பரீத்தும் (தயிர் பச்சடி), மற்றதில் காச்சர்யாவும் (பொரியல்) செய்து பாபாவுக்கு அவற்றைப் பரிமாறும்படி கூறியிருந்தாள்.  ஷீர்டியை அடைந்த பின்னர் அங்கு  திருமதி புரந்தரே தயார் செய்து அனுப்பிய பரீத்  பாபாவுக்கு மதிய உணவு நேரத்தில் பரிமாறிப்பட்ட போது  பாபா  பரீத் மிகவும் ருசியாக இருப்பதைக் கண்டார்.  எனவே அதை அவர் அனைவருக்கும் பகிர்ந்தளித்துத் தனக்கு இப்போது காச்சர்யா வேண்டுமெனக் கூறினார்.

பரீத்தை யார் கொண்டு வந்தார் என்று விசாரித்ததில் காச்சர்யா பரிமாறும் பணியிலும் திருமதி புரந்தரே ஒப்புவிக்கப்பட்டிருந்தாள் என அறியப்பட்டது.  காச்சர்யாவைப் பற்றிய பாபாவின் வேண்டுதலின் உட்குறிப்பை அனைவரும் புரிந்துகொண்டனர்.  எங்கும் வியாபித்திருக்கும் அவர்தம் ஞானத்தைக் கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் செயலிழந்தனர்.

ரு முறை கோவிந்த் பாலாராம்  என்பவன் ஷீரடிக்கு  புறப்படுவதற்கு முன் திருமதி தார்கட்டைப் பார்க்க வந்தான். அப்போது பாபாவுக்கு ஏதேனும் கொடுத்தனுப்ப வேண்டுமென்று தார்கட் நினைத்தாள்.  வீடு அனைத்திலும் தேடியும் முன்னமே நைவேத்தியமாக அளிக்கப்பட்டிருந்த பேடா ஒன்றைத் தவிர வேறெதையும் அவள் காணவில்லை. எனினும் பாபாவிடம் கொண்டுள்ள பெரும் பக்தியின் காரணமாக அந்தப் பையனிடம் பேடாவைக் கொடுத்து அனுப்பினாள்.  பாபா அதனை ஏற்றுக்கொள்வார் என நம்பினாள்.  

ஷீரடி ஸ்ரீசாயி பாபா
ஷீரடி ஸ்ரீசாயி பாபா

கோவிந்த் ஷீர்டிக்குச் சென்று பாபாவைக் கண்டான்.  ஆனால் பேடாவைத் தன்னுடன் எடுத்துச் செல்ல மறந்துவிட்டான்.  பாபா பொறுத்திருந்தார்.  மறுபடியும் மாலையில் சென்றபோதும் பேடாவைக் கொண்டு செல்லாமல் வெறுங்கையுடன் சென்றான்.  பாபா இதற்குமேல் பொறுக்க இயலாதவராய் "நீ புறப்படும்போது அம்மா உன்னிடம் எனக்காக இனிப்புப் பலகாரம் கொடுக்கவில்லையா?" என்ற குறிப்பான வினாவொன்றை அவனிடம் கேட்டார்.  உடனே பையனுக்கு எல்லாம் நினைவு வந்தது.  பாபாவிடம் தன்னை மன்னிக்க வேண்டிக்கொண்டு பேடாவைக் கொண்டு வந்து பாபாவிடம் கொடுத்தான்.  கையில் அதைப் பெற்றவுடனேயே  பாபா வாயிலிட்டுப் பேராவலுடன் விழுங்கிவிட்டார்.  இவ்வாறாகத் திருமதி தார்கட்டின் பக்தி கண்டுணரப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இப்போதும் உண்மையான பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டபடி ஏதேனும் காணிக்கைகளை சாயி பாபாவுக்கு சமர்ப்பிக்க மறந்துவிட்டால் பாபா அடியவர்களுக்கு அதை நினைவூட்டிப் பெற்றுக் கொள்வதை அனுபவபூர்மாக உணர்கிறோம். 

"மனிதர்கள் எவ்விதம் என்னை நம்புகிறார்களோ அவ்விதமே நான் அவர்களை ஏற்றுக்கொள்கிறேன்"  என்பது பாபாவின் அருள்மொழி.

-ரத்தினா

ஜெய் ஸ்ரீ சாயிராம்

(ஶ்ரீசாயி சத் சரிதத்திலிருந்து)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com