

தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்திற்கு அருகே இந்த திருக்கோவில் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. சுற்றிலும் ஏகப்பட்ட வாழை மரங்கள், தென்னை மரங்கள், பலா மரங்கள் என கண்களுக்கு குளுமையாக காட்சியளிக்கிறது
இலஞ்சி குமாரராக காட்சியளிக்கிறார் இறைவன்.
இறைவி பெயர் - இருவாழுக ஈசர்கினியாள்
தல விருட்சம் - மகிழ மரம்
தீர்த்தம் - சித்ரா நதி.
முன்பொரு காலத்தில் இந்த சித்ரா நதியில் கபிலர், காசிபர், துர்வாசர் மூவருக்கும் யார் முதன்மையான கடவுள் என்று சர்ச்சை எழுந்தது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என ஒரு ஒவ்வொருவரும் வாக்குவாதம் செய்து வந்தனர். இதனைக் கண்ட முருகன் இவர்களிடம் தோன்றி, மூவரும் ஒருவர் தான் என்ற தத்துவத்தை உணர்த்தினார். முருகன், வள்ளி தேவசேனா சகிதம் இவர்களுக்கு காட்சியளித்தார்.
ஒரு சமயம் சிவன் - பார்வதி கல்யாணம் நடக்கும்போது வட திசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்தது. இதனை சமன்படுத்துவதற்காக சிவன் அகஸ்தியரை இந்த இடத்திற்கு அனுப்பி வைத்தார். அப்போது குற்றாலம் வைணவர்களின் பிடியில் இருந்ததால் அங்கு இவரை அனுமதிக்கவில்லை. எனவே அகஸ்தியர் சித்ரா நதிக்கரையில் வெண் மணலால் ஒரு சிவலிங்கம் செய்து வழிபட்டார். இன்றும் அந்த வெண் மணலால் செய்யப்பட்ட சிவலிங்கம் இந்த திருக்கோவிலில் உள்ளது.
அகஸ்தியர் வைணவர் தலமாக இருந்த குற்றாலத்தை மீண்டும் சிவ தலமாக மாற்றினார். நீரும் தாமரையும் நிறைந்த இடமாக இருந்ததால் இந்த இடத்திற்கு இலஞ்சி என பெயர் வந்தது. அருணகிரிநாதர் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
14ஆம் நூற்றாண்டில் மாறவர்மன் குலசேகர பாண்டியன் இந்த கோவிலை கட்டினார். அதன் பின்னர் 15ஆம் நூற்றாண்டில் சொக்கம்பட்டி ஜமீன்தார் காளத்தி பாண்டியன் இதனை விரிவுபடுத்தினார்.
இந்த இடம் சிவ தலமாக இருந்தாலும் முருகன், வள்ளி தெய்வானையுடன் இங்கு அருள்பாலிக்கிறார். முருகன் அம்மையப்பருடன் இந்த திருத்தலத்தில் காட்சி அளிப்பதால் இங்கே ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன.
இலஞ்சி என்ற சொல்லுக்கு ஏரி, குளம், பொய்கை மற்றும் மகிழ மரம் என பல பொருள்கள் உண்டு. இலஞ்சி குமாரன் வரதராஜ பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார் முருகன். கருவில் உதித்த அவதாரம் கிடையாது. சிவனின் அங்க அவதாரம் என்பது குறிப்பிடத்தக்கது. தினசரி ஆறு கால பூஜை நடைபெற்று வருகிறது.
இங்கு சித்திரை பிரமோற்சவம், மாசி மாதம், கந்த சஷ்டி, தைப்பூசம் போன்ற திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும்.
தென்காசி செங்கோட்டை மார்க்கத்தில் 5 கிலோமீட்டர் தொலைவிலும், குற்றாலம் செங்கோட்டை மார்க்கத்தில் 2 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. 1951-ம் ஆண்டு இந்த கோவிலில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகத்தில் எண்ணற்ற ஆன்மீக நூல்கள் உள்ளன.
சாண்டோ சின்னப்ப தேவர் இந்த திருக்கோவிலுக்கு சண்முக பிரகாரம் கட்டிக் கொடுத்தார்.
எனவே இந்த ஊரில் மா, பலா, வாழை, கமுகு, தென்னை மரங்கள் சூழ்ந்த பகுதியாக காணப்படுகிறது. மூன்று முனிவர்களின் சந்தேகத்தை தீர்த்த முருகன் இத்திருத்தலத்தில் மும்மூர்த்தியாக அவதரித்த தலமாகும்.
இந்த கோவிலில் கிழக்கு-மேற்கு என இரண்டு வாயில்கள் உள்ளன. கிழக்கு வாயிலில் அழகிய நந்தவனம் உள்ளது. இரு வாழுக நாயகர் சன்னதி உள்ளது. ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் முதல் நாள் முருகன் பிரம்மனாகவும், இரண்டாம் நாள் திருமாலாகவும், மூன்றாம் நாள் சிவனாகவும், நான்காம் நாள் மகேஸ்வரனாகவும், ஐந்தாம் நாள் சதாசிவ மூர்த்தியாகவும் தோன்றி, ஆறாம் நாள் வெள்ளி மயில் ஏறி சூரனை சம்ஹாரம் செய்கிறார். தை மாதம் தெப்பத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும்.
தினசரி காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்து இருக்கும்.
இத்திருக்கோவிலில் சிவன் ‘இரு வாழுக நாதர்' மற்றும் அம்பாள் 'இரு வாழுக ஈசர் கினியாள்’ என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார்கள்.
இந்த திருத்தலத்தில் திருமணம் செய்வது விசேஷமாக கருதப்படுகிறது. எனவே முகூர்த்த நாட்களில் எண்ணற்ற அளவில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.