
சிவபெருமானின் மூன்று மகன்களான விநாயகர், முருகர், ஐயப்பனை பற்றிய பல கதைகளை கேட்டிருப்போம். ஆனால், சிவபெருமானுக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும். அதைப்பற்றி விரிவாக இந்தப்பதிவில் காண்போம்.
சிவபெருமானின் மகள்களுள் முதலாமானவர் அசோக சுந்தரி. இவரைப் பற்றி பத்மபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருமுறை சிவபெருமானும், பார்வதிதேவியும் நந்தவனத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது கேட்ட வரத்தை கொடுக்கும் கர்பகவிரிக்ஷத்தை காண்கிறார்கள். சிவபெருமான் தீமையை அழிக்க கைலாச மலைக்கு அடிக்கடி சென்றுவிடுவார்.
அப்போதெல்லாம் தான் தனிமையில் இருப்பதாகவும். அதனால் தனக்கு ஒரு மகள் வேண்டும் என்றும் பார்வதிதேவி கர்பகவிரிக்ஷத்திடம் வேண்டுகிறார். அந்த வரத்தின் மூலமாக அசோக சுந்தரி பிறக்கிறார். அசோகா என்றால் ‘கவலையை நீக்குபவர்’ சுந்தரி என்றால் ‘அழகு’ என்று பொருளாகும். இவர் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கொடுப்பவர் என்று பொருள். விநாயகரின் தலையை சிவபெருமான் துண்டித்தபோது அசோக சுந்தரியும் அங்கே இருந்திருக்கிறார்.
சிவபெருமானின் செயலைக்கண்டு பயந்து உப்பு மூட்டைக்கு பின்பு சென்று அசோகசுந்தரி மறைந்துக்கொள்கிறார். பிறகு சிவபெருமான் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றார் என்பது கதை. அசோகசுந்தரி நகுசன் என்பவரை மணந்து யயாதி என்ற குழந்தையை பெற்றெடுத்ததாக சொல்லப்படுகிறது. இவர் குஜராத்தில் பெரிய அளவில் அறியப்பட்டு வணங்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவபெருமானின் இரண்டாவது மகள் ஜோதியாவார். ஜோதி என்றால் ஒளி. ஜோதியின் பிறப்பிற்கு இரண்டு கதைகள் சொல்லப்படுகிறது. ஜோதி சிவபெருமானின் ஒளிவட்டத்தில் இருந்து பிறந்தார் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு கதையில், பார்வதி தேவியின் நெற்றியில் இருந்து வெளிப்பட்ட ஜோதியில் இருந்து பிறந்ததாக சொல்லப்படுகிறது.
சிவபெருமானின் மூன்றாவது மகள் வாசுகியாவார். இவர் அனைத்து கோவில்களிலும் வணங்கப்படும் பாம்பு தெய்வமாக உள்ளார். இவர் சிவபெருமானின் மகள் ஆனால் பார்வதிதேவியின் மகள் இல்லை. ஏனெனில், பாம்புகளின் தெய்வமான கத்ரு செதுக்கிய சிலையின் மீது சிவபெருமானின் உயிரணுக்கள் விழுந்ததால், பிறந்தவர் வாசுகி என்று சொல்லப்படுகிறது. வாசுகிக்கு ‘மானஸா’ என்ற பெயரும் இருக்கிறது. இவர்கள் மூவரும்தான் சிவபெருமானின் மகள்கள் ஆவார்கள்.