

நவதிருப்பதிகளில் ஒன்றான திருப்பேரை, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.108 திவ்ய தேசங்களில் ஒன்று. நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஆழ்வார் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது.
இறைவன்: மகர நெடுங்குழைக்காதர்
உற்சவர்: நிகரில் முகில் வண்ணன்
இறைவி: குழைக்காது வல்லி, திருப்பேரை நாச்சியார்
தீர்த்தம்: சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம்
தல சிறப்பு
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 88 ஆவது திவ்ய தேசம். நவ திருப்பதிகளில் இது 6வது திருப்பதி. நவகிரகங்களில் இது சுக்கிரன் தலமாகும்.
திருவிழாக்கள்
புரட்டாசி பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடைபெறும். ஜென்மாஷ்டமி, ராமநவமி இரண்டும் இக்கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். வைகாசி மாதத்தில் 9 கருட சேவையும், வைகுண்ட ஏகாதசி ஆகியவையும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தல வரலாறு
இக்கோவில் மிகப்பெரியதாகும். பூதேவி, துர்வாசர் உபதேசித்த அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்து தவம் செய்து தாமிரபரணியில் மூழ்கி எழுந்த பொழுது இரண்டு பெரிய குண்டலங்களை பெற்றாள். பங்குனி பௌர்ணமியில் தாமிரபரணியில் பெற்ற அந்த மீன் வடிவமுள்ள இரண்டு குண்டலங்களை பெருமாளுக்கு சமர்ப்பிக்க பகவான் 'மகர நெடுங்குழைக்காதன்' என்ற திருநாமம் பெற்றார். பூமி தேவி இங்கு தவம் செய்ததால் ஸ்ரீபேரை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பேரை என்றால் காதணி என்று பொருள்.
விலகி நின்ற கருடன்
தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் 'வேத ஒலியும் விழா ஒலியும் பிள்ளைக்குழாம் விளையாட்டு ஒலியும் அறா திருப்பேரையில் சேர்வன் நானே!'என்பது ஆழ்வார் பாசுரம். பிள்ளைகுழாம் விளையாட்டு ஒலி என்பது இத்திருப்பதிக்கு சிறப்பானதொரு விசேஷமாகும். சிறு பிள்ளைகள் திரண்டு விளையாடுவது என்பது எங்குமுண்டு.
இவ்வூரில் அப்பிள்ளைகள் விளையாடுவது கோவில் திருமுன்பு. எம்பெருமான் தானும் அந்த விளையாட்டைக் காண ஆசைப்பட்டதால், "சற்றே விலகி இரும்" என்று கருடனைப் பணித்தார். எனவே, கருடன் சன்னதி பெருமாளுக்கு நேர் எதிரில் இல்லாமல் சற்று இடப்பக்கமாக விலகி இருப்பதை இன்றும் இக்கோவிலில் காணலாம்.
நவ கருட சேவை
வைகாசி மாதம் நடைபெறும் கருட சேவை கோவிலின் சிறப்பான உற்சவமாகும். அன்று நவ திருப்பதி கோயில்களிலும் இருந்து உற்சவமூர்த்திகள் கருட வாகனத்தில் இங்கு வந்து சேர்கின்றனர். நம்மாழ்வாரும் அன்ன வாகனத்தில் எழுந்தருளுவார். அவரது பாசுரம் வாசிக்கப்படும். பின்பு நம்மாழ்வாரின் திருவுருவம் கோவிலை சுற்றி நெல் வயல்கள் வழியாக எடுத்துச் செல்லப்படும்.